டெல்லி செல்வாரா அண்ணாமலை?

கோவை தொகுதி நிலவரம்!

கொதிநிலையில் உள்ள மனிதரையும் குளிரச்செய்யும் ’ஏனுங்க’ எனும் கனிவு வார்த்தைக்குச்  சொந்தக்காரர்கள், கோவை மக்கள்.

வார்த்தையைப் போலவே அந்த நகரத்தின் சீதோஷ்ணநிலையும் இதமானது.

தேர்தல் நேரம் என்பதால், இப்போது அக்னி நட்சத்திர நாட்களைப்போல் தகித்துக் கொண்டிருக்கிறது கோவை.

தென்னிந்தியாவின் ’மான்செஸ்டர்’ என அழைக்கப்படும் கோவை மக்களவைத் தொகுதியில், சிறு, குறு தொழிற்சாலைகள்தான் பிரதான தொழிலாக உள்ளன.

விசைத்தறி, ஜவுளி, மோட்டார் பம்பு மற்றும் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பே இந்த நகரத்தின் ஆணிவேர்.

அண்ணாமலையால் விஐபி அந்தஸ்து:

வரும் 19-ம் தேதி மக்களவைத் தேர்தலைச் சந்திக்கும் கோவை தொகுதியில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால், இந்த தொகுதி, விஐபி அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

அண்ணாமலை தவிர, திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ப.ராஜ்குமார், அதிமுக வேட்பாளராக சிங்கை ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி, களம் இறக்கப்பட்டுள்ளார்.

சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம் பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இதில் வருகின்றன.

தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால், கோவையில் கம்யூனிஸ்டுகள் 7 முறை வெற்றி பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக 2 முறையும், பாஜக 2 முறையும் வென்றுள்ளன. கோவையில், அதிமுக ஒரு முறை வாகை சூடியுள்ளது.

முக்கிய பிரச்சினைகள்

கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், கோவையிலிருந்து துபாய் உள்ளிட்ட முக்கிய வெளி நாடுகளுக்கு விமானங்களை இயக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை கோவையில் தொடங்க வேண்டும், ஜவுளித்தொழில் வளர்ச்சிக்கு, தற்போது காணப்படும் பஞ்சு விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பது இந்தத் தொகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

கட்சிகள் செல்வாக்கு எப்படி?

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  வேட்பாளர் வெற்றி பெற்றாலும், அதனை தொடர்ந்து, 2021-ம்  நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியது.

எனவே ‘கோவை எங்கள் கோட்டை’ என அதிமுகவினர் மார் தட்டுகிறார்கள்.

கன்னியாகுமரிக்கு அடுத்தபடியாக, பாஜகவின் வாக்கு வங்கி, திரளாக உள்ள மாவட்டம், கோவை. 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் ஒரு உதாரணம். அப்போது தனித்து களம் இறங்கிய அதிமுக கோவையில் வென்றது.

இங்கே பெரிய தளங்கள் இல்லாத, பாமக, தேமுதிக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் அப்போது கூட்டணி அமைத்து போட்டியிட்ட  பாஜக, இரண்டாம் இடம் பிடித்தது.

தனித்து போட்டியிட்ட திமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

கமலுக்கு தனி செல்வாக்கு

கோவையில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கணிசமான ஓட்டுகள் உள்ளது.

2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மநீம தனித்து நின்றது. புதுமுகமாக களமிறங்கிய மநீம வேட்பாளர் மகேந்திரன் 1 லட்சத்து 45 ஆயிரத்து 104 வாக்குகளை பெற்று, மற்ற கட்சிகளைத் திகைக்க வைத்தார்.

சரத்குமார் கட்சியுடன் இணைந்து,  கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்தித்தது, மநீம. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில், பாஜகவிடம் தோற்றுப்போனார்.

ஓட்டு விவரம்:

வானதி சீனிவாசன் (பாஜக) – 53, 209

கமல்ஹாசன் (மநீம)                  – 51, 481

திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியைக் கைப்பற்றியது, திமுக.

கோவையில் திரளான வாக்கு வங்கியை வைத்துள்ள மநீம இந்த முறை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

கோவையில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று கட்சி வேட்பாளர்களும் சமபலத்தில் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

கட்சியின் மாநிலத் தலைவர் என்பதால், அண்ணாமலையின் வெற்றியை  மானப்பிரச்சினையாக கருதி பாஜகவினர் உழைத்து வருகிறார்கள்.

கடந்த தேர்தல் முடிவுகள்

2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலில், 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

திமுக கூட்டணி  வேட்பாளராக போட்டியிட்ட  சிபிஎம் வேட்பாளர்  பி.ஆர்.நடராஜன் 5 லட்சத்து 71 ஆயிரத்து 150 வாக்குகளைப் பெற்று வென்றார்.

அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட, பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 92 ஆயிரத்து 007 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

பலத்த போட்டி நிலவும் கோவை தொகுதியில் கடைசி நேர ‘கவனிப்புகள்’ தேர்தல் முடிவை தீர்மானிக்கும் என்கிறார்கள் உள்ளூர் வாக்காளர்கள்.

– பி.எம்.எம்.

You might also like