தூத்துக்குடி மக்களவைத் தொகுதி கடந்த 2009-ம் ஆண்டுதான் முதன்முதலாக உருவாக்கப்பட்டது.
15 ஆண்டுகளுக்கு முன்பு, திருச்செந்தூர், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளில், தூத்துக்குடி மாவட்ட சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
மாவட்ட தலைநகரான தூத்துக்குடியே, அப்போது நெல்லை மக்களவைத் தொகுதியில் தான் இருந்தது.
இந்த குளறுபடிகளுக்கு தீர்வாக, மாவட்டத்தின் அனைத்து சட்டசபைத் தொகுதிகளையும் சேர்த்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
இந்தத் தொகுதியில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இதுவரை சந்தித்த 3 தேர்தல்களில் திமுக 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வென்றுள்ளன.
தொகுதியின் சிறப்பும், தேவைகளும்..
தமிழகத்தின் 2-வது பெரிய துறைமுகம் தூத்துக்குடியில் தான் உள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், இந்த தொகுதியின் தனிச்சிறப்பு.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற விடுதலை வீரர்களை நாட்டுக்கு வழங்கிய தியாகபூமியும் கூட.
சென்னையை அடுத்து மாபெரும் வளர்ச்சி பெற்ற தொழில் நகரம், இது. விவசாயம், மீன்பிடித்தல், உப்புத்தொழில், இந்த தொகுதியின் பிரதான தொழில்கள்.
பிரமாண்ட முன்னேற்றம் கண்டுள்ள தூத்துக்குடியில், நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகள் பலப்பல. ரயில் சேவையில் தூத்துக்குடி மிகவும் பின்தங்கியே உள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத தொழிற்சாலைகள் வரவேண்டும். தூத்துக்குடி நகரில் போக்குவரத்து நெருக்கடியைத் தீர்க்க மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்க வேண்டும் என்பவை பிரதான கோரிக்கைகள்.
கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலைப் பாதுகாக்க வேண்டும், திருச்செந்தூரில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும், தாமிரபரணி பாசனக் குளங்களைத் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் ஆண்டாண்டு காலமாக வலியுறுத்தி வருகிறார்கள்.
வேட்பாளர்கள் யார்? யார்?
திமுக வேட்பாளராக கனிமொழி, இரண்டாவது முறையாக தூத்துக்குடியில் களம் காண்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கையும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி நிற்பதால், தூத்துக்குடி நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது.
அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஆர்.சிவசாமி வேலுமணி நிறுத்தப்பட்டுள்ளார்.
இவரது சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம் என்றாலும், வசிப்பது சென்னையில் தான்.
பாஜக கூட்டணியில் தமாகா சார்பில் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் (2021) அதிமுக கூட்டணியில் தூத்துக்குடியில் நின்றார்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, 42 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி தோல்வி அடைந்தார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் ரொவினா ரூத் ஜேன் என்பவர் போட்டியிடுகிறார். இவர் பல் மருத்துவர்.
கட்சிகள் செல்வாக்கு.
கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில், அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக – பாஜக கூட்டணி சார்பில், கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டார்.
3 லட்சத்து 47 ஆயிரத்து 209 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற்றார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தூத்துக்குடி, திருச்செந்துர், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகள் திமுக வசம் உள்ளன.
கடந்த தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரசும், கோவில்பட்டியில் அதிமுகவும் வெற்றி பெற்றது.
இந்தத் தொகுதியில், அதிமுக அணியில் உள்ள தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு சில இடங்களில் வாக்கு வங்கி உண்டு.
பாஜக அணியில் உள்ள டிடிவி தினகரனின் அமமுக, கடந்த மக்களவைத் தேர்தலில் 76 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளது.
இது தவிர, அந்த அணியில் உள்ள மற்றொரு கட்சியான தமமுகவுக்கும் கணிசமான வாக்குகள் உள்ளன. இவையெல்லாம் தமாகா வேட்பாளருக்கு சாதகமான அம்சங்கள்.
திமுக அணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு திரளான வாக்குகள் உள்ளன. கமல்ஹாசனின் மநீ மையத்துக்கு நகரப்புறங்களில் ஓரளவு ஓட்டுகள் உண்டு.
மாவட்ட அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணனும், கீதா ஜீவனும் கனிமொழியின் வெற்றிக்கு பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள்.
’கனிமொழி வெற்றி முகட்டில் இருக்கிறார் – அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது’ என்கிறார்கள், உடன்பிறப்புகள்.
ஜூன் 4-ம் தேதி வரை பொருத்திருப்போம்.
– பி.எம்.எம்.