இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்குகிறது.
தேர்தலைச் சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 10 நாட்களில், 12 மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளார்.
ஏற்கனவே அவர் சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் பல்லடம், நெல்லை ஆகிய இடங்களில் நடந்த பாஜக பொதுக்கூட்டங்களில் பேசினார்.
இந்த நிலையில் அவர் நேற்று சென்னையில் தேர்தல் பரப்புரை நிகழ்த்தினார்.
விமானம் மூலம் நேற்று காலை சென்னை வந்த பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் கல்பாக்கம் சென்று, விரைவு ஈனுலையை தொடங்கி வைத்தார்.
பின்னர், ஹெலிகாப்டரில் சென்னை திரும்பினார். அங்கிருந்து, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழக பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘தாமரை’ மாநாட்டில் பங்கேற்பதற்காக, விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டார்.
விமான நிலைய சாலை, ஆலந்தூர், கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம் என வழி நெடுகிலும் சாலையோரம் திரண்டிருந்த பொதுமக்களைப் பார்த்து பிரதமர் மோடி கையசைத்தார்.
விமான நிலையம் முதல் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானம் வரை சாலையின் இருபுறமும் பிரதமரை வரவேற்று பேனர்கள், ’கட்-அவுட்’கள் வைக்கப்பட்டிருந்தன. சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று பேசினார்.
அவரது உரை:
’’ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும், தமிழக மக்களால் உற்சாகம் அடைகிறேன். திறமை, வர்த்தகம், பாரம்பரியத்தின் மையமாக சென்னை மாநகரம் திகழ்கிறது.
எனக்கும் தமிழகத்துக்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது. ஆனால், சில ஆண்டுகளாக நான் தமிழகம் வரும்போதெல்லாம், சிலருக்கு வயிற்று வலி ஏற்படுகிறது. பாஜகவுக்கு தமிழக மக்களின் ஆதரவு தொடர்ந்து வலுப்பெற்று வருவதுதான் இதற்கு காரணம்.
வளர்ந்த பாரதத்துடன், வளர்ந்த தமிழகமும் வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
சென்னை போன்ற மாநகரங்கள் வளர்ச்சியடைய மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
சென்னையில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நகர்ப்புற திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை உட்பட தமிழகத்தின் எதிர்காலத்துக்காக மத்திய அரசு தீவிரமாக பணியாற்றுகிறது.
ஆனால், திமுக அரசு, சென்னை மக்களின் தேவைகளை அவர்களது கனவுகளை கண்டுகொள்ளவே இல்லை. புயல் வந்தபோது, அவர்களுக்கு உதவிசெய்வதற்கு பதிலாக துயரங்களையே திமுக அரசு அதிகப்படுத்தியது.
நலத்திட்டங்களுக்கான தொகையை மத்திய அரசு நேரடியாக பயனாளிகளுக்கு அனுப்புகிறது. பல லட்சம் கோடி ரூபாய் நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குக்கு சென்றடைகிறது.
இந்த பணத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதுதான் திமுகவினருக்கு இருக்கும் சிக்கல்.
மோடியின் உத்தரவாதம்
தமிழகத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அளிக்கப்படும் பணத்தை யாரும் பறிக்க மோடி ஒருபோதும் விடமாட்டான். நீங்கள் ஏற்கெனவே எடுத்த பணமும் திரும்ப வசூலிக்கப்பட்டு தமிழக மக்களுக்காகவே செலவழிக்கப்படும். இது மோடி அளிக்கும் உத்தரவாதம்.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட ’இந்தியா’ கூட்டணிக் கட்சிகள், குடும்ப வளர்ச்சிக்கே முன்னுரிமை தருகின்றன. மோடி சொல்வது, தேசத்துக்கே முன்னுரிமை. இதனால்தான் ’இந்தியா’ கூட்டணிக் கட்சியினர் என்னை வசைபாடுகின்றனர்.
ஆதரவற்றவர்கள், ஏழைகள் எல்லோருக்கும் சொந்தமானவன் இந்த மோடி. இந்த பாரதமே என் குடும்பம். அதனால்தான் இன்று தேசம் முழுவதும், ‘‘நான் மோடியின் குடும்பத்தைச் சேர்ந்தவன்’’ என்று ஒரே குரலில் கூறுகிறது.
என் மனதின் வலி
எனது உரையை முடிக்கும் முன்பாக, என் மனதை அரிக்கும் முக்கியமான கவலையைப் பகிர்ந்து கொள்கிறேன்.
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவுடன் போதைப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்து வருவது என் மனதை வலிக்கச் செய்கிறது.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க நினைப்பவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது அபாயத்தின் அறிகுறி. நீங்கள் பாஜகவை பலப்படுத்தினால், தமிழக எதிரிகள் மீதான நடவடிக்கை மேலும் விரைவுபடுத்தப்படும்.’’
மேடையில் தலைவர்கள்
இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, துணைத்தலைவர் கரு.நாகராஜன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்
கூட்டணிக் கட்சித் தலைவர்களான தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், தலைவர் ரவி பச்சமுத்து, தமமுக தலைவர் ஜான் பாண்டியன், காமராஜர் மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், புதியநீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் (வின் தொலைக்காட்சி உரிமையாளர்) தேவநாதன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
– பி.எம்.எம்.
#பிரதமர் #நரேந்திர_மோடி #பாஜக #திமுக #காங்கிரஸ் #இந்தியா_கூட்டணி #கல்பாக்கம் #pm modi #bjp #dmk #congress #india #kalpakkam #சென்னை #தமிழ்நாடு #முதலமைச்சர் #அண்ணாமலை