திமுகவின் தொகுதிப் பங்கீட்டுப் பின்னணி!

தமிழ்நாட்டில் மற்ற கட்சிகளிடையே, கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக எந்த ஒரு இறுதி முடிவும் எட்டப்படாத நிலையில், திமுக ஒரு வழியாக தனது தோழமைக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை சுமூகமாக முடித்துள்ளது.

கிட்டத்தட்ட கடந்த தேர்தலில் இருந்த அதே கூட்டணிதான். அந்தத் தேர்தலில் ஐஜேகே கட்சி நிறுவனர் பாரிவேந்தருக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்தலில் அவர் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளார்.

அவருக்கு பதிலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், திமுக கூட்டணியில் புதிதாக இணைந்திருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் தொகுதி பங்கீடு முடிந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் கமலுடனான பேச்சு வார்த்தை இழுத்துக்கொண்டே போனது.

இப்போது, அந்த இரு கட்சிகளும் திமுக அணியில் சேர்ந்துவிட்டன.

காங்கிரசுக்கு புதுச்சேரியுடன் சேர்த்து 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கமல்ஹாசனுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரப்படும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

யார், யாருக்கு எத்தனை இடம்?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன.

திமுக கூட்டணியில், ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் விவரம்:

திமுக —————— 21

காங்கிரஸ் ————-10

இந்திய கம்யூ ——–02

மார்க்சிஸ்ட் கம்யூ – 02

விசிக ——————-02

மதிமுக —————–01

முஸ்லீம் லீக் ——— 01

கொ.ம.தே.க.———-01

திமுக கூட்டணியில், தங்களுக்கு ஒரு இடமாவது கொடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை வேண்டுகோள் வைத்தன.

ஆனால் அந்தக் கட்சிகளுக்கு தொகுதி ஏதும் ஒதுக்கப்படவில்லை.

காங்.தொகுதிகளில் மாற்றம்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி திமுக – காங்கிரஸ் இடையே முதற்கட்ட தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 14 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டது. திமுக சம்மதிக்கவில்லை.

அதன் பின்னர் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

இந்த நிலையில் கடந்தத் தேர்தலில் அளித்த 10 தொகுதிகளை ஏற்றுக்கொள்ளுமாறு டெல்லி மேலிடம் அறிவுறுத்தியதால், தமிழக காங்கிரசார் ஒப்புக்கொண்டனர்.

அண்ணா அறிவாலயம் சென்ற மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக தலைவர் ஸ்டாலினுடன், தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

எனினும் கடந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்த கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, திருவள்ளூர், விருதுநகர் ஆகிய தொகுதிகள், இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படாது என தெரிகிறது.

அதற்கு பதிலாக வேறு இடங்கள் ஒதுக்கப்படும்.

கமலுக்கு மாநிலங்களவை எம்.பி.

திமுக கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள கமல்ஹாசனை,  காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தினர். ஆனால் அவர் தங்கள் கட்சியின் ‘டார்ச் லைட்’ சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக இருந்தார்.

கடைசியில், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஒப்புக்கொண்டு, தேர்தல் பங்கீட்டு ஒப்பந்தத்தில் ஸ்டாலினுடன் இணைந்து கையெழுத்திட்டார்.

தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவும் கமல் சம்மதம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 6 பேர் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் முடிகிறது.

அப்போது நடைபெறும் தேர்தலில், கமல்ஹாசன் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தமிழகத்தில் 36 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் தனியாக போட்டியிட்டது.

எந்த ஒரு இடத்திலும் வெல்லவில்லை என்றாலும், 13 மக்களவைத் தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது.

ஓட்டு சதவீதம் 3.6 %..

திமுக கூட்டணியில் இப்போது இடங்கள் கொடுக்கப்பட்டுள்ள சில கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதத்தை விட, கமல் கட்சி பெற்ற ஓட்டு சதவீதம் அதிகம்.

– பி.எம்.எம்.

You might also like