– இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்
மாறிவரும் நவீன யுகத்தில் இயற்கை விவசாயம் அழிந்து செயற்கை விவசாயத்திற்கு மாற்றப்பட்டுள்ளோம். இயற்கை உரமிடும் காலம் போய் எல்லாவற்றுக்கும் யூரியா உள்ளிட்ட செயற்கை உரங்களைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம்.
போதாக்குறைக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளைக் கணக்கில்லாமல் தூவிக்கொண்டிருக்கிறோம். இதனால் நிலம் மலட்டுத் தன்மை அடைந்து வருவதை நாம் நினைவில் கொள்வதே இல்லை.
இந்த அபாயத்தை உணர்ந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், பாழாய்ப் போன நிலத்தை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டுவரும் யுக்தியைச் சொல்லிச் சென்றுள்ளார். அந்த நுணுக்கம் இதோ.
20 வகையான விதைகளை கலந்து தோட்டத்தில் விதைத்து, அவை முளைத்து 60 நாட்களில் மடக்கி உழ வேண்டும். அவ்வாறு செய்தால் 50 வருடங்களாக கெட்டு போன நிலம் கூட இந்த 60 நாட்களில் மீண்டு விடும்.
20 வகையான விதைகள்:
4 தானியங்கள்
சோளம்
கம்பு
திணை
சாமை, கேழ்வரகு
4 பருப்பு
பாசி பயிர்
உளுந்து
தட்ட பயிர்
கொள்ளு
துவரை, அவரை, மொச்சை
4 எண்ணெய் வித்து
ஆமணக்கு
நில கடலை
எள்ளு
சூரிய காந்தி
4 வாசனை பொருட்கள்
கடுகு
வெந்தயம்
மல்லி
சோம்பு
4 உரச் செடி
பச்ச பூண்டு
அகத்தி
செனப்பு
நரிப் பயிர்
பனிப் பயிர்
இந்த 20 வகையான விதைகளை ஏக்கற்கு 20 முதல் 25 கிலோ வீதம் கலந்து அவைகளில் பொடி வகைகளை மண் மற்றும் குப்பைகளுடன் சேர்த்து கொள்ளவும்.
நடுத்தர விதைகளைத் தனியாகவும், பெரிய விதைகளைத் தனியாகவும் பிரித்துக் கொண்டு 3 சுற்றுகளாக விதைத்தால் ஓவ்வொன்றும் முளைத்து வளரும்.
பாதி செடிகள் 60 நாட்களில் பூ வைக்கும். அந்தத் தருணத்தில் இச்செடிளை மடித்து உழுவ வேண்டும். அவ்வாறு செய்த செடிகளை 10 நாட்கள் அப்படியே விட்டால் அவை மக்கி அந்த நிலத்தை விவசாயம் செய்ய ஏற்ற நிலமாக மாற்றுவதாகக் கூறுகிறார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். அவரைப் பின்பற்றி நஞ்சான நிலத்தை நல்ல நிலமாக மாற்றுவோம். இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவோம்.