உதயநிதிக்கு எப்படி வாய்ப்பு அமையப் போகிறது? பார்க்கலாம்!

‘உதயநிதிக்கு முடிசூட்டும் விழாவாக சேலத்தில் நடந்த திமுக இளைஞர் அணி மாநாடு அமைந்திருந்தது’ என ஆங்கில இதழ்கள் வர்ணித்துள்ள நிலையில், அந்த மாநாடு குறித்த ஓர் அலசல்.

திமுகவில் இளைஞர் அணி என்ற அமைப்பு 1980 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
கலைஞர் கருணாநிதி, திமுக தலைவராக இருந்தபோது உருவாக்கப்பட்ட இந்த அணியின் முதல் செயலாளராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.

திமுக இளைஞர் அணியின் முதல் மாநாடு ’வீரம் வெளைஞ்ச மண்னான’ நெல்லையில் 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

மாநாட்டை சிறப்பாக நடத்தியற்காக ஸ்டாலினுக்கு, அடுத்த இரண்டாண்டுகளில் துணை முதலமைச்சர் நாற்காலியை பரிசாக வழங்கினார் முதலமைச்சர் கருணாநிதி.

இந்த வரலாற்றுப் பின்னணியில் திமுக இளைஞர் அணியின் இரண்டாம் மாநாடு சேலத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடந்து முடிந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு திமுக இளைஞர் அணியின் செயலாளராக நியமிக்கப்பட்டார், உதயநிதி. அவர் பொறுப்புக்கு வந்த பிறகு நடக்கும் மாநாடு இது.

சேலம் நகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெத்தநாயக்கன் பாளையத்தில் மாநாடு நடந்துள்ளது.

மாநாடு நடத்த சேலத்தை தேர்வு செய்தது ஏன்?

சேலம் எப்போதுமே அதிமுகவின் கோட்டை.

கடந்த சட்டசபைத் தேர்தலில் ஒரு தொகுதி தவிர அனைத்து இடங்களிலும் அதிமுக வாகை சூடிய மாவட்டம் சேலம்.

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம், சேலம்.

இந்த சூழலில்தான், சேலத்தில் தனது கட்சியின் பலத்தை காட்ட வேண்டும் என்பதற்காக அங்கே மாநாடு நடத்த திட்டமிட்டார் ஸ்டாலின்.

மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக 100 அடி உயர கொடிக் கம்பத்தில் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கட்சிக் கொடியேற்றினார்.

தொடர்ந்து, மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் சிலைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின், முத்தாய்ப்பாக மூத்த நிர்வாகிகளின் பரப்புரையாற்றினர்.

பெரும்பாலானோர், ’உதயநிதியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்’ என வலியுறுத்தினர்.

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி பேசும்போது, ’கலைஞரை நாங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டோம். ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொண்டோம். உதயநிதியை துணை முதலமைச்சராக நியமிக்க வேண்டும். நாங்கள் ஏற்றுக்கொள்வோம்’ என்றார்.

லியோனியின் கருத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும் வழிமொழிந்தார்.

’தலைவர் கருணாநிதி இந்த இயக்கத்தை 50 ஆண்டுகாலம் வழி நடத்தி சென்றார். இப்போது நான் உரிமையோடு கேட்கிறேன். அடுத்த நூற்றாண்டுக்கு, இந்த இயக்கத்தை வழி நடத்தி செல்ல உதயநிதிக்கு தகுதி உண்டு’ என்று தனது விருப்பத்தை பதிவு செய்தார்.

‘மக்களவைத் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்’ என உதயநிதி கோரிக்கை வைத்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது, “தெற்கில் விடியல் பிறந்துவிட்ட நிலையில், வடக்கிலும் விடியல் பிறக்கும்- உதயநிதியின் கட்சி, சமூகப் பணிகள் மகிழ்ச்சியளிக்கின்றன.

இளைஞரணி என் தாய் வீடு. இளைஞரணியால் உருவாக்கப்பட்டவர்கள் எம்.எல்.ஏ, எம்.பி., மாவட்டச் செயலாளராக உயர்ந்துள்ளனர்.

எனவே, இளைஞரணியினர் தமிழினம் மற்றும் திராவிட இயக்கத்தின் வரலாற்றையும், திமுகவின் திட்டங்களையும், தமிழினத்தை அழிக்க முயலும் சக்திகளையும் அறிந்துகொள்ள வேண்டும்” என குறிப்பிட்டார்.

உதயநிதி மகன் இன்பநிதி, திமுக இளைஞர் அணியின் சின்னம் பொறித்த ‘டி-ஷர்ட் ’ அணிந்து மாநாட்டில் கலந்து கொண்டார்.

அப்பாவும், தாத்தாவும் பேசும்போது, கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

திமுக இளைஞர் அணி மாநாடு குறித்து ஊடகங்கள் சிலாகித்து கொண்டிருக்க எடப்பாடி பழனிசாமியும், மாநாடு பற்றி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

“திமுக இளைஞர் அணி மாநாட்டுக்கு இருமுறை தேதி குறித்தும் நடத்த முடியாமல் மூன்றாவது முறை தேதி குறித்து நடத்தியுள்ளனர். காரணம், சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை.

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலும், அவர்கள் மறைவுக்குப் பிறகும் இரு பெரும் தலைவர்களின் கோட்டையாக சேலம் திகழ்கிறது.

இந்தக் கோட்டைக்குள் யாராலும் நுழைய முடியாது” என்று பொங்கினார் எடப்பாடி பழனிசாமி.

முதல் மாநாடு நடத்திய ஸ்டாலினுக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் துணை முதலைமைச்சர் பதவி கிடைத்தது நினைவுகூரத்தக்கது.

– பி.எம்.எம்.

You might also like