காவிரி நதிநீர்ப் பிரச்சனை அது தொடர்பான வெவ்வேறு சிக்கல்கள் ஒருபுறம் இருக்கையில், கர்நாடக அரசு தொடர்ந்து மேகதாது அணைக் கட்டுவதில் அந்தத் திட்டத்தை அமல்படுத்துவதில் தொடர்ந்து முனைப்புக்காட்டி வருகிறது.
பாஜக அரசோ அல்லது காங்கிரஸ் தலைமையிலான அரசோ எந்தக் கட்சி கர்நாடகத்தில ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் மேகதாது அணைத் திட்டத்தை தங்களுடைய அரசியல் இலக்கை நோக்கித் தொடர்ந்து நகர்த்திக் கொண்டே இருக்கின்றன. தற்போதும் அப்படித்தான்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் மேகதாது அணைத் திட்டத்தை அமல்படுத்துவதாக திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது கர்நாடக அரசு.
அதேசமயம் திமுக அரசு மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்துவதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
குறிப்பாக தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சரான துரைமுருகன் அதுகுறித்து பல தடவை தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்.
இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், கர்நாடகத்தில் உள்ள தேசியக் கட்சிகளும் சரி, அங்குள்ள மாநிலக் கட்சிகளும் சரி தொடர்ந்து மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்துவதில் மும்முரம் காட்டி வருகின்றன.
அதேசமயம் தமிழகத்தில் உள்ள திமுக அரசுக்கு இது ஒரு தர்ம சங்கடமான ஒரு சூழ்நிலையையும் உருவாக்கி இருக்கிறது.
காங்கிரசை தனது கூட்டணியில் இணைத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்ற திமுக, காங்கிரஸ் மீதான விமர்சனத்தையும் வெளிப்படையாக முன்வைக்க முடியவில்லை.
கர்நாடகத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு வேறு மாதிரியும், தமிழகத்தில் அதே மேகதாது பிரச்சனையில் காங்கிரஸின் நிலைப்பாடு குழப்பம் தரக்கூடிய ஒன்றாகவும் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது.
எது எப்படியோ தொடர்ந்து தமிழக விவசாயிகள் ஏற்கனவே காவிரி நதிநீர் பிரச்சினையில் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கையில், அதில் மேலும் மேகதாது அணைக் கட்டுவதில் முனைப்புக் காட்டி கர்நாடக அரசு தன்னுடைய தேர்தல் அரசியலுக்கு தமிழக மக்களை இம்சிக்க வேண்டாம்.
– யூகி
மேகதாது அணைத் திட்டம் காவிரி நதிநீர் பிரச்சனை கர்நாடக அரசு பாஜக காங்கிரஸ் தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் நாடாளுமன்றத் தேர்தல் திமுக நாடாளுமன்றத் தொகுதி விவசாயிகள் mekathatu dam Cauvery Water Dispute Case issue bjp congress dmk duraimurugan farmers parliament election mekathatu dam issue