யார் சொல்வது பா.ஜ.க.வின் கருத்து?

தினமும் ஊடகங்களில் தன்னுடைய பெயர் அடிபடவேண்டும் என்பதற்காக வாய்க்கு வந்த எதை வேண்டுமானாலும் சிலர் பேசுகிறார்கள். சிலர் ஒருமையில் படு கொச்சையாகப் பேசுகிறார்கள்.

எவ்வளவு உயர் பொறுப்பில் இருப்பவர்களையும் படு அநாகரீகமாகப் பேசுகிறார்கள். தெருவில் தனது சொந்த உபயோகத்திற்காகப் பணத்தைக் கொண்டு போகிறவர்களை படு உன்னிப்பாக மோப்பம் பிடித்துப் பலரைக் கதறவும், பரிதவிக்கவும் விடுகிற ஜனநாயக, ரீதியாகத் தேர்தலை நடத்தப் பெரும்பாடு படுகின்ற அதிகாரிகள் எல்லாம் இந்த அநாகரீகப் பேச்சுகள் அவிழ்கிற எல்லைக்கு அப்பால் போய் நின்றுவிடுவார்களோ என்னவோ!

ஒருவேளை அந்தப் பேச்சுகளின் அர்த்தம் தெரியாத அளவுக்கு அவர்கள் மொழி வளத்துடன் இருக்கிறார்களா?

இதற்கிடையில் தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலையின் உளறல்களும் உச்சம் தொட்டிருக்கின்றன.

தி.மு.க.வைப் பற்றிப் பேச வந்தவர் இந்தித் திணிப்பை எதிர்த்துத் தமிழ்நாட்டில் நடந்த போராட்டத்தை ‘’பிய்ந்து போன செருப்பு’’ என்றிருக்கிறார். அதற்காக அவரைப் பலரும் கண்டித்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க தரப்பில் அண்ணாமலையைக் கண்டித்திருக்கிற முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜூ ‘அண்ணாமலையை’ செருப்புடன் ஒப்பிட்டிருக்கிறார்கள். வினை திருப்பி விளைந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் அரசியல் இயக்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு எப்படியோ வந்து சேருகிறவர்களுக்குக் குறைந்தபட்சம் தமிழக அரசியலறிவும் தெரிய வேண்டும். இங்குள்ள மொழி பற்றிய குறைந்தபட்சப் புரிதலாவது வேண்டும்.

அப்படித் தெரிந்திருந்தால் அண்ணாமலை இம்மாதிரியான பேச்சின் மூலம் தன்னுடைய தரத்தைத் தானே கீழிறக்கியிருக்க மாட்டார். அண்ணாமலை என்ன தனிக்கிரகத்திலிருந்து இங்கு வந்து குதித்த ஒருவரா என்ன?

பக்கத்து மாநிலத்தில் ஐ.பி.எஸ் வேலை பார்த்த ஒருவருக்கு மொழிப் போராட்டம் மூலம் தமிழ்நாட்டு அரசியலே மாறிய நடைமுறை வரலாறு கூடத் தெரியாதா?

சென்னை ராஜதானியாக இருந்த பகுதிக்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்ட 1952 ஆம் ஆண்டிலேயே சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரைப் போக்கிக் கொண்ட பின்னணியில் தான் நீங்கள் வேட்பாளராகப் போட்டியிடுகிற மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டப்பட்டது என்பது தெரியுமா, அண்ணாமலை?

இந்தியுடன் சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று ராஜாஜி பேசியதும் 1937-லிலேயே முதலில் எதிர்ப்புக் குரல் வெளிப்பட்டுவிட்டதும், அப்போது ஈரோடு கொல்லம்பாளையத்தில் இந்தி எதிர்ப்புக் கூட்டம் நடந்திருக்கிறது என்பதெல்லாம் அந்தப் பகுதிக்காரர் என்று உரிமை கொண்டாடுகிற உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டாமா?

1938-ல் இந்தித் திணிப்பை எதிர்த்து 1938 ஜனவரி மாதத்தில் தன்னுயிரைக் கொடுத்த நடராசன் துவங்கி நூற்றுக்கணக்கான தமிழர்கள் மொழிப் போராட்டத்திற்காகத் தங்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள்.

பல்லாயிரக் கணக்கானவர்கள் கைதாகிச் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள். காமராஜரைப் போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்ற மாணவர் தலைவரான சீனிவாசனிடம் தோல்வி அடையும் அளவுக்குப் போனதற்குக் காரணம் – மொழிப் போராட்டம் தான்.

அது தான் 1967-ல் தமிழ்நாட்டின் அரசியலை மாற்றி எழுதியது. அதன் பிறகு இன்றுவரை தேசியக் கட்சிகள் இங்கு தலை நிமிர முடியவில்லை.

அன்று தமிழையும், தமிழர்களையும் பற்றிச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் அதிகார வீம்பில் அன்று காங்கிரஸ் செய்த தவறைத் தற்போது பா.ஜ.க. செய்கிறது.

அதன் பிரதிநிதியான நீங்கள் இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த்துடிப்புடன் நடந்த போராட்டத்தை ‘’பிய்ந்த செருப்பு’’ என்று அலட்சியதாகப் பேசுகிறீர்கள்.

மொழியுணர்வுடன் தமிழகத்தில் பல போராட்டங்களை நடத்திய பா.ம.க.வும் அண்ணாமலையின் கருத்து வழி மொழிகிறதா?

ஆனால் ஒன்று –

இப்படிப் பேசி கட்சிகளாகப் பிரிந்திருந்த தமிழர்களை

‘’எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே’’ என்கிற பாரதி தாசனின் வரிப்படி ஒன்று சேர்க்கிறார்கள்.

நிறைவாக – அண்மையில் அடிக்கடி தமிழ்மொழியைப் பேச்சில் உச்சிமுகர்கிற பிரதமர் நரேந்திர மோடி, ’’ஒட்டுமொத்தமாக தமிழகம் பிடிக்கும்; குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும் என்றால் முதலில் மொழி.

என் மனதில் ஒரு பெரும் கோபம் இருக்கிறது. ஒரு பெரும் தமிழ்ப் பாரம்பரியத்திற்கு நாம் அநியாயம் செய்திருக்கிறோம். புகழ் கொண்ட தமிழ்மொழியை நாம் பெருமையுடன் கொண்டாடவே இல்லை’’ (தந்தி தொலைக்காட்சிப் பேட்டி)

இப்படி பிரதமர் மோடி பெருமைப்பட்டு, கொண்டாடவே இல்லை என்று ஆதங்கப்பட்ட தமிழ்மொழிக்காக இங்கு உயிரோட்டமாக நடந்த போராட்டத்தைத் தான் நீங்கள் ‘’பிய்ந்த செருப்புடன்’’ அதே தமிழில் ஒப்பிட்டுப் பேசிப் பெருமைப்படுத்துகிறீர்களா, அண்ணாமலை?

இதில் யார் சொல்வது பா.ஜ.க.வின் அசலான கருத்து, சொல்லுங்களேன்!

தமிழர்கள் குழப்பம் இல்லாமல் புரிந்து கொள்வார்கள் – உங்கள் தமிழுணர்வை!

*

– யூகி

You might also like