– திரையரங்கு உரிமையாளர்கள் விரக்தி
‘இளைய தளபதி’ விஜய் நடிப்பில் உருவான ‘லியோ’ திரைப்படம் கடந்த 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 148 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதனை படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. படம் வெளியாகி 7 நாட்கள் கடந்த நிலையில், உலக அளவில் இதுவரை 460 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ‘லியோ’ வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
படத்தின் பட்ஜெட் 350 கோடி ரூபாய். முதல் வாரத்திலேயே பட்ஜெட்டைத்தாண்டி வருவாய் ஈட்டியுள்ளதால் தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆனால், படத்தை வெளியிட்ட தியேட்டர்காரர்கள் சந்தோஷமாக இல்லை.
‘லியோவால் தமிழக திரையரங்குகளுக்கு லாபம் இல்லை’ என பகீர் தகவலை தெரிவித்துள்ளார், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் .
இது குறித்து அவர் அளித்துள்ள பரபரப்பு பேட்டியின் சுருக்கம்:
“லியோ திரைப்படத்தால் தமிழ்நாட்டில் உள்ள சினிமா தியேட்டர் உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை.
இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத பங்கீட்டுத் தொகையை இந்தப் படத்துக்கு வாங்கி விட்டார்கள். நிறைய திரையரங்குகளில் கடைசி நிமிடம் வரை ‘லியோ’ படம் திரையிடப்படுமா? என்ற சந்தேகம் இருந்தது. மிகவும் கசக்கி பிழிந்து தான் இந்தப் படத்தை திரையிட்டுள்ளனர்.
பெரும்பாலான திரையரங்குகள் இந்த படத்தை வெளியிட ஆர்வம் காட்டவில்லை. அந்த அளவுக்கு அதிகமான பங்கீட்டு தொகையை கேட்டனர்.
படம் நல்ல வருவாய் ஈட்டி உள்ளது. ஆனால், திரையரங்கு உரிமையாளர்களுக்கு சொல்லிக்கொள்ளும் படியாக லாபம் கிடைக்கவில்லை.
படம் நஷ்டம் என சொல்ல மாட்டேன். தியேட்டர் பராமரிப்பு செலவுக்கு இந்தப் பணம் போதாது. கேரள மாநில தியேட்டர்களில் லியோ திரைப்படத்தை 60 சதவீத பங்கீட்டுத் தொகைக்கு ஒப்புக்கொண்டவர்கள், தமிழ்நாட்டில் 80 சதவீதத்தை வாங்கியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள சினிமா தியேட்டர் உரிமையாளர்களிடம் ஒற்றுமை இல்லாததை பயன்படுத்திக் கொண்டார்கள். பெரும்பாலான திரையரங்கு உரிமையாளர்களுக்கு இந்தப் படத்தை திரையிட விருப்பம் கிடையாது.
லியோவுடன் வேறு படம் வெளியாகியிருந்தால் இத்தனை திரையரங்குகள் கிடைத்திருக்காது.
தற்போது வெளியாகியிருப்பதில் பாதி திரையரங்குகள் தான் கிடைத்திருக்கும்.
தீபாவளி வரை வேறு படம் இல்லை என்பதால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நெருக்கடி கொடுத்தனர். பல திரையரங்குகள் விருப்பமில்லாமல்தான் இந்தப் படத்தைத் திரையிட்டன’’.
இந்திய சினிமா தியேட்டர்கள் வசூலை, பைசா கணக்கில், புள்ளி விவரமாக கையில் வைத்திருக்கும் திருப்பூர் சுப்பிரமணியத்தின் இந்த குற்றச்சாட்டு, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– பாப்பாங்குளம் பாரதி.