வாசிப்பின் ருசி:
வார இதழ் ஒன்றிற்காக கவிஞர் கலாப்பிரியாவிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும்.
கேள்வி: ஆயிரம் பக்க நாவலை எழுதியவர்களைக் காட்டிலும் சிலவரிக் கவிதைகள் எழுதியவர்கள் பரவலாக அறியப்படுவது படைப்பின் வெற்றியா அல்லது வாசகர்களின் சோம்பலா?
– தயாஜி, மலேசியா
பதில்: திருக்குறள் ஒவ்வொரு குறளுக்காகவும் அறியப்படுகிறது. ஒட்டு மொத்தமாகவும் அறியப்படுகிறது.
ராமாயணம் 10000 தனித்தனிச் செய்யுள்களுக்காகவும் அறியப்படுகிறது. காவியமாகவும் அறியப்படுகிறது.
தாகூர் சொல்லுவார், “தாமரையிலையின் மீதிருக்கும் நீர் முத்து, அது மிதக்கும் பிரம்மாண்டமான ஏரியை விட அழகாக இருக்கிறது….”
ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வசீகரம். வசீகரிக்கிறவர்கள் பரவலாக அறியப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
வாசகனைச் சோம்பல் கொள்ளாமல் வாசிக்க வைப்பதே நல்ல எழுத்து. அது நாவலாகவும் இருக்கலாம் குட்டிக் கவிதையாகவும் இருக்கலாம்.