உயரம் பெற்றதற்குக் கலைஞரின் உரைகள் பெருங்காரணம்!

கவிஞர் வைரமுத்து

*

“கலைஞர்  எத்தனையோ கவிஞர்களை அடையாளம் காட்டியிருக்கிறார். வளர்த்திருக்கிறார்.

ஆனால், கவிஞர்களோடு அவருக்கு நேர்ந்த அனுபவம் பதிவு செய்யும்படியாக இல்லை. ஆனால், எனக்கு அப்படி எதுவும் நேரவில்லை.

ஒரு மெல்லிய ஊடலில் ஒரு வாரம் பேசாமலிருந்ததைத் தவிர எனக்கும், அவருக்கும் எந்தக் கசப்பும் இருந்ததில்லை.

காரணம், என் சுதந்திரத்தில் சுயமரியாதையில் அவர் தலையிட்டதில்லை. அவர் உயரம் எவ்வளவு என்று ஏணி வைத்துப் பார்க்க நான் என்றும் முயன்றதில்லை. அதனால் தான் என் தமிழை மனந்திறந்து பாராட்ட அவர் தயங்கியதே இல்லை.

தமிழ்நாட்டில் ஒரு படைப்பாளி இன்னொரு படைப்பாளியை மிச்சமில்லாமல் பாராட்டுவதில்லை. கலைஞரையும், என்னையும் பொறுத்தவரை அந்தப்பழி எங்கள் இருவர் மீதும் இருந்ததில்லை.

ஒரு கூட்டத்தில், “யானை போல் இருந்து – அதன் வால் போல இளைத்த ந‍தி’’ என்ற வரியை மேற்கோள் காட்டி ’’அபாரமான கற்பனை’’ என்று பாராட்டியதோடு முடித்துவிடாமல் ’’நீங்கள் ஐந்து நிமிடம் கை தட்டலாம்’’ என்றார். அப்படியே அரங்கம் கைதட்டியது.

பாறை போல் உறுதியான புகழுடையவர் மட்டுமே இப்படிப் பாராட்டுவர்.

என் எல்லாப் படைப்புகளுமே உயர்ந்தவை என்று சொல்ல மாட்டேன். ஆனால் உயர்ந்த படைப்புகளும் உண்டு என்பேன். அந்த உயரம் மேலும் மேலும் உயரம் பெற்றதற்குக் கலைஞரின் உரைகள் பெருங்காரணம் என்று நான் நம்புகிறேன்.

கர்ப்பிணியின் முதுகுத்தண்டில் சில்லென்ற தண்ணீர் தெளிக்கப்படும் போது, உள்ளிருக்கும் குழந்தை உதறிப் புரளுமாமே.. அப்படித்தான் படைப்பாளியின் மீது  விழும் பாராட்டு, படைப்பை நகர்த்துகிறது.

கலைஞரின் பாராட்டு அப்படி என்னை உந்தி எழ வைத்து முந்தி ஓட வைத்திருக்கிறது.’’

  • முரசொலி, நவம்பர் 3, நாளிதழில் ‘பேச்சுக்கலையின் பிதாமகன்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.
You might also like