எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடிய பிரதமர் மோடி!

’இந்தியா’ கூட்டணிக் கட்சிகளை இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்ற முடிவோடுதான் பிரதமர் மோடி, செவ்வாய்க்கிழமை டெல்லியில் இருந்து விமானம் ஏறி இருக்க வேண்டும்.

அவர் முதலில் தரை இறங்கிய இடம் கேரள மாநிலம் – திருவனந்தபுரம்.
இடதுசாரிகளும் காங்கிரசும் தான் அங்கே பிரதான கட்சிகள்.

டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘இந்தியா’ அணியில் காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் அங்கம் வகிக்கிறார்கள். எனினும் கேரளாவில் அவர்கள் எலியும், பூனையும்.

கேரளாவில் நிறைய புண்ணிய ஸ்தலங்கள் இருந்தாலும், பாஜகவுக்கு அங்கே வலுவான தளங்கள் கிடையாது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றிபெற முடியவில்லை என சொல்லும்போதே அந்தக் கட்சியின் பலத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

தேர்தல் களத்தில், ‘நாங்களும் கோதாவில் இருக்கிறோம்’ என்று பாஜக சொல்லிக் கொள்ளலாமே தவிர, எம்.பி. சீட்டை எல்லாம் அந்த ‘கடவுளின் தேச’த்தில் எதிர்பார்க்க முடியாது என மோடிக்கு தெளிவாகவே தெரியும்.

இருந்தாலும் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு அமோக வெற்றியை தருமாறு கேட்டுக் கொண்டார்.

அந்த மேடையில் காங்கிரசையும், கம்யூனிஸ்டுகளையும் ஒரு பிடி பிடித்தார், பிரதமர்.

“கேரளாவில் பரம எதிரிகளாக காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் உள்ளனர். ஆனால் கேரளாவுக்கு வெளியே ஒன்றாக அமர்ந்து டீ, பிஸ்கெட், சமோசா சாப்பிடுகிறார்கள் – திருவனந்தபுரத்தில் ஒன்றை பேசுவார்கள் – டெல்லியில் வேறொன்றை பேசுவார்கள்” என கிண்டலடித்தார்.

அங்கிருந்து அவர் நேராக திருப்பூருக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கினார்.

பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் பாஜக சார்பில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்றார்.

மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் மேற்கொண்ட யாத்திரை நிறைவு பெற்றதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் அது.
தமிழகத்தில், மோடியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டமாகவும்  இது அமைந்தது.

பல லட்சம் பேர் திரண்ட இந்தக் கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்திய பிரதமர் மோடி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டினார்.
இரு பெரும் தலைவர்களின் தன்னலமற்ற சேவையை நினைவு கூர்ந்தார்.

பின்னர் நடப்பு அரசியலுக்கு தனது உரையை, மடை மாற்றினார்.
“தமிழகத்தைக் கொள்ளையடிப்பவர்கள், பாஜக வளர்ச்சியை தடுக்க முயற்சிக்கின்றனர். நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள மக்களைத் திசை திருப்புகிறார்கள்.

’இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகள் தமிழகத்தின் வளர்ச்சியை அனுமதிக்க மாட்டார்கள். கொள்ளையடிக்கும் அந்தக் கூட்டணியின் கடையைப் பூட்ட வேண்டும்” என கர்ஜித்தார்.

பின்னர் மதுரை சென்ற பிரதமர் அங்கு நடைபெற்ற தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.

இரவில் மதுரையில் தங்கிய மோடி, நேற்று (புதன்) தூத்துக்குடி சென்றார். அங்கு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து ‘வீரம் விளைந்த பூமி’யான நெல்லைச் சீமைக்கு வருகை தந்தார் பிரதமர் மோடி.

அங்கு நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். “நெல்லையில் அருளாசி தரும் நெல்லையப்பர், காந்திமதி அம்மனை வணங்குகிறேன் -நாட்டுக்கு உழைக்க நல்லாசி வழங்க வேண்டுகிறேன்” என தென்றலாய் ஆரம்பித்த மோடியின் உரை கொஞ்ச நேரத்தில் புயலாய் மாறியது.

“நாட்டின் வளர்ச்சியை விட குடும்பத்தின் வளர்ச்சியே திமுகவுக்கு முக்கியம். தங்களின் பிள்ளைகளின் வளர்ச்சியிலேயே திமுகவினர் குறிப்பாக இருக்கின்றனர்.

திமுக பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கிறது. திமுக இனி தமிழகத்தில் இருக்காது. தமிழக மக்களை சிறுமைப்படுத்தும் திமுக முற்றிலுமாக அகற்றப்படும்” என ஆக்ரோஷம் காட்டினார்.

“நெல்லை மக்களின் ஆசியோடு மீண்டும் பிரதமர் பதவியில் அமர்வேன். பாஜக 400 இடங்களைப் பிடித்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க ஆசி புரிய வேண்டும்” என பொதுமக்களை கேட்டுக்கொண்டு விடை பெற்றார், பிரதமர் மோடி.

இந்தக் கூட்டத்தில் அண்மையில் காங்கிரசில் இருந்து விலகிய எம்.எல்.ஏ. விஜயதாரணியும் சில நிமிடங்கள் பேசினார்.

பல்லடத்தில் மிருதுமான வார்த்தைகளைப் பயன்படுத்திய மோடி, நெல்லையில் திமுக மீது கடினமான விமர்சனங்களை முன் வைத்தது, அரசியல் அரங்கில் பேசுபொருள் ஆகி உள்ளது.

கேரளாவில், பாஜகவுக்கு எதிரான பிரதான கட்சிகளான கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரசை சமமாக வெளுத்து வாங்கிய மோடி, தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரசை மட்டுமே விளாசினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றுள்ள அதிமுக மீது எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை.

தே.ஜ.கூட்டணியில் அதிமுகவை மீண்டும் சேர்ப்பதற்கான முயற்சிகளில் பாஜக டெல்லி தலைவர்கள் ஈடுபட்டுள்ளதால் பிரதமர் மோடி, அதிமுகவை தொடவில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

– பி.எம்.எம்.

You might also like