ராகுலை எதிர்த்து சிபிஐ வேட்பாளர் போட்டி!

பாஜகவுக்கு  எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ எனும் பெயரில் புதிய அணியை ஏற்படுத்தியுள்ளன.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவது என ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் முடிவு செய்தன.

ஆனால் பல்வேறு மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளிடையே முட்டலும், மோதலும் உள்ளது.

’இந்தியா’ கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசும், ஆம் ஆத்மியும் டெல்லி, குஜராத் உள்ளிட்ட  மாநிலங்களில் தொகுதி உடன்பாடு செய்து கொண்டுள்ளன.

ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் கூட்டணி கிடையாது. காங்கிரசும் ஆம் ஆத்மியும் அந்த மாநிலத்தில் தனித்தனியாக போட்டியிடுகிறார்கள்.

ஆம். ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்பது என இரு கட்சிகளுமே ஒருங்கிணைந்து முடிவு செய்துள்ளன..

நமது பக்கத்து மாநிலமான கேரளாவிலும் இதே போன்றதொரு விநோத சூழலே நிலவுகிறது.

கேரள மாநிலத்தில் மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

கூட்டணிக்குத் தலைமை தாங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 இடங்களும், கேரள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் வயநாடு மற்றும் திருவனந்தபுரம் ஆகியவை குறிப்பிடத்தக்கது.

வயநாடு, கடந்தத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டு வென்ற தொகுதியாகும்.

இந்த முறை வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர், சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆவார்.

’இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் வயநாட்டில் வேட்பாளரை அறிவித்துள்ளதால், இதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதில் ராகுல் காந்திக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல்காந்தி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதேபோல் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதிக்கும், தனது வேட்பாளரை இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் இருக்கிறார்.

இங்கு அவரை எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூத்த தலைவர்  பன்னியன் ரவீந்திரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

தொகுதி மாறும் ராகுல்

காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் தொகுதியில், கம்யூனிஸ்ட் தலைவரின் மனைவியே வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதால், காங்கிரஸ் தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

‘இந்தியா’ கூட்டணியில் சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் ராகுல் வேறு தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் உத்தரபிரதேசத்தில் ஒரு தொகுதி என ராகுல்காந்தி, இரண்டு இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

– பி.எம்.எம்.

You might also like