நாட்டின் மூன்றாவது பிரதமரான இந்திரா காந்தி, துணிச்சல் மிக்க பெண்மணியாக கருதப்படுகிறார்.
1971ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மீது போர் அறிவித்து, கிழக்கு பாகிஸ்தானை வங்கதேசம் என்னும் புதியநாடாகப் பிரகடனப்படுத்தியது, அணு ஆயுத திட்டங்களைக் கொண்டு வந்தது, பசுமைப் புரட்சியைக் கொண்டுவந்தது, நாட்டில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியது என பல அதிரடியான மாற்றங்களுக்குச் சொந்தக்காரர்.
இந்திராகாந்தியின் இளமைப்பருவம்
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட செல்வந்தர் குடும்பத்தின் ஜவஹர்லால் நேருவுக்கும் கமலா நேருவுக்கும் 1917ஆம் ஆண்டு, நவம்பர் 19-ல் மகளாகப் பிறந்தார், இந்திரா. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர், இந்திரா பிரியதர்ஷினி.
இளம் வயதில் தந்தை ஜவகர்லால் நேருவும், தாத்தா மோதிலால் நேருவும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதைப்பார்த்து, வானரசேனா என்னும் அமைப்பை உருவாக்கி, விடுதலைக்காகப் போராட்டங்களை முன்னெடுத்தார்.
பின், தனது மேற்படிப்புக்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சென்றபோதும், லண்டனை மையமாகக் கொண்டு இயங்கிய சுதந்திரக் குழுக்களில் தன்னை இணைத்துக் கொண்டு போராடினார்.
முன்னதாக, தனது தாய் கமலா நேரு காசநோயால் பீடிக்கப்பட்டு, துன்புற்றபோது உதவிகரமாக இருந்த, இளம் சுதந்திரப்போராட்ட வீரர் ஃபெரோஸ் என்கிற பார்சி இளைஞரின் மீது இந்திராவுக்கு ஈர்ப்பு இருந்தது.
பின், இருவரும், லண்டனில் படிக்கும்போது காதலர்களாக மாறினர். பின், 1942ல் இந்து சடங்குகளின் அடிப்படையில் இந்திரா, ஃபெரோஸை திருமணம் செய்துகொண்டார்.
ஆரம்பத்தில் இதற்கு எதிர்ப்புத்தெரிவித்த ஜவகர்லால் நேரு, அவரின் சுதந்திரப் போராட்டக்குணத்தைக் கண்டு ஏற்றுக்கொண்டார்.
திருமணத்திற்குப் பின், இந்திராவும் ஃபெரோஸும் 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் போராடும்போது கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின், ஒரு வருடத்திற்குப் பின் வெளியில் வந்து ஃபெரோஸ், தனது குடும்பத்தினருடன் நேரம் செலவு செய்தார். 1944ல் இத்தம்பதிகளுக்கு ராஜீவ் காந்தியும், 1946ல் சஞ்சய் காந்தியும் பிறந்தனர்.
இந்திரா காந்தியின் அதிரடி நடவடிக்கைகள்
பங்களாதேஷ் என்னும் தனிநாடு உருவாக்கம்: 1966ல் இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப்பின், நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆனார்.
பின், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு பாகிஸ்தானில் இருந்து உள்நாட்டு அரசியல் குழப்பங்களால்,1 கோடி வங்காள மொழி இஸ்லாமியர்கள், இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர்.
இதனால் இந்திய நாட்டில் நிதித்தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனைப் போக்க 1971ஆம் ஆண்டு பாகிஸ்தான் மீது போர் தொடுத்தார் பிரதமர் இந்திரா.
இதற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்தது. அனைத்து தடைகளையும் தாண்டி, இந்தியா வென்றது. கிழக்கு பாகிஸ்தானை பிரித்து, பங்களாதேஷ் என்னும் நாடாக உருவாக்கினார்.
அணு ஆயுதத்தில் பரிசோதனை
அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் வரலாம் என கணித்த இந்தியா, 1974ல் ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானில் அணுகுண்டு வெடிப்பினை நடத்தி பரிசோதித்தது. இந்த ஆப்ரேஷனுக்கு இந்திய அரசு வைத்த பெயர் என்ன தெரியுமா? சிரிக்கும் புத்தர்.
பசுமைப் புரட்சி
சுதந்திரம் அடைந்து குறைவான ஆண்டுகளைச் சந்தித்த இந்தியாவுக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது, உணவுத்தட்டுப்பாடு.
அதனை சமாளிக்க கோதுமை, அரிசி போன்ற பயிர்களின் புதிய வகை விதைகளை உருவாக்குவது, உரங்கள் தயாரித்தல், களைக்கொல்லிகளை உருவாக்குதல் போன்ற திட்டங்களை,தீவிரமாக நடைமுறைப்படுத்தினார்.
இதனால்,நாட்டில் பசுமைப்பயிர்களின் உற்பத்தி மும்மடங்காக உயர்ந்து, ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அதிகரித்தது. இதனை பசுமைப்புரட்சி என அழைத்தனர்.
எமர்ஜென்ஸி காலம்: 1971ஆம் ஆண்டு முதல் இந்திரா ஆட்சி புரியும்போது, அவருக்குத் தலைவலியாக ஜெயப்பிரகாஷ் நாராயண் உள்ளிட்ட சில தலைவர்கள் இருந்தனர்.
இந்திரா அரசின் ஊழல்களையும் காங்கிரஸ் கட்சியில் நிலவிய ஊழல்களையும், நிறைவேற்றப்படாத மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்தும் தொடர்ச்சியாக அவர் உட்பட சிலர் விமர்சித்து வந்தார்.
இதனால், தனது பதவிக்காலம் முடியும் தருவாயில் நாட்டில் சிலர் ஜனநாயகத்தைச் சீரழிக்க முயல்வதாகக் கூறி, 1975ஆம் ஆண்டு முதல் 1977ஆம் ஆண்டு வரை, எமர்ஜென்சி என்னும் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார்.
இதனால் மக்கள் எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆளாகினர். எதிர்க்கட்சித்தலைவர்கள் பலர் சிறைக்குச் சென்றனர். தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. ஊடகத்தின் எழுத்துரிமை பறிக்கப்பட்டு, அச்சில் ஏறும் அனைத்து வரிகளும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன.
மக்கள் வெளியில் செல்ல, நடமாட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்குண்டான பலனை 1977 பொதுத்தேர்தலில் பெற்றது, காங்கிரஸ். ஆட்சியை இழந்தது இந்திரா தலைமையிலான காங்கிரஸ்.
பின்னர் மூன்று ஆண்டுகளுக்குள் நடந்த பொதுத்தேர்தலில் இந்திரா மக்களிடம் நம்பிக்கையைப் பெற்று மீண்டும் பிரதமர் ஆனார். இதன்மூலம், 1967, 1971, 1980ஆகிய மூன்று முறை இந்தியாவின் பிரதமராக பொறுப்பு வகித்தார், இந்திரா காந்தி.
காலிஸ்தான் பிரச்னையை ஒடுக்க முயன்ற இந்திரா காந்தி:
மூன்றாவது முறையாக, இந்திரா காந்திக்கு ஒரு பிரச்னையாக உருவானது, சீக்கியர்கள் தனி நாடுகோரும் காலிஸ்தான் பிரச்னை.
இதனால், கோபம் அடைந்த முன்னாள் பிரதமர் இந்திரா, இதற்காகப் போராடிய ஜர்னைல் சிங் பிந்தரன்வாலாவின் தலைமையிலான சீக்கிய ஆதரவுப்படையினர் 1984 ஜூனில், அமிர்தசரஸிலுள்ள புனித தலமான பொற்கோவிலில் இருப்பதை அறிந்தார்.
பின், ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் என்னும் நடவடிக்கை மூலம், ராணுவத்தினரை பொற்கோயிலுக்குள் அனுமதித்தார்.
அவர்கள் பூட்ஸ் காலுடன் சீக்கியர்களின் புனிதமான பகுதிக்குள் சென்று துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் பெண்கள், குழந்தைகள் என 3ஆயிரம் சீக்கியர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
இது ஒட்டுமொத்த மிகப்பெரும் மனித உரிமை மீறலாகப் பலரால் விமர்சிக்கப்பட்டது. இதனால் சீக்கியர்கள் மிகவும் கொதிப்புடன் காணப்பட்டனர்.
இறுதியாக, 1984 அக்டோபர் 31ஆம் தேதி, தனது பாதுகாவலர்களான சத்வந்த் சிங் மற்றும் பீண்ட் சிங் ஆகிய சீக்கிய மதக் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
அவரின் உடலில் இருந்து 31 குண்டுகள் வெளியில் எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வு ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியினரையும் நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அவர் இறந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும், ஆணாதிக்கம் மிக்க நாட்டில் தன்னுடைய அதிரடி நடவடிக்கைகளால், பலருக்கு சிம்ம சொப்பனமாய் இருந்த இந்திரா என்றும் போற்றுதலுக்குரியவர்!
– நன்றி : இந்துஸ்தான் டைம்ஸ் இதழ்