தமிழகத்தில் காமராஜரோடு கரைந்த காங்கிரஸ்!

‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேனே’ என சென்னை சத்தியமூர்த்தி பவன் கட்டடம் கடந்த 55 ஆண்டுகளாக தனக்குத்தானே புலம்பிக்கொண்டிருப்பதற்கு, ‘இனிமே இப்படித்தான்’ என்பதே ஒரே ஆறுதல் வார்த்தையாக இருக்க முடியும்.

காமராஜர் காலத்தோடு, சத்தியமூர்த்தி பவன், தனது களையை இழந்துவிட்டது.  வாக்குகளையும் மக்கள் செல்வாக்கையும் தொலைத்து விட்டது.

தேசிய அளவில் நேருவும், இந்திராவும் காங்கிரசின் செயல்பாடுகளை தீர்மானித்தார்கள் என்றால், தமிழகத்தை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சியின் ’ரிமோட் கண்ட்ரோல்’ காமராஜர் உயிரிழக்கும் வரை அவர் கையில்தான் இருந்தது.

1967 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றபோதும், 1969 ஆம் ஆண்டு தேசிய அளவில் காங்கிரஸ் பிளவு பட்டபோதும், தமிழ்நாட்டில் கட்சியை தன் பிடிக்குள் உயிர்ப்புடன் வைத்திருந்தார், பெருந்தலைவர்.

1952 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரசுக்கு நிகராக வாக்குகளைப் பெற்ற கம்யூனிஸ்ட்களையும், ராஜாஜியின் சுதந்திரா உள்ளிட்ட கட்சிகளையும் கீழிறக்கி, காங்கிரஸ் கட்சியை பிரதான எதிர்க்கட்சியாக கட்டமைத்து, கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர் அவரே.

அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற ஆளுமைகள், எம்.ஜி,ஆர். போன்ற மக்கள் தலைவர்கள் திமுகவுக்கு இருந்த போதிலும், அரசியல் களத்தில் ஒற்றைக் காளையாக நின்று காங்கிரஸ் கட்சியை ஓட்டிச்சென்றவர் காமராஜர்.

கழகம் இரண்டு பட்டு, எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கிய நிலையிலும், காங்கிரஸ் கட்சியை இரண்டாம் இடத்தில் அமர செய்திருந்தார் அவர்.

திண்டுக்கல் இடைத்தேர்தல்:

1973 ஆம் ஆண்டு நடைபெற்ற திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல், தமிழகத்தின் அரசியல் நீரோட்டத்தை வேறொரு திசையில் பயணிக்க வைத்த தேர்தலாக அமைந்தது.

அந்தத் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்புதான் அதிமுகவை எம்.ஜி.ஆர். உருவாக்கி இருந்தார்.

அந்த தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவியது. இடதுசாரிகள் ஆதரவுடன் அதிமுக களம் இறங்கியது. மாயத்தேவர் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

தி.மு.க சார்பில் பொன்.முத்துராமலிங்கமும், காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் சித்தனும் களமிறங்கினர்.

அப்போது தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத இந்திரா காங்கிரஸ் கட்சியும் கோதாவில் குதித்தது.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, மொத்த அமைச்சரவை சகாக்களையும் பிரசாரத்தில் இறக்கினார் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி.

இடைத்தேர்தலில், அ.தி.மு.க வேட்பாளர் மாயத்தேவர் 2.6 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார்.

காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் கட்சி இரண்டாம் இடம் பிடித்தது. ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டது.

எம்.ஜி.ஆர் என்கிற தலைவரை, அ.தி.மு.க என்கிற இயக்கத்தை தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக அந்தத் தேர்தல் முடிவுகள் பறை சாற்றின.

தமிழ்நாட்டில் இனிமேல் அதிமுகவுக்கும், ஸ்தாபன காங்கிரசுக்கும்தான் போட்டி என்ற சூழலை திண்டுக்கல் மக்கள் உருவாக்கி கொடுத்திருந்தார்கள். ஆளுங்கட்சியான திமுகவை ஒதுக்கி இருந்தார்கள்.

ஆனால், காங்கிரசின் துரதிருஷ்டம், 1977 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலை சந்திக்கும் முன்பே காமராஜர் மறைந்து போனார்.

1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி கருப்பு (காலா) காந்தி என்றழைக்கப்பட்ட காமராஜர், காந்தி பிறந்தநாளில் மறைந்தார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி புதையுண்டு போன நாள், அது என்றும் சொல்லலாம்.

காமராஜரால், வியர்வையும், ரத்தமும் சிந்தி வளர்க்கப்பட்ட ஸ்தாபன காங்கிரஸ், அவரது மறைவுக்குப் பிறகு, சுக்கு நூறாக உடைந்தும், நொறுங்கியும் போயிற்று.

1976 ஆம் ஆண்டு, ஸ்தாபன காங்கிரஸில் முதல் பிளவை அப்போது தஞ்சை மாவட்டத் தலைவராக இருந்த ஜி.கே. மூப்பனார் ஏற்படுத்தினார்.

அவரோடு பெரும்பான்மை நிர்வாகிகள், தொண்டர்கள், இந்திரா காங்கிரசில் ஐக்கியமானார்கள்.

ஸ்தாபன காங்கிரசிலேயே நீடித்து, அந்தக் கட்சி 1977 ஆம் ஆண்டு ஜனதா என உருமாறியபோது அங்கேயே தங்கள் பயணத்தைத் தொடந்த குமரி அனந்தன், நெடுமாறன் போன்றோர் பிற்பாடு தனிக்கடை விரித்தனர்.

ஜெபமணி, சுப்பிரமணிய சாமி போன்றோர் ஜனதா கட்சி பெயரை பயன்படுத்தினாலும், அந்தக் கட்சி கொஞ்ச நாளில் மறைந்தே போனது.

ஜி.கே. மூப்பனார் தலைமையில் (இந்திரா) காங்கிரஸ் இருந்தபோது அந்தக் கட்சி தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொண்டது.

இதற்கு முந்தைய மக்களவைத் தேர்தல்களில் ஏதாவது ஒரு கழகத்துடன் கூட்டணி வைத்திருந்தாலும், 1977 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்தே நிற்பது என மூப்பனார் தீர்மானமாக இருந்தார். அவருக்கு இந்திரா காந்தி பச்சைகொடி காட்டினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது காங்கிரஸ். அதிமுக, சிபிஎம்முடன் கூட்டணி வைத்தது. திமுக, ஜனதா ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.

அதிமுக மகத்தான வெற்றி பெற்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதன் முறையாக முதலமைச்சர் ஆனார்.

நான்கு முனைப் போட்டியில் அந்தத் தேர்தலில் 27 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது.

எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகிய ஆளுமைகள் கோலோச்சிய சமயத்தில், காமராஜர் இல்லாத காங்கிரஸ் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது பெரிய விஷயம்தான்.

காமராஜரின் ஸ்தாபன காங்கிரசில் எஞ்சி இருந்து, ஜனதா என உருமாறி இருந்த பாரா தலைமையிலான கட்சி 10 இடங்களை அள்ளியது.

அப்போது, பாரா, மூப்பனாரோடு அணி சேர்ந்திருந்தால் தமிழக அரசியல் போக்கு தலைகீழாக மாறி இருக்கும்.

திண்டுக்கல் இடைத்தேர்தல் போன்று திமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கும் என்பதே இதன் பொருள்.

ஆனால், காமராஜர் தொண்டர்கள் பிரிந்ததால், திமுக அந்தத் தேர்தலில் 48 தொகுதிகளைக் கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சி ஆனது.

அதளபாதாளத்தை நோக்கிய காங்கிரசின் சரிவு 1977 ஆம் ஆண்டு ஆரம்பித்தது என்றே சொல்ல வேண்டும்.

அதற்கு முந்தைய தேர்தல் வரை எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ், 77-ல் தான்  அந்த இடத்தை தவறவிட்டது.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் ஆட்சியை பிடிக்கலாம் என மூப்பனாருக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது.

ராஜிவ்காந்தியிடம் சொன்னார். அவர் ஓகே சொல்லிவிட, 1989 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மீண்டும் தனித்து களமிறங்கியது.

1977 ஆம் ஆண்டு கிடைத்த இடங்களைவிட ஒரு இடம் குறைவாக – அதாவது 26 இடங்களே இந்தத் தேர்தலில் காங்கிரசுக்கு கிடைத்தன.

அதிமுக இரண்டு அணிகளாகப் பிளவுபட்டுக் கிடந்ததாலும், பலமான கூட்டணியை ஏற்படுத்தி இருந்ததாலும், திமுக அந்தத் தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற்றது.

89 தேர்தல்தான், சட்டசபைக்கு காங்கிரஸ் தனித்து போட்டியிட்ட கடைசி தேர்தல்.
அதன் பிறகு ஏதாவது ஒரு கழகம் அல்லது சின்னக் கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்தே தேர்தல்களை சந்தித்து வந்துள்ளது காங்கிரஸ்.

35 ஆண்டுகளுக்கு முன் தனித்து நின்று 26 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி, கடந்த தேர்தலில் (2021) பல கட்டங்களாக திமுகவுடன் பேரங்கள் நடத்தியும், ஏழெட்டு கட்சிகள் ஆதரவுடனும் தேர்தலில் நின்று 18 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே வைத்திருப்பதில் இருந்தே, அந்தக் கட்சியின் இன்றைய பலத்தை அறிந்து கொள்ளலாம்.

– பி.எம்.எம்.

You might also like