பழம்பெரும் நடிகர்களில் சிலரின் மேனரிசங்கள் என்றும் மறக்கமுடியாதவை. அந்த வகையில் வி.கே.ராமசாமி என்றால் அவரது கரகரப்பான குரலுடன் கூடிய பேசும் தோரணை, பாலையா அவர்களின் உடல் அசைவுகள், நாகேஷின் பம்பரமாய் சுழலும் வளையும் காமெடியான நடிப்பு, அப்படி டி.ஆர்.ராமச்சந்திரன் என்றால் கண்களை விரித்து பார்ப்பது எனலாம்.
யார் இந்த டி.ஆர். ராமச்சந்திரன்?: திருக்காம்புலியூர் ரங்க ராமச்சந்திரன் என்னும் பெயரின் சுருக்கமே டி.ஆர். ராமச்சந்திரன் ஆனது. டி.ஆர். ராமச்சந்திரன் தற்போதைய கரூர் மாவட்டத்தில் இருக்கும் திருக்காம்புலியூரை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தந்தை ஒரு விவசாயி. ஆம். விவசாயி ரங்காராவ் மற்றும் ரங்கம்மாள் ஆகிய தம்பதிக்கு ஜனவரி 9, 1917ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். சிறுவயதில், ராமச்சந்திரனின் தாய் மரித்துவிட, பாட்டியின் ஊர் குளித்தலைக்குப் புலம்பெயர்ந்து அங்கிருந்து பள்ளிக்கூடத்துக்குப் போனார்.
பின், தனது 30-வது வயதில் 1947-ம் ஆண்டு சீதா என்பவரை மணந்துகொண்டார். இத்தம்பதியினருக்கு ஜெயந்தி, வசந்தி என்ற இரு குழந்தைகள் இறந்தனர். வயது முதிர்வு ஆன காலகட்டத்தில், தங்கள் மகள்களுடன் அமெரிக்காவில் சென்று தங்கியிருந்த டி.ஆர். ராமச்சந்திரன் 1990-ம் ஆண்டில் மறைந்தார்.
கை கொடுத்த நடிப்புத்துறை: பள்ளியில் படிக்கையில் டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு படிப்பில் ஆர்வமில்லாமல் நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டது. அதனால் 1936-ம் ஆண்டு பாலமோகன ரஞ்சித சங்கீத சபா என்னும் நாடகக் கம்பெனியில் சேர்ந்த டி.ஆர். ராமச்சந்திரன் அங்கு சிறிது காலம் பணியாற்றிவிட்டு, எஸ்.வி.வெங்கட்ராமன் என்பவர், புதிதாகத் தொடங்கிய நாடகக் கம்பெனியில் சேர்ந்தார்.
பின், கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் கே.ஜி.எஃப் எனப்படும் கோலார் தங்க வயல் பகுதியில் தங்கியிருந்து நாடகங்கள் போட்டார். அதில் நஷ்டம் ஏற்பட வெங்கட்ராமன் தன் முயற்சியால், தனது நாடகக் கம்பெனி நடிகர்களை ஏ.வி.மெய்யப்ப செட்டியாரிடம் பேசி, நந்தகுமார் என்னும் திரைப்படத்தில் நடிக்க பரிந்துரை செய்தார். அப்படி டி.ஆர்.ராமச்சந்திரன் முதன்முதலாக நடித்த திரைப்படம், நந்த குமார்.
பின் 1940-ம் ஆண்டு ’வாயாடி’ என்னும் படத்தில் டி.ஆர். ராமச்சந்திரன் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். பின் அடுத்த ஆண்டு வெளியான ‘சபாபதி’ என்னும் முழுக்க முழுக்க காமெடி நிறைந்த படத்தில் கதாநாயகனாக நடித்தார். அப்படம் அதிரிபுதிரி வெற்றி பெற்று, டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு நல்லப் பெயரைப் பெற்றுத்தந்தது.
அதனைத்தொடர்ந்து பிரகதி பிக்சர்ஸ் என்னும் படத்தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை மாற்றி, ஏ.வி.எம். ஸ்டுடியோ என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார், ஏ.வி.மெய்யப்பச் செட்டியார். பின் ’நாம் இருவர்’ என்னும் படத்தை இயக்கி ஏவிஎம் பேனரில் முதன்முதலாக தயாரித்தார், ஏ.வி.மெய்யப்பச் செட்டியார்.
அப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார், டி.ஆர். ராமச்சந்திரன். ஒரே நேரத்தில் ஒரு படத்தில் கதாநாயகன், இன்னொரு படத்தில் இரண்டாவது கதாநாயகன், சில படங்களில் சப்போர்ட்டிவ் ரோல் என கலந்து கட்டி நடித்திருக்கிறார். குறிப்பாக, கண்களை உருட்டி பார்த்து வியப்படையப் பேசும் மேனரிஸம் டி.ஆர்.ராமச்சந்திரனின் நடிப்புக்கு அடையாளம் ஆனது.
டி.ஆர். ராமச்சந்திரன் நடித்த முக்கியப் படங்கள்: அடுத்தடுத்து தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் நடித்து வந்த டி.ஆர். ராமச்சந்திரன், வாழ்க்கை, சிங்காரி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, தங்கமலை ரகசியம், பத்தரைமாத்து தங்கம், பாக்தாத் திருடன், கடன்வாங்கி கல்யாணம், விடிவெள்ளி, அன்பே வா, தில்லானா மோகனாம்பாள், திருமால் பெருமை ஆகிய குறிப்பிடத்தக்க படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
– நன்றி முகநூல் பதிவு