சிறைக்குப் பிறகான புதுவை சந்திப்பு!

– ரெங்கையா முருகன்

புதுவை ஈஸ்வரன் தர்மராஜா கோவில் தெருவில் விளக்கெண்ணெய் செட்டி வீட்டில் பாரதியும் மற்றும் நண்பர்கள் உட்பட சேர்ந்து வசித்த சமயம்.

கடுங்காவல் சிறைவாசத்தை அனுபவித்து விட்டு வெளியே வந்த பிறகு பெரியவர் வ.உ.சிதம்பரனார் தனது ஆத்ம நண்பரும் அன்புக்குரிய மாமாவுமான பாரதியைச் சந்திக்க புதுவை நோக்கி ஓடோடி வருகிறார்.

புதுவை ரயில் நிலையத்தில் இறங்கிய பெரியவர் வ.உ.சி. ஒரு வண்டிக்காரனை அழைக்கிறார்.

“நான் பாரதியார் வீட்டுக்கு போக வேண்டும்; அவர் வீடு உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்கிறார். வண்டியில் ஏறுங்கள். நான் பாரதியார் வீட்டில் விடுகிறேன் என்று கூற உடனே வண்டியில் ஏறிக்கொள்கிறார்.

வண்டிக்காரன் பெரியவர் வ.உ.சி.யை ஏற்றிக்கொண்டு நேராக பாரதியார் வீட்டுக்கு முன் வண்டியை நிறுத்தி விட்டு, வீட்டுக்குள்ளே வந்து “சாமி உங்களைத் தேடி ஒரு ஐயா வந்திருக்கிறார். அவர் உங்களை கூப்பிடுகிறார்” என்று சொன்னார்.

குளிப்பதற்கு செல்ல தயாராக இருந்த மகாகவி பாரதி யார் தன்னை பார்க்க வந்திருக்கிறார் என்று பார்ப்பதற்கு தெரு வாசலுக்கு வருகிறார்.

மகாகவியைக் கண்டதும் பெரியவர் வ.உ.சி. வண்டியை விட்டு கீழிறங்கி அதிவேகமாக சென்று தன் அன்பு மாமாவை கட்டி அணைத்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.

மகாகவி பாரதிக்கும் கண்களில் ஆனந்த கண்ணீர் ததும்பி வழிகிறது. மருமகன் வ.உ.சி.யை மாமா பாரதி மகிழ்ச்சியுடன் இருகரங்களையும் பிடித்துக்கொண்டு மெத்தைக்கு அழைத்துச் செல்கிறார்.

அப்பொழுது பாரதி உடன் வசித்த நாகசாமி என்பவர் பெரியவர் வ.உ.சி.யைப் பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சியுடன் “வாருங்கோ பிள்ளைவாள்” என்று வரவேற்றார்.

“நீங்கள் யார்? உங்கள் பெயர் என்ன? என்னை எப்படி உங்களுக்கு தெரியும்?” என்று கேட்கிறார் பெரியவர். அதற்கு அவர் உங்களை தெரியாதவர்கள் இந்தத் தமிழ் உலகில் உண்டா!

திருநெல்வேலி கடைத்தெருவில் கருப்பஞ்செட்டியார் வீட்டில் ‘சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி’ பங்குகள் விற்க நீங்கள் வந்திருந்த பொழுது உங்களை நேரில் பார்த்தவன். ஆனால் பேசினது கிடையாது என்றார்.

அப்படியா, நான் அவ்வளவு புகழ் பெற்றவனா? என் கடமையைத்தான் தாய்நாட்டுக்காகச் செய்தேன் என்றார் பெரியவர். மாமனும் மருகரும் சிறிது நேரம் அளவளாவிக் கொண்டிருந்தனர்.

பின்னர் பெரியவர் வ.உ.சி. பல் தேய்த்து கைகால் அலம்பி திருநீறு நெற்றியில் பூசிக்கொண்டு, சூரிய நமஸ்காரம் செய்தார் வ.உ.சி.

பாரதி தனது மருகர் வ.உ.சி.யை சற்று ஓய்வெடுங்கள் என்று கூறி விட்டுஅலுவல் விசயமாக வெளியே செல்கிறார்.

அந்த அறையில் பத்திரிக்கைகளை பாய்போல் விரித்து, பத்திரிக்கைகளையே கட்டாக கட்டி தலையணையாக வைத்துக் கொண்டு பாய்போல் விரித்த பத்திரிக்கை மேல் படுத்துக்கொண்டு அயர்ந்து தூங்கினார் பெரியவர் வ.உ.சி.

பகல் பன்னிரண்டு மணிக்கு மதிய சாப்பாட்டுக்காக களைப்புடன் வந்தார். பாரதியார். வந்ததும் சிறிது நேரம் வ.உ.சி.யுடன் உரையாடி விட்டு எல்லோரும் ஒரே பந்தியில் உட்கார்ந்து சாப்பிடச் சென்றனர்.

இன்று என்ன சமையல் என்று பெரியவர் வ.உ.சி. கேட்கிறார். மறுநிமிடமே நாகசாமி அவர்கள் மெனுவை குறிப்பிட்டார்.

பச்சரிசி சாதம், நெய் வெங்காயம், பச்சை மிளகாய் பச்ச கொத்தமல்லி போட்டு, எலுமிச்சம் பழம் சாறு பிழிந்த சாம்பார், உருளைக் கிழங்கு பொரியல், அப்பளம், துவைத்த தயிர், உப்பு, எலுமிச்சங்காய் ஊறுகாய் ஆகியவை என சொல்லி முடித்தார்.

பந்தியில் கீழே உட்கார பத்திரிகைகள், சாப்பிட மண்சட்டிகள், பதார்த்தங்கள் வைத்துக் கொள்ள மண்தட்டுகள், இங்கு உள்ள எட்டு பேர் இரண்டு. வரிசையில் உட்கார்ந்து சாப்பிடுவோம் என்று சொல்லி முடித்தார் நாகசாமி.

“எல்லாம் கேட்டேன். ஆனந்தமடைந்தேன். சாப்பிடக்கூடத் தேவையில்லையென எனக்கு தோன்றுகிறது. அவ்வளவு சுவையுள்ளதாய் இருக்கிறதே காதுகளால் கேட்ட பொழுது என்று வ.உ.சி. மகிழ்ச்சி கொள்கிறார். மாமனும் மருகரும் சேர்ந்து சாப்பிட செல்கின்றனர்.

ஒரே வரிசையில் பாரதியும் அவருடன் ஆபிசில் தொண்டுபுரிந்த மூவரும் மற்றொரு வரிசையில் விருந்தினரான பிள்ளையும் ஜாகையில் அன்றே சமையல் செய்த மற்ற மூவரும் உட்கார்ந்து சாப்பிட்டனர்.

எல்லோரும் உரையாடிக் கொண்டே தனக்கு தேவையானதை பங்கிட்டு எடுத்து சாப்பிட்டனர்.

பெரியவர் வ.உ.சி. “சிறையிலிருந்து வெளிவந்த பின்பு இன்று நான் சுவையுடன் வயிறு நிறைய சாப்பிட்ட நாளாகும்” என்று கூறினார் பெரியவர் வ.உ.சி. சாப்பிட்ட பின்பு அனைவரும் அவரவர் வேலைக்குச் சென்றனர்.

பின்பு சாயங்காலம் பாரதி இந்தியா அலுவலகத்தில் இருந்து திரும்பி வ.உ.சி.யை கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்.

கடலோரத்தில் குளிர்ந்த காற்றை அனுபவித்து விட்டு இரவு வேளையிலும் மதிய உணவு சாப்பிட்டமாதிரி சாப்பிட்டு முடித்தனர்.

அன்று நல்ல நிலவு வெளிச்சம் இருந்தது. மெத்தை தளத்தில் பத்திரிக்கைகளை விரித்து எல்லோரும் உட்கார்ந்தனர்.

பெரியவர் வ.உ.சி. அவர்கள் பால் நிலா காயும் அருமையான வெளிச்சத்தில் “நம் தாய்நாட்டுக்காகச் சிறையில் பட்ட துன்பங்களை கதை போலச் சொல்ல ஆரம்பித்தார். என் தேச சேவையை அடக்கவேண்டுமென்றே ராஜநிந்தனை வழக்கு கொண்டு வந்து ஆறு வருடம் கடுங்காவல் தண்டனை கொடுத்தது.

நான் சிறைவாசம் செய்தபொழுது கேழ்வரகு அறைத்தல், கருங்கல் உடைத்தல், எண்ணெய் செக்கு இழுத்தல் போன்ற கடின வேலைகளைச் செய்தேன். கடவுளை வேண்டிக்கொண்டு நம் நாட்டுக்காகவே இவ்விதமான கடினவேலையெல்லாம் செய்தேன் என்ற எண்ணம் என் மனதில் அப்படியே ஊறிவிட்டது.

வேலை செய்தபொழுது அது எனக்கு சிரமமாக தோன்றவில்லை. அவ்வித ஆழ்ந்த எண்ணத்துடன் நான் மனப்பூர்வமாக எனனை நான் அர்ப்பணம் செய்து நம் நாட்டின் விடுதலை பொருட்டே பாடுபட்டேன்.

நீங்களும் அவ்வித எண்ணத்துடன் உங்களை நாட்டுக்கு அர்ப்பணம் செய்து விட்டு பாடுபடுங்கள் என்று சொல்லி முடித்தார் பெரியவர் வ.உ.சி. எல்லோரும் மனம் உருகக் கேட்டு கண்கலங்கி வருந்தினர்.

இவ்வாறாக மூன்று தினங்கள் பாரதியுடன் ஜாகையில் தங்கி உடற்பயிற்சியும் செய்து கொண்டும், வெவ்வேறு சாப்பாட்டு பலகாரங்கள் ருசியாக சாப்பிட்டும் பொழுதைக் கழித்தார். மூன்றாம் நாள் இரவில் தம் ஊருக்கு பெரியவர் வ.உ.சி. புறப்படத் தயாரானார்.

வ.உ.சி. மகாகவி பாரதியாரை ஆலிங்கனம் செய்து மற்றவர்களைப் பார்த்து “எவ்வித கஷ்டத்தையும் பொருட்படுத்தாது நாட்டுக்கு உங்களை அர்ப்பணம் செய்து விட்டு சோர்வடையாது நாட்டுக்கே பாடுபடுங்கள், பாடுபடுங்கள் என்று கூறி வாழ்த்தினார் பெரியவர் வ.உ.சி.

எல்லோரும் வணக்கம் செலுத்தி வ.உ.சி.யை ரயில்வே ஸ்டேசன் சென்றுஅனுப்பிவிட்டு திரும்பினர்.

மூலம்: புதுவையில் தேசபக்தர்கள். பாரதியார் பற்றிய நினைவுக் குறிப்புகள் நூலில் இருந்து. சுதந்திரமான முறையில் தகவல்கள் உள்ளவாறே பதிவுசெய்துள்ளேன்.

You might also like