கடந்த 30 ஆண்டுகளாக தமிழக காங்கிரஸ் தலைவரின் பதவிக்காலம் அதிகபட்சம் 3 ஆண்டுகள் மட்டுமே.
மாநில காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். பல ஆண்டுகளாக மாற்றப்படாமல், கெடு காலத்தையும் தாண்டி அவர் பதவியில் நீடித்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதே அழகிரி மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அவரை மாற்றக்கோரி தமிழக காங்கிரசில் உள்ள ஒவ்வொரு கோஷ்டி தலைவரும், தங்கள் ஆதரவாளர்களுடன் டெல்லிக்குப் படையெடுத்துச் சென்று மேலிடத்தில் கடந்த 2 ஆண்டுகளாக முறையிட்டனர்.
ஆனால் எந்த ஒரு மாற்றமும் நிகழவில்லை.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், ஒருவழியாக கே.எஸ்.அழகிரியை தலைவர் பதவியில் இருந்து தூக்கியடித்துள்ளது கட்சி மேலிடம்.
சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ.வுமான கு.செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தனது மகன் கார்த்தியை அந்த பதவியில் அமர்த்த டெல்லியில் காய் நகர்த்தினார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, தனது மகன் விஷ்ணு பிரசாத்தை தலைவராக்கப் போராடினார்.
ஜோதிமணி உள்ளிட்ட எம்.பி.க்களும் அந்த நாற்காலிக்காக ‘லாபி’ செய்தனர்.
ஆனாலும் செல்வப்பெருந்தகைக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
1952 ஆம் ஆண்டு கக்கன், தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தார். அதன்பின் இளையபெருமாள், 1979 ஆம் ஆண்டு அந்த பொறுப்பை வகித்தார்.
அவர்களுக்கு அடுத்தபடியாக, 45 ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலினத்தைச் சேர்ந்த செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செல்வப்பெருந்தகை, ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியாவில் பணியாற்றிவர்.
அந்த வேலையை உதறிவிட்டு அரசியலுக்கு வந்தார்.
புரட்சி பாரதம், புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளில் இருந்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு அந்தக் கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட செல்வப்பெருந்தகை முன்பு பல சவால்கள் உள்ளன.
உடனடியாக அவர் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்.
2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் 9 தொகுதிகளில் வென்றது. அந்தத் தொகுதிகளின் எண்ணிக்கைக்கு குறையாமல் வரும் தேர்தலில், காங்கிரசை வெற்றிபெற செய்யவேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது.
தமிழக காங்கிரசில் பல கோஷ்டிகள் இருப்பது ஊரறிந்த செய்தி. அத்தனை கோஷ்டிகளையும் அவர் அரவணைத்துச் செல்ல வேண்டும்.
பல கட்சிகள் மாறி காங்கிரஸுக்கு வந்த செல்வப்பெருந்தகைக்கு, மாநிலத் தலைவர் பதவி அளித்திருப்பது, கட்சிக்குள் அதிருப்தி அலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. அதனையும் அவர் சமாளிக்க வேண்டும்.
பதவி பொறுப்பை ஏற்றதும் செல்வப்பெருந்தகை ‘கட்சியில் அணி என்பது, அக்கட்சியை பிடித்திருக்கும் பிணி. அதை ஒழிப்போம்.
அரசியல் என்பது ஒரு கூட்டு முயற்சி. அனுபவம் வாய்ந்த தலைவர்கள் கட்சியில் இருக்கிறார்கள்.
அவர்களுடன் ஆலோசித்து கட்சியை வளர்க்கவும், வலிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சபதம் எடுத்துள்ளார்.
செல்வப்பெருந்தகையின் சபதம் நிறைவேறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
– பி,எம்.எம்.