பார்க்காமலேயே நண்பர்கள் ஆனோம்!

– எழுத்தாளர் தி.ஜானகிராமன் பற்றி கி.ரா. உருக்கம்

வாசகர்களிடமிருந்து வரும் கடிதங்களில் நான்கு பேருடைய கடிதங்களை வாசிக்கவே முடியாது. அதில் ஒன்று தி.ஜாவின் கடிதம்.

அவருடைய கையெழுத்தை நான் புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டேன். எனது நண்பர் சந்துருவிடம் கொடுத்து படிக்கச் சொன்னேன்.

அந்தக் கடிதத்தில், தி.ஜா என்னுடைய எழுத்தைப் படித்ததாகவும் அந்த நடை அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் அதைப் படித்து தான் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகவும் பாராட்டி எழுதியிருந்தார்.

என்னால் தி.ஜாவின் எழுத்துக்களை படிக்காமல் இருக்க முடியாது. அவருடைய படைப்புகள் அந்த அளவிற்கு என்னை ஈர்த்தது. 

ஒருமுறை சென்னைக்கு நான் வந்து தங்கியிருந்ததை தி.ஜாவிற்கு சொல்லும்படி கு.அழகிரிசாமியடம் சொல்லி அனுப்பினேன்.

அப்போது, “நீ இங்கு வந்திருப்பது தி.ஜாவிற்கு தெரியாது. தெரிந்திருந்தால் உன்னைப் பார்க்க ஓடி வந்திருப்பார்.

ஏனென்றால், அவர் உன்னை பார்க்க வேண்டும் என தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார்.

இப்போது அவரை டெல்லிக்கு மாற்றி விட்டார்கள். அவர் நாளை டெல்லி செல்ல வேண்டியிருக்கிறது” என்று கூறினார்.

டெல்லி கிளம்பிய தி.ஜாவும், “கி.ராவைப் பார்க்காமல் செல்வது மிகுந்த வருத்தமளிக்கிறது” என நூறு முறைக்கு மேலாகச் சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார். என்னாலும் அவரை சந்திக்க முடியாமல் போனது.

அதன்பிறகு அவருக்கு நானும் எனக்கு அவருமாக தொடர்ந்து கடிதங்கள் எழுதி அனுப்பிக் கொண்டோம்.

இப்படி ஒருவரையொருவர் நேரில் சந்திக்காமலே நாங்கள் இருவரும் ஒருவர்மீது ஒருவர் நட்பு கொண்டிருந்தோம்.

– நன்றி: அந்திமழை

#தி_ஜா #கி_ரா #கி_ராஜநாராயணன் #தி_ஜானகிராமன் #எழுத்தாளர்_தி_ஜானகிராமன் #எழுத்தாளர்_கி_ராஜநாராயணன் #Tamil_writer_thi_janakiraman #writer_Ki_Ra #Rajanarayanan #thi_ja #Ki_Ra #writer_Ki Ra #writer_thi_ja

You might also like