மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி மே மாதம் முதல் வாரத்தில் நிறைவடையும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சிகள், கூட்டணிப் பேச்சு வார்த்தையை நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடங்கிவிட்டன.
திமுக, தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் முதல் கட்டப் பேச்சுவார்த்தையை முடித்துள்ளன.
எதிர் அணியில் இதுவரை பகிரங்கமாக பேச்சு வார்த்தைகள் தொடங்கப்படாவிட்டாலும், ரகசிய பேரங்கள் பல்வேறு மட்டங்களில் நடந்து வருகின்றன.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை அவரது தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சில நாட்களுக்கு முன்பு சந்தித்துப் பேசினார்.
அதன் தொடர்ச்சியாக ராமதாசின் தூதராக பாமக எம்.எல்.ஏ. ஒருவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடந்த சில தினங்களில் மட்டும் நான்கு முறை சந்தித்துப் பேசியுள்ளார்.
இதில் இணக்கமான முடிவு எடுக்கப்பட்டதால், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை, பாமக எம்.எல்.ஏ.க்கள் சதாசிவம் (மேட்டூர்),
சிவகுமார் (மைலம்) வெங்கடேஸ்வரன் (தர்மபுரி) ஆகிய மூவரும் நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து தொகுதி பங்கீடு குறித்துப் பேசியுள்ளனர்.
பாமக நிபந்தனை
இந்த பேச்சு வார்த்தை குறித்து அதிமுக மற்றும் பாமக வட்டாரங்கள் தெரிவித்த தகவல்கள், இப்போது:
இரட்டை இலக்கத்தில் பாமக தொகுதிகளைக் கேட்டுள்ளது.
8 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவைத் தொகுதியும் தருவதாக அதிமுக உறுதி அளித்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது உறுதி அளித்தபடி, பாமகவுக்கு ஒரு மாநிலங்களவைத் தொகுதி கொடுக்கப்பட்டது.
பாமக தலைவர் அன்புமணி, மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிகிறது.
இதனால் அவர் இந்த முறை தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தர்மபுரி மக்களவைத் தொகுதிக்குள் வரும் 5 சட்டசபை தொகுதிகளையும் அதிமுக – பாமக கூட்டணி கைப்பற்றியது.
எனவே தர்மபுரி மக்களவைத் தொகுதி அன்புமணிக்குப் பாதுகாப்பான தொகுதியாக இருக்கும் என பாமக கருதுகிறது.
தர்மபுரி தவிர கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சிதம்பரம் (தனி) விருதுநகர், திண்டுக்கல் ஆகிய தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது.
பாஜகவுடன் பேச்சு வார்த்தை:
வட மாவட்டங்களில் பாமகவுக்கு கணிசமான வாக்குகள் உள்ளதால், அந்தக் கட்சியுடன் பாஜக மேலிடமும் பேச்சு நடத்தி வருகிறது.
“12 மக்களவைத் தொகுதிகள் – 2 மாநிலங்களவைத் தொகுதிகள் – ஒரு காபினெட் அமைச்சர் பதவி தரப்படும்“ என பாமகவுக்கு வலை விரித்துள்ளது பாஜக.
பாஜகவுடனான கூட்டணி பலன் அளிக்காது என்பதால் அந்தக் கட்சியுடன் உடன்பாடு செய்துகொள்ள, பாமக தயக்கம் காட்டி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், யாருடன் கூட்டணி என்பதை பாமக முடிவு செய்யும் என அந்தக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
– பி.எம்.எம்.