மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணியை உறுதி செய்வது, கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு போன்ற பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கூட்டணி முடிவாகாத சூழலில் பாஜக தனது முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த 2-ம் தேதி வெளியிட்டது.
பிரதமர் மோடி வாரணாசியில் மீண்டும் போட்டியிடுகிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, காந்திநகர் தொகுதியில் நிற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டுள்ளது. இதில், 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது.
சத்தீஸ்கரின் 6 தொகுதிகள், கர்நாடகாவின் 7 தொகுதிகள், கேரளாவின் 16 தொகுதிகள், தெலங்கானாவின் 4 தொகுதிகள், மேகாலயாவின் 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் லட்சத்தீவு, நாகலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுராவின் தலா ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.
வயநாட்டில் ராகுல்
காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி, மீண்டும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் அங்கம் வகிக்கிறார்கள்.
ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில், இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்கிறார்கள்.
வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளராக ஆனி ராஜா நிறுத்தப்பட்டுள்ளார். இவர் சிபிஐயின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி.
‘வயநாட்டில் சிபிஐ தலைவர் மனைவி நிற்பதால், அங்கே ராகுல் போட்டியிட வேண்டாம்‘ என இடதுசாரிகள் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
ஆனால், அதனை மீறி அங்கு ராகுலை, காங்கிரஸ் மேலிடம் நிறுத்தி இருப்பது, கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு வருத்தம் அளித்துள்ளது.
ராகுல், வயநாடு தவிர உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுவார் என தெரிகிறது.
சிவராஜ்குமார் மனைவி
கர்நாடக மாநிலம் ஷிமோகா தொகுதியில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார், காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் பங்காரப்பாவின் மகளான கீதா, ஆரம்பத்தில் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்தார்.
2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஷிமோகா தொகுதியில் போட்டியிட்டு, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவிடம் தோல்வியடைந்தார்.
பின்னர் காங்கிரசில் இணைந்த கீதாவுக்கு, மீண்டும் ஷிமோகா தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியுள்ளது.
கன்னடத்தில் பிரபலமாக திகழும் சிவராஜ்குமார், ’ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார்.
தமிழக பட்டியல் எப்போது?
காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம் பெறவில்லை.
கூட்டணிக் கட்சியான திமுகவுடன், காங்கிரஸ் கட்சிக்குத் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி நிலை நீடிப்பதே இதற்கு காரணம்.
கடந்த தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தேனி தவிர எஞ்சிய 8 இடங்களில் வென்றது.
இந்த முறை கூடுதல் தொகுதிகளைக் காங்கிரஸ் கேட்பதால், தொகுதி பங்கீட்டில் சிக்கல் எழுந்துள்ளது.
தொகுதிப் பங்கீடு முடிந்ததும், தமிழக வேட்பாளர்களை, காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கும்.
– பி.எம்.எம்.
#மக்களவைத்_தேர்தல் #பாஜக #பிரதமர் #மோடி #வாரணாசி #அமித்ஷா #காந்திநகர் #காங்கிரஸ் #கேரளா #வயநாடு #ராகுல்காந்தி #இந்தியா கூட்டணி #கம்யூனிஸ்ட் #உத்தரப்பிரதேசம் #ரேபரேலி #கீதா_சிவராஜ்குமார் #மதச்சார்பற்ற_ஜனதா_தளம் #திமுக #dmk #bjp #modi #varanashi #amiksha #congress #kerala #wayanad #rahul_gandhi #repareli #geetha #siva_rajkumar #Rahul_contest #Wayanad_constituency #up #parlie_election