ராமர் கோவிலும் சிதறிக் கொண்டிருக்கும் இந்தியா கூட்டணியும்!

தாய் தலையங்கம்:

மிக விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

இந்த அறிவிப்புக்கு முன்பே நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்கள் மிக விரைவாக நடக்க ஆரம்பித்துவிட்டன.

கூட்டணிக் கட்சிகளுக்கான பேரங்களும் துவங்கிவிட்டன. இனி தாக்கல் செய்யப்பட இருக்கிற பட்ஜெட்டும் சரி, முக்கிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் சரி, தேர்தலை மையமாக வைத்தே வெளியிடப்படலாம்.

ஏற்கனவே அயோத்தியில் ராமர் கோயில் முடிவு பெறாத நிலையிலும்கூட, அது குறித்த சில சலசலப்புகள் இருந்தபோதிலும்கூட, தேர்தலுக்கு முன்பாக பலரை ஒன்றிணைக்கும் விதத்தில் அதற்கான குடமுழுக்கு விழா நடந்திருக்கிறது.

அதிலும் முக்கியமாக பிரதமரான மோடி என்கின்ற தனி மனிதரை முன்னிறுத்தியே அந்த விழா கட்டமைக்கப்பட்டிருந்தது. பாரதீய ஜனதாவின் அடுத்தக் கட்டத் தலைவர்கள் பலரை அதில் பார்க்க முடியவில்லை.

மதவாத நோக்கமும் அரசியல் நோக்கமும் பின்னிப்பிணைந்த விழாவாகவே அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு எதிர்பார்த்தபடியான ஒரு விளைவை கொடுத்திருக்கிறது.

அதாவது பாஜகவுடன் கடந்த தேர்தலில் கூட்டணி வைத்திருந்த சில கட்சிகள் அதைவிட்டு தற்போது பிரிந்திருந்தாலும்கூட ராமர் கோவில் என்கின்ற விசேஷத்தை முன்னிறுத்துவதில் பாஜக பெருமுனைப்பு காட்டியிருக்கிறது.

இந்த பல மாநிலங்களிலிருந்தும் இனி ராமர் கோவிலைப் பார்க்கப்போவது முக்கிய கடமைகளில் ஒன்றாக மாற்றப்படலாம். மிகவும் முக்கியமான புண்ணியத் தளங்களில் ஒன்றாக அயோத்தி ராமர் கோவிலும் சேர்க்கப்படலாம்.

இந்தளவுக்கு பாஜக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கையில், எதிர்க்கட்சியாக இருக்கிற காங்கிரஸ், என்னதான் பல்வேறு யாத்திரைகள் மேற்கொண்டாலும்கூட தன்னை வலுவானபடி வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைப்பு கூட்டணியான இந்தியா கூட்டணியும் சிறிது சிறிதாக தன்னுடைய பலத்தை இழந்து கொண்டிருக்கிறது.

ஆரம்பத்தில் கெஜ்ரிவால் பின் வாங்கினார். மேற்குவங்கத்து மம்தா பானர்ஜி தன் மாநிலத்திற்குள்ளேயே விலகி நின்றார்.

இதற்கெல்லாம் மேலாக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் இறந்து விடுவேன் என்று பேசிய இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவரின் ஒருவரான பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ஒரே நாளில் காலை ஒரு முகமுமாக மாலை பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து வேறொருமுகமாக ஒன்பதாவது முறையாக பீகார் முதல்வராயிருக்கிறார்.

இந்த விதமான பின் விளைவுகளை இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளே எதிர்பார்க்கவில்லை.

தென்னிந்தியாவில் உள்ள தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநில கட்சிகளிடம் இருக்கின்ற ஒரு குறைந்தபட்ச ஒற்றுமைகூட இந்தியா கூட்டணியில் இல்லை.

அதேசமயம் மத ரீதியாகவும் ஆன்மீக உணர்வுகளை எழுப்பி அதை தேசிய மயமாக்குவதிலும் துடிப்பு கொண்ட கட்சியாக பாரதிய ஜனதா மோடி தலைமையில் உருமாறிக் கொண்டிருக்கிறது.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், தற்போதைய சூழ்நிலையில் யாருக்கு வாக்களிக்கும் மனநிலையில் மக்கள் இருப்பார்கள்.

பாஜக கூட்டணிக்கா? அல்லது தேர்தல் நடப்பதற்கு முன்பே சிதறி கிடக்கின்ற இந்தியா கூட்டணிக்கா?

தற்போதைய நிலையில் எதிர்க்கட்சிகளின் போதிய பலமின்மையே பாஜகவின் முதன்மையான பலமாக இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.

You might also like