சென்னை புத்தகக் காட்சியை அரசே நடத்துமா?

– வாசுகி

சென்னை புத்தகக் காட்சியில் நேர்மறையாக சொல்வதற்கு(ம்) ஒருசில விஷயங்கள் உள்ளன.

கடந்த ஆண்டு சாலையோரம் கடை விரித்த சால்ட் பதிப்பகத்திற்கு இந்த ஆண்டு ஒரு அரங்கைக் கொடுத்திருக்கிறார்கள்! (இவற்றைப் போல இன்னும் ஓரிரு நேர்மறை அம்சங்கள் இருக்கலாம்).

ஆனால்…

15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அரங்குக்கு ஐந்தாயிரம் ரூபாய் கட்டணம் இருந்ததாக நினைவு!

எம்.எஸ்.உதயமூர்த்தியின் மொத்த நூல்களையும் வானதி பதிப்பக குடும்பத்தின் திருமகள் நிலையத்திலிருந்து மொத்தமாக வாங்கிதான் நாங்கள் விற்பனை செய்தோம்!

அப்போதே சில முணுமுணுப்புகள் இருந்தாலும் கூட தற்போதைய அளவுக்கு மோசமான ஒரு சூழலை இதற்கு முன் நான் எப்போதுமே பார்த்ததில்லை!

தேசிய அளவில் டெல்லியில் நடைபெறும் புத்தகக் காட்சியில் உள்ளது போல குழந்தைகளுக்கான அரங்குகளை ஒரே இடத்தில் தனி வரிசையில் அமைக்காததால், முதல் அரங்கில் இருந்து 900ஆவது அரங்குவரை வழக்கம்போலவே அலைந்து தேட வேண்டி இருந்தது!

அரங்குகளை தேடுவதிலேயே சோர்வாகிவிட்டதால், புத்தகங்களை தேர்வு செய்ய முடியாமல் குழந்தைகள் சுருண்டுபோனார்கள்!

வழக்கமாக நான்கு அரங்குகளைக் கொண்டிருந்த ஸீரோ டிகிரி பதிப்பகத்தை தேடித்தேடி கடைசியாக ஒரு பொந்துக்குள் இருந்ததைப் பார்த்தேன்!

இப்போது நான்கு அரங்குகளுக்கு மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாம்! (ஒரு நல்ல பதிப்பகமோ விற்பனையகமோ அவ்வளவு பெரிய தொகையை எப்படிக் கட்டும்?)

குழந்தைகளுக்கான அரங்குகளைத் தேடி நான் அலைந்தபோது நான்கு அரங்குகளைக் கொண்டிருந்த ஒரு மத அரங்கத்தைச் சேர்ந்த பெண்மணிகள், “மேடம் வாங்க உள்ள வந்து பாருங்க” என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக வலியுறுத்தினார்கள்!

ஒரு வெளியூர் பதிப்பாளர் தோழியின் முகம் வாடி இருந்ததைக் கண்டு அக்கறையோடு விசாரித்தேன்…

“நேற்று அரங்கில் மழை நீர் ஒழுகியதில் குழந்தை நனைந்துவிட்டான். அதனால் அவனுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. குழந்தையை நண்பர்கள் வீட்டில் (மருந்து கொடுத்து) தூங்கவைத்துவிட்டு வந்தேன். அதே கவலையாக இருக்கிறது” என்றபோது அதிர்ந்துபோனேன்!

கடந்த ஆண்டு மலிவு விலையில் கிடைப்பதாக நினைத்து பயன்படுத்திய புத்தகங்களை ஒரே அரங்கில் சுமார் 10,000 ரூபாய்க்கு எனது மகனுக்கு வாங்கிக் கொடுத்தேன்.

பின்னர் அதில் ஒரு புத்தகத்தின் விலையை ஆன்லைனில் பரிசோதித்த போது புதிய புத்தகமே அதைவிடக் குறைந்த விலையில் கிடைப்பது தெரிந்தது.

தள்ளுவண்டியில் உள்ளே வந்து விற்ற தேனீரையும் நொறுக்குத் தீனிகளையும் விலையைக் கேட்டதுமே தலையைச் சுற்றியது!

வெளியில் பத்து ரூபாய்க்கு நான்கைந்து என விற்கும் இத்துனூண்டு சமோசா – மூன்றை ஒரு கவரில் போட்டு இருபது ரூபாய் என்றார்கள்!

எல்லாம் முடிந்து கடைசியாக உணவகத்துக்குச் சென்றால் இரண்டு போண்டா அறுபது ரூபாய் என்றார்கள்! (அதுவே முதல் நாள் 50 ரூபாய்க்குதான் விற்கப்பட்டதாம்)

தோசை மட்டுமே இருக்கிறது என்றார்கள். அதை வாங்கினால் சட்னிகள் கெட்டுப் போயிருந்தன.

ஆனியன் ஊத்தப்பம் வாங்கி உண்டபோது வெங்காயத்துக்கு அடியில் தோசை மாவு வேகாமல் வெள்ளை நிறத்தில் அப்படியே இருந்தது!

உறுப்பினர் அல்லாதவர்களுக்கு நான்கு அரங்குகளை அமைக்க மூன்றரை லட்சம் ரூபாய் வசூலிப்பவர்கள்… ஒரு தகரக் கொட்டகையை ஒழுகாத அளவில் கூட அமைக்க முடியாமல் அந்தப் பணத்தையெல்லாம் என்னதான் செய்கிறார்கள்?!

திரைப்படத்தில் பின்னணிப் பேசுபவர்களுக்கு ஒரு சங்கம் இருக்கிறதாம்! அதில் உறுப்பினராகாத எவரும் எந்தப் படத்திலும் ஒரு வார்த்தைகூடப் பேசமுடியாதாம்!

அப்படிப் பேசினால் அந்தத் திரைப்படத்தையே வெளியிட முடியாமல் செய்துவிடுவார்களாம்! சங்கத்தில் உறுப்பினராவதற்கு லட்சக்கணக்கில் பணம் செலுத்த வேண்டுமாம்!

“வசதி இல்லாத திறமையானவர்களுக்கு எப்படி வாய்ப்புக் கிடைக்கும்?” என்றால், “புதிதாக யாரும் வரவேண்டாம் என்பதற்காகவே அப்படி வைத்திருக்கிறார்கள்” என்பதாகக் கூறுகிறார்கள்!

சங்கங்களும் கூட்டமைப்புகளும் உறுப்பினர்களின் நலன் சார்ந்து இயங்குவதற்காக உருவாக்கப்பட்டவை!

ஆனால், வேலியே பயிரை மேய்ந்த கதையாக பத்திரிகையாளர்கள் சங்கம் முதல், பதிப்பாளர்கள் & புத்தக விற்பனையாளர்கள் கூட்டமைப்பு வரை எல்லாமே கேலிக்கூத்தாகிக் கொண்டுவருகின்றன!

சகல அதிகாரங்களும் நிறைந்த அரசால் கூட இந்த அவலங்களைக் களைய முடியாது என்றால், அந்த அமைப்புகளுக்கு அரசு எதற்காக மக்கள் வரிப்பணத்திலிருந்து பெரும் தொகையை நிதியுதவி செய்யவேண்டும்?

பபாசிக்குக் கொடுக்கும் 75 லட்ச ரூபாயை வைத்து, பதிப்பாளர்களிடமும் புத்தக விற்பனையாளர்களிடமும் நியாயமான தொகையை வசூலித்து, வாங்கும் காசுக்கு ஏற்ப – பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்தி, அனைவரும் ஆவலோடு ஆண்டு முழுவதும் காத்திருக்கும் – பிரம்மாண்ட அறிவுத் திருவிழாவை அரசே நடத்த வேண்டும்!

அதுவே இந்த அவலங்களுக்கு சரியான தீர்வாக அமையும்!

நன்றி: முகநூல் பதிவு

You might also like