– பிரதமர் மோடி புகழாரம்
எம்.ஜி.ஆர். கருணையின் அடிப்படையில் ஆட்சி நடத்தியவர் என பிரதமர் நரேந்திர மோடி வானளாவப் புகழ்ந்துள்ளார்.
தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி, ’’அதனால் தான் இன்றளவும் எம்.ஜி.ஆர். கொண்டாடப்படுகிறார்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தமிழகம் முழுவதும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ எனும் பெயரில் யாத்திரை மேற்கொண்டார். அவரது யாத்திரை நேற்றுடன் நிறைவடைந்தது.
இதையொட்டி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் பாஜக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
ஒப்பற்ற தலைவர் எம்.ஜி.ஆர்.
‘வணக்கம் நண்பர்களே’ என்று தமிழில் உரையை தொடங்கிய மோடி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் தனது பேச்சில் நினைவு கூர்ந்தார்.
’’தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த ஊரான இலங்கையின் கண்டிக்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்குள்ள மக்களிடம் பேசினேன்.
நல்லாட்சி நடத்திய எம்ஜிஆர். மக்களுக்குத் தரமான கல்வி, சுகாதாரத்தைக் கொடுத்தார். அவரை இளைஞர்கள், பெண்கள் மிகப்பெரிய அளவில் மதித்தனர்.
இப்போதும் எம்ஜிஆரை ஒப்பற்ற தலைவர் என போற்றி புகழ்கின்றனர். அவர் குடும்ப அரசியல் காரணமாக ஆட்சிக்கு வந்தவர் அல்ல.
குடும்ப அரசியலும் நடத்தவில்லை. திறமையின் அடிப்படையில், கருணையின் அடிப்படையில் ஆட்சி நடத்தினார். அதனால் தான் இன்றளவும் எம்.ஜி.ஆர். கொண்டாடப்படுகிறார்” என நெகிழ்ந்த மோடி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா செய்த சாதனைகளையும் நினைவு கூர்ந்தார்.
”எம்ஜிஆருக்கு பிறகு ‘அம்மா’ ஜெயலலிதாவும் நல்லாட்சியைத் தந்தவர். மக்களின் வளர்ச்சிக்காகவும் பொதுநலனுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் ஜெயலலிதா கொடுத்தார்.
அவருடன் நெருங்கிப் பணியாற்றி உள்ளேன். அவருக்கு மீண்டும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களைப் பட்டியலிட்ட மோடி, தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
’தமிழகத்தில் இந்த ஆண்டு பாஜக பற்றித்தான் அதிகம் பேசப்படுகிறது. தமிழ்நாடு இந்த ஆண்டில் ஒரு புதிய சரித்திரம் படைக்க இருக்கிறது.
அதற்கு முன்னோட்டமாக, வரலாற்று சிறப்புமிக்க ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.
இதன்மூலம் அண்ணாமலை வெறும் யாத்திரையை மட்டுமே நடத்தவில்லை. அனைவரையும் உள்ளடக்கிய, அனைவருக்குமான வளர்ச்சி, நம்பிக்கையை வீடு வீடாக கொண்டுபோய் சேர்த்திருக்கிறார்.
தமிழகத்தில் அனைத்து சகோதர, சகோதரிகளும் இந்த யாத்திரைக்கு ஆதரவு அளித்துள்ளனர். வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஆதரவை கொடுத்துள்ளனர்’ என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
மேடையில் யார்? யார்?
தமிழகத்தில் பாஜக கூட்டணி முழுதாக முடிவாகாத நிலையில், மோடி பங்கேற்ற கூட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமமுக தலைவர் ஜான் பாண்டியன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் எம்.பி, புதிய நீதிக் கட்சி தலைவர் ஏசி சண்முகம் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.
கூட்ட மைதானம் அருகே, நான்கு லட்சம் பேர் சாப்பிடும் அளவுக்கு மூன்று இடங்களில் உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
– பி.எம்.எம்.