தி.மு.க.வுக்கு மிகவும் நெருக்கமானவரான அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்களில் நீண்ட நாட்களாக அமலாக்கத்துறை சோதனையிட்டது. பலர் விசாரிக்கப்பட்டார்கள்.
அவருடைய சில உறவினர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்கள் இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை.
அதோடு சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.
அவர் சார்ந்த இடங்களில் நடந்த சோதனைகளில் கைப்பற்றப்பட்ட சொத்துகளின் மதிப்பு எவ்வளவு? அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் மூலம் தெரிய வந்தது என்ன? செந்தில் பாலாஜியிடம் இருந்து எதை எதிர்பார்க்கிறார்கள்? – என இதுவரை தெரியவில்லை அல்லது தெரியப்படுத்தப்படவில்லை.
இதைத் தொடர்ந்து தி.மு.க.வின் இன்னொரு முக்கியப் புள்ளியான ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகங்களில் சோதனைகள் நடந்து அவை செய்திகளாகவும் வெளிவந்தன.
எதற்காக இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன. எவை எவற்றைக் கைப்பற்றினார்கள்? சோதனைகளின் முடிவு தெரியாத நிலையில் – தற்போது அமைச்சர் எ.வ.வேலு தொடர்முடைய வீடு, அலுவலகங்களில் சோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது.
இதிலும் சோதனை முடிவுகளை அறிவிப்பார்களா? தெரியவில்லை.
மேலிடத்திலிருந்து உத்தரவுகள் இல்லாமல் இந்தச் சோதனைகள் நடைபெறப் போவதில்லை.
சோதனை மேல் சோதனைகள் நடந்தும் ஏன் இதில் அடுத்தகட்டச் செயல்பாடுகள் மர்மமாகவே இருக்கின்றன?
ஏற்கனவே கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலகம் வரை பலதரப்பட்ட சோதனைகள் நடந்த அ.தி.மு.க புள்ளிகளின் மேல் நடவடிக்கை எடுப்பதற்கான அனுமதி இன்னும் ஆளுநரால் அளிக்கப்படாத நிலையில் அப்படியே கிடப்பில் கிடக்கிறது.
தற்போது நடக்கும் சோதனைகளுக்கு என்ன கதியோ?