இசைப்பயிற்சி இளம் பிராயத்திலேயே யேசுதாஸ் இசைப்பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். அவருக்கும் இசை மீது தீராத காதல் இருந்ததால், பத்துமைல் தூரம் பஸ்ஸில் பயணம் செய்து ஒரு இசை ஆசிரியரிடம் சங்கீதம் பயின்றார்.
பேருந்துக் கட்டணத்துக்குக்கூட வசதியில்லாத நிலை. சில பஸ்முதலாளிகள் இலவசபாஸ் கொடுத்து உதவினர். ஓட்டுநர்களும் நடத்துநர்களும் நட்புடன் அவரை இலவசமாக ஏற்றிச் சென்றனர்.
எல்லாம் அவரது இனிமையான குரலில் எழும் இசைத்தேனைப் பருகுவதற்காகத்தான். அவர் பத்தாவது படித்து முடிக்கும் வரை இசைப்பயிற்சியும் தொடர்ந்தது.
கர்நாடக சங்கீதத்தைக் கற்று வந்தாலும் யேசுதாசுக்கு மிகவும் லயிப்பை ஏற்படுத்தியது மெல்லிசைதான். அப்போது பிரபலமாக விளங்கிய இந்தித் திரைப்படப் பாடல்கள் அனைத்தும் அவருக்கு அத்துபடி அதே பாடல்களைப்பாடி ஆசிரியர்களையும் சகமாணவர்களையும் இன்புறுத்தினார் யேசுதாஸ்.
பள்ளிக்குப் போகும் வழியில், தினமும், இளம்வயது யேசுதாஸ் டீக்கடை வாயிலில், ஆர்வமுடன், இசைக்குச் செவிசாய்த்து நின்று விடுவார் அல்லவா? அப்படி அவர் ஒன்றி ரசித்த கீதங்கள் லதாமங்கேஷ்கர், தலத் மகமூது, முகமது ரஃபி, முகேஷ் போன்ற பிரபல பாடகர்கள் பாடியவை.
பள்ளியில் நடைபெறும் விழாமேடைகளில் யேசுதாஸின் கானமழை இல்லாமல் இருக்காது. யேசுதாஸின் இசையைக் கேட்பதற்காக அப்போதே மக்கள் வெள்ளமாக வருவார்கள். இதெல்லாம் அற்புதமான ஒரு கலைஞன் உருவாகி வருவதற்கான ஆரம்ப அறிகுறிகளாக அமைந்தன.
பள்ளியில் இசைப்போட்டிகளும் நடத்துவார்கள். ஒன்றுகூட விடாமல் அனைத்துப் போட்டிகளிலும் முதற்பரிசு யேசுதாசுக்கே கிடைத்து வந்தது.
பூதம் ஐந்து நாதம்கோடி நானும் அந்த வானம்பாடி
பரந்து நிற்கும் அந்த வானம் போன்றது
பிறந்த பின்னர் என்னை வாழவைப்பது
இசைத்தமிழ் நிரந்தரம் எனக்கது வரம் தரும்
என்ற நம்பிக்கையில் நாதமே வாழ்வாய் கீதமே உயிராய்க் கொண்ட யேசுதாஸ் இசையில் வெற்றிபெற்றதில் வியப்பேதுமில்லை.
யேசுதாஸே எல்லா முதற்பரிசுகளையும் தட்டிச் சென்றதால் மற்றவர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போவதைக் கண்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்போடு யேதாஸை அணுகினார்.
‘தாசு நீ இசைக்கென்றே பிறந்தவன். உன்னோடு போட்டி போட யாரும் இல்லை. நீயாகப் பார்த்து விட்டுக் கொடுத்தால்தான் உண்டு.
உன்னை அவ்வாறு செய்யச் சொல்வது தர்மமல்ல.
எனவே மற்றவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக பள்ளியில் நடக்கும் போட்டிகளில் நீ கலந்து கொள்ளாமல் இரு பள்ளிக்கு வெளியே நடைபெறும் இசை நிகழ்ச்சிகளிலும் இசைப்போட்டிகளிலும் கலந்துகொண்டு உன் திறமையைக் காட்டு.
மேலும் ‘குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது’ போல் உன் அபூர்வ ஆற்றலையும் திறமையையும் இப்பள்ளிக்குள்ளேயே அமிழ்ந்து போகுமாறு விட்டு விடாமல் வெளி உலகுக்கும் காட்டவேண்டும்” என்று அன்புக் கட்டளையிட்டார்.
அதன் பிறகு பள்ளியில் நடைபெறும் இசைப் போட்டிகளில் யேசுதாஸ் கலந்து கொள்வதில்லை. உள்ளூரில் நடைபெறும் வேறு நிகழ்ச்சிகளிலும், வெளியூர் போகும்போது அங்கு போட்டிகளிலும் பங்கு கொண்டு பல பரிசுகளை வென்றார் யேசுதாஸ்.
பதினாறு வயது வரை பள்ளிப்படிப்போடு மெல்லிசை நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்ட யேசுதாஸுக்கு கர்நாடக இசையில் நல்ல புலமை இருந்தபோதும் மேடையேறிக் கச்சேரி எதுவும் செய்யவில்லை. காரணம் தந்தையின் அறிவுரைதான்.
யேசுதாஸ் ஒரு பிறவிமேதை. ஆங்கிலத்தில் PRODIGY என்று சொல்லப்படும் இளம்பருவ மேதைத்தன்மை அவரிடம் இருந்தது உண்மை.
அதனால்தான் அவர் ஐந்து வயதிலேயே இசையில் ஈடுபாடும் வல்லமையும் பெற்று விளங்கினார்.
குழந்தை இப்படி அபூர்வ ஆற்றல்பெற்று விளங்கினால் பெற்றோர் அதை வேறுவிதமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அந்தத் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து அதன்மூலம் புகழும் பணமும் சம்பாதிக்க முயலுவார்கள்.
குழந்தைப்பருவ மேதைகளைப் புகழ்வதால் அவர்கள் வீணாகிறார்கள். யேசுதாஸின் தந்தை வீணடிக்கவில்லை. அது எப்படி? என்பதை இப்படி விளக்குகிறார் யேசுதாஸ்” நாம் பார்க்கிறோம்.
கொஞ்சம் புத்திசாலியா இருந்தா ஒவ்வொருத்தரா அதிமேதாவி (prodigy) ன்னு சொல்லி அந்தப் பையன்களை வீணடிக்கிறதைப் பார்க்கிறோம். ஆனால் எங்க அப்பா என்னை வீணடிக்கவில்லை.
பையன் அதிமேதாவி என்று பார்வையாளர்களும், நிகழ்ச்சி அமைப்பாளர்களும் கூறுவார்களே தவிர அப்பா என்னை அப்படிச் சொல்றதில்லை; மேடைக்கச்சேரி செய்ய அனுமதிக்கவும் இல்லை.
அதனால்தான் எனக்கு ஏதோ கடவுள் புண்ணியமாக, ‘இன்றைக்கும் சங்கீதம் என்பது இன்னும் பூரணமாகவில்லை; இன்னும் நிறையப் படிக்கணும்’ என்கிற ஒரு புத்தி மனசிலே இருக்கு.
சின்ன வயசிலேயே பேரும் புகழும் வந்தாச்சு என்றால்; கண்டிப்பாகத் தானாகவே மறைந்து ஏதோ ஆகிப் போயிருக்கும். பகவான் கிருபையால் அவர் அனுமதிக்கவில்லை. அந்தமாதிரி பெரிய மகானான ஒரு தந்தைக்குப் பிறந்ததால் பாக்கியவான் நான்தான்னு சொல்லணும்.”
சின்ன வயசிலேயே நல்ல பாடாந்திரத்துக்கு அப்பா ஏற்பாடு செய்திருந்தபோதும் அந்த வயசிலேயே யேசுதாஸ் கச்சேரி செய்யாததற்கு என்ன காரணம்?
அவரே கூறுகிறார். “என்னோட பன்னிரண்டாவது வயசிலே எனக்கு ஒரு கச்சேரி சான்ஸ் வந்தது. ஆனால், அப்பா அதுக்குத் தீர்மானமா மறுத்துட்டார்.
அப்போ, ‘என்னடா இது நம்மைப்போட்டு இப்படி அமுக்கறாரே!’ன்னு எனக்குக் கோபம்கூட வந்ததுண்டு.
என் பதினஞ்சாவது வயசுல பக்கத்திலிருந்த கோயில் ஒண்ணுலதான் நான் முதல் முதல்ல மேடையேறிப்பாட அப்பா அனுமதிச்சார்.
இப்போ யோசிச்சுப் பார்த்தா இதெல்லாம் ரொம்ப சரியான ஆலோசனைன்னு தோணுது. ஒருவேளை பன்னிரண்டு வயசுலேயே நான் கச்சேரி செய்ய ஆரம்பிச்சிருந்தேன்னா… குழந்தைப் பிராயம்கறதாலேயே எக்கச்சக்கமா பப்ளிசிடி கிடைச்சு. அப்புறம் பதினஞ்சு வயசுக்குள்ளேயே காணாமல் போயிருப்பேன்”.
– நன்றி: ஆர்.காண்டீபன் எழுதிய ‘ஏழிசை நாயகன் யேசுதாஸ்’ நூலிலிருந்து ஒரு பகுதி.