சக்சஸ் ஸ்டோரி: தொழிலில் ஜெயித்த எலக்ட்ரீசியன்!
காரைக்குடியைச் சேர்ந்தவர் முத்துவேல். பதினைந்து ஆண்டுகளாக எலக்ட்ரிக்கல் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்.
தற்போது ஆட்டோ பார்ட்ஸ் தொழிலில் ஈடுபட்டுவரும் அவர், வித்தியாசமான முறையில் வாட்டர்கேனில் இன்குபேட்டர் செய்து பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
யூ டியூப் வாத்தியார்:
நம்மிடம் பேசிய முத்துவேல், “யூ டியூப் பார்க்கும்போது இன்குபேட்டர் தயாரிப்பில் ஆர்வம் வந்தது. ஏற்பட்டது. நாமும் செய்து பார்க்கலாமே என்று தோன்றியது. எல்லோரையும்போல நானும் செய்துபார்த்தேன்.
திடீரென ஒரு யோசனை. எல்லோரையும் போல நாம் செய்யக்கூடாது, வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்று திட்டமிட்டு வாட்டர் கேனை கையில் எடுத்தேன். முதலில் 16 முட்டை அடைகாக்கும் இன்குபேட்டரை உருவாக்கினேன்.
புதிய இன்குபேட்டர்:
இப்போது 200 முட்டை கொள்ளளவு கொண்ட இன்குபேட்டரை தயாரிக்கும் முயற்சியில் இருக்கிறேன். என் நண்பர் கோழிப் பண்ணை வைத்திருக்கிறார்.
அவர் வைத்திருக்கும் இன்குபேட்டர் சரியாக வேலை செய்யவில்லை. பிறகு நான் யூ டியூப் பார்த்து விவரங்களைச் சொல்வேன்.
இப்படி ஒவ்வொரு விஷயமாகச் சொல்லும்போது, இன்குபேட்டர் பற்றிய முழு விவரங்களும் தெரிந்துகொண்டேன். தொடர்ந்து அதைத் தயாரிப்பதில் ஆர்வமும் வந்துவிட்டது.
வேலைக்குச் சென்று வீட்டுக்கு வந்த பிறகு இன்குபேட்டர் தயாரிப்பில் ஈடுபடுவேன். எலக்ட்ரீசியன் வேலையிலிருந்து இன்குபேட்டர் தயாரிப்புக்கு முழுமையாக நகர்ந்திருக்கிறேன்.
அடுத்தகட்டமாக வணிகரீதியாக 200, 300, 500, 1000 முட்டைகளை அடைகாக்கும் இன்குபேட்டர்களை தயாரிக்கவுள்ளேன். வாட்டர்கேன் இன்குபேட்டர் எப்படி புதுமையாக இருந்ததோ, அதைப் போலவே மற்றவற்றையும் வித்தியாசமாகச் செய்வேன்.
எதிர்காலத்தில் நம்பிக்கை:
பொதுவாக இன்குபேட்டர்களை திறந்துதான் முட்டைகளைப் பார்க்கமுடியும். என்னுடைய இன்குபேட்டரில் வெளியே இருந்தே பார்க்கமுடியும்.
நான் ஏழு முட்டைகள் வைத்து பரிசோதனை செய்தேன். அதில் ஏழும் குஞ்சுகளாக மாறின. எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
வாட்டர்கேன் இன்குபேட்டரில் அதிக முட்டைகள் வைக்கமுடியாது. அதை கவன ஈர்ப்புக்காகச் செய்தேன்.
ஆட்டோ பார்ட்ஸ் தொழிலில் கிடைக்கும் ஓய்வு நேரத்தை இன்குபேட்டர் தயாரிப்புக்குப் பயன்படுத்திக்கொள்கிறேன்.
உலகிலேயே யாரும் செய்யாத இன்குபேட்டர்களை தயாரிக்கும் எண்ணமும் உள்ளது. என் இன்குபேட்டர்களுக்கு பண்ணையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார் முத்துவேல்.
எஸ். சங்கமி