– முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி
தேர்தல் ஆணையர் அருண் கோயலின் திடீர் ராஜினாமாவால், மக்களவைத் தேர்தலுக்கு தடை இல்லை என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழரான என்.கோபால்சாமி 1966-ம் ஆண்டு பேட்ச்சின் குஜராத் மாநில ஐஏஎஸ் அதிகாரி. அருண் கோயல் ராஜினாமா குறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டியில் என்.கோபால்சாமி கூறியதாவது:
கடந்த 1985-ம் ஆண்டு பேட்ச் பஞ்சாப் மாநில ஐஏஎஸ் அருண் கோயல், தேர்தல் ஆணையர் பதவியை திடீரென ராஜினாமா செய்ததின் பின்னணி என்ன? – இதுதொடர்பாக இதுவரை எந்த தகவலும் வெளியானதாகத் தெரியவில்லை.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக் காலம் வரும் 2025-ல் முடிகிறது. அவருக்கு பின் அப்பதவியை ஏற்று டிசம்பர் 2027-ம் ஆண்டு வரை பணியில் இருக்கும் வாய்ப்பு அருண் கோயலுக்கு உள்ளது.
ஆனால், அவர் தனது ஐஏஎஸ் பதவியை கடந்த 2022 நவம்பர் மாதம் ராஜினாமா செய்து உடனடியாக தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
கடந்த 1950-ல் உருவான தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இதுபோல் ஒரு முக்கிய உயரதிகாரி திடீரென பதவியை ராஜினாமா செய்ய முடியுமா?
– இதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 324-ல் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் மட்டும் உள்ள நிலையில் மக்களவைத் தேர்தல் நடத்துவது சாத்தியமா?
– இச்சட்டத்தின் பிரிவு 324(2) இன்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையில் தேர்தல் சாத்தியமே.
தற்போதுள்ள சட்டப்படி, பல்வேறு நிலைகளில் பொறுப்பாளர்கள் உள்ளனர். மாவட்ட ஆட்சியர்கள், வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர, தேர்தல் பணியை மேற்பார்வையிட வேறு மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
இவர்கள், தேர்தல் அத்துமீறல்கள் குறித்து எடுக்கும் நடவடிக்கையில் சிக்கியவர்கள் அல்லது புகார்கள் குறித்து மட்டுமே தலைமை தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்.
இதற்காக ஆணையருக்கு உதவ தேர்தல் ஆணையத்தில் சில மூத்த அதிகாரிகள் துணை ஆணையர்களாக உள்ளனர். மக்களவைத் தேர்தல் என்பது பெரிய அளவில் நடத்துவதில் ஒருவகையில் சிக்கல்தான்.
அதில், ஆணையத்தின் சட்டதிட்டங்களை மிகச்சரியாக கையாண்டால் தேர்தலை நடத்துவது மிகவும் எளிது.
அப்படி எனில், அருண் கோயல் ராஜினாமா, மக்களவைத் தேர்தல் நடப்பதிலோ, தேதி அறிவிப்பதிலோ தடையாக இருக்காதா?
– நிச்சயமாக எந்தத் தடையும் இருக்க வாய்ப்பில்லை.
இதுபோன்ற நிலை மத்திய தேர்தல் ஆணையத்துக்கு புதிதல்ல. இதற்குமுன், ஒரு தேர்தல் ஆணையர் இல்லாமையால் கடந்த 1999 மற்றும்2009-ம் ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல் 2 ஆணையர்களால் நடத்தப்பட்டது.
அப்போதைய தேர்தல் ஆணையர்களின் பதவிக் காலம் முடிந்ததால் அப்படி நடந்தது.
கடந்த 2009-ல் நான் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த போது, மார்ச் 2-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டேன். முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 20, 2009-ல்முடிந்த நிலையில், எனது பதவிக்காலம் முடிந்தது.
பிறகு நவீன் சாவ்லா தலைமை தேர்தல் ஆணையராக தொடர்ந்தார். அவருடன் அப்போது தேர்தல் ஆணையராக இருந்த எஸ்.ஒய்.குரேஷியுடன் இணைந்து மீதம் இருந்த தேர்தல் கட்டங்களை நடத்தி முடித்தனர்.
இதேபோல், 1999 மக்களவைத் தேர்தலின் கடைசிகட்ட வாக்குப்பதிவுக்கு 3 நாட்களுக்கு முன்பாக ஜிவிஜி.கிருஷ்ணமூர்த்தி ஓய்வு பெற்றார்.
இதனால், தலைமைத் தேர்தல் ஆணையரான எம்.எஸ்.கில், தேர்தல் ஆணையர் லிங்டோ ஆகியோர் தொடர்ந்து தேர்தலை நடத்தி முடித்தனர்.
தலைமைத் தேர்தல் ஆணையருடன் கூடுதலான ஆணையர்கள் நியமிக்கப்படுவதன் பின்னணி என்ன?
– கடந்த 1950-ல் மத்திய தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது முதல்1989 வரை ஓர் ஆணையர் மட்டுமே இருந்தார்.
1989-ல் நியமிக்கப்பட்ட 2 பேர் 3 மாதங்களில் விலக்கப்பட்டு விட்டனர். பிறகு, 1993-ல் பிரதமர்நரசிம்மராவ் ஆட்சியில் கூடுதல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். அந்தநடைமுறை நிரந்தரமாகத் தொடர்கிறது.
தேர்தல் ஆணையத்தில் 3 ஆணையர்கள் என்ற முறை கொண்டுவந்ததற்கு, அப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காரணம் என்று பேசப்பட்டது.
தேர்தல் ஆணையத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு சாத்தியமா?
– எனது அனுபவத்தில் ஒருவர் கூட தலையிடவில்லை. இதர ஆணையர்கள் தலையீடு பற்றி எனக்கு தெரியாது.
அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இந்தியாவில் தற்போது எழுந்துள்ளது போல் சிக்கல்கள் வந்தது உண்டா?
– எந்தப் பிரச்சினையும் இன்றி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.
அந்நாட்டில் தேர்தல் ஆணையமே இல்லை. தேர்தலை அந்நாட்டின் ஒவ்வொரு மாநகராட்சி ஆணையர்களே நடத்தி விடுகிறார்கள்.
அவர்களுக்கு தம் பகுதியில் எந்த வகை வாக்கு முறை என்பதை நிர்ணயிக்கவும் முழு அதிகாரம் உள்ளது.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்படும் மத்திய காவல் படை, மாநிலக் காவல் துறை போன்ற 2 பாதுகாப்புப் பிரிவு இல்லை.
அதேபோல், இங்குள்ளது போல் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் கிடையாது. தேர்தல் பணியில் தன்னார்வலர்களும் சமூக சேவகர்களும் நியமிக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கான ஒரே நிபந்தனை, அவர்கள் எந்த கட்சியிலும் அடிப்படை உறுப்பினராக இருக்கலாம். ஆனால், கட்சி நிர்வாகிகளாக இருக்கக் கூடாது. தேர்தலுக்கு முன்பாக அதற்குரிய முறையான பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்பட்டு விடுகிறது”
– நன்றி: இந்து தமிழ் திசை
#arun_goel #lok_sabha_elections #ex_eci_chief_gopalswami #தேர்தல்_ஆணையர் #மக்களவைத்_தேர்தல் #முன்னாள்_தலைமை_தேர்தல்_ஆணையர்_என்_கோபால்சாமி #N_Gopalaswami #என்_கோபால்சாமி