1945 ஆம் ஆண்டு ஏவி. மெய்யப்ப செட்டியாரால் தொடங்கப்பட்ட ஏவிஎம் நிறுவனம், பாரம்பர்யமிக்கது. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்.டி. ராமராவ், ஜெயலலிதா ஆகிய ஐந்து முதலமைச்சர்களுடன் பணியாற்றிய பெருமைக் கொண்டது.
தங்கள் நிறுவனத்தின் படைப்புகளை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவின் ஒரு பகுதியில் அருங்காட்சியகத்தை இந்த நிறுவனம் அமைத்துள்ளது. ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ என இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இங்கு 1960-களில் தொடங்கி தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்ட பைக், கார்கள் உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
பிரபல நட்சத்திரங்கள், படத் தயாரிப்பாளர்கள் பயன்படுத்திய 40 க்கும் மேற்பட்ட பழங்கால கிளாசிக் கார்கள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட பைக்குகளும் உள்ளன.
செவ்வாய்க்கிழமை தவிர, மற்ற நாட்களில் செயல்படும் இந்த அருங்காட்சியகத்தை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் கண்டு ரசிக்கலாம்.
கமல்ஹாசன் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘சகலகலா வல்லவன்’ 1982 ஆம் ஆண்டு வெளியானது. ஏவிம் நிறுவனம் தயாரித்த படம்.
இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘இளமை இதோ இதோ’ பாடல் இன்றும் புத்தாண்டின் போது இசைக்கப்படுகிறது.
இந்த பாடலில் கமல்ஹாசன் பயன்படுத்திய ராயல் என்ஃபீல்டு புல்லட்டை, கமல்ஹாசனின் பிறந்தநாளான 7 ஆம் தேதி தங்களது அருங்காட்சியகத்தில் ஏவிம் நிறுவனம் சேர்த்துள்ளது.
இதுபோல், அண்மையில் இந்த மியூசியத்தில் ‘மின்சார கனவு’ படத்தில் நடிகர் அரவிந்த் சாமி பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் கார், சேர்க்கப்பட்டுள்ளது. அதனை அரவிந்த் சாமி பார்த்து ரசித்துள்ளார்.
இது தொடர்பாக ஏவிம் நிறுவனம் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “எங்களின் அருங்காட்சியகத்துக்கு அரவிந்த் சாமி வந்ததில் மகிழ்ச்சியடைகிறோம்.
‘மின்சார கனவு’ படத்தின் படப்பிடிப்பு குறித்தும் சினிமாவின் வரலாறு குறித்தும் அவர் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்” எனப் பதிவிடப்பட்டுள்ளது.
– பாப்பாங்குளம் பாரதி.