ஏனோ தெரியவில்லை, தமிழ்நாட்டில் செப்டம்பர் 11-ம் தேதி பாரதியார் தினமாகக் ‘கொண்டாடப்பட்டு’ வருகிறது. கொண்டாடப்படுவதால் அது அவரது பிறந்த தினமோ என்ற மயக்கம் பலருக்கு ஏற்படுவதுண்டு.
தஞ்சைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆராய்ச்சிப் பதிப்பின் ஆசிரியர் கூட ஒரு கடிதத்தில் அதை பிறந்த தினம் எனக் குறிப்பிட்டுள்ளார். அது உண்மையில் பாரதி மறைந்த தினம்.
மகாகவி பாரதிக்கு யானையால் முடிவு ஏற்பட்டதாக ஒரு கருத்து பலகாலமாக நிலவி வருகிறது. ஆனால் அது உண்மை அல்ல. பாரதியின் முடிவு யானையால் ஏற்படவில்லை. யானைச் சம்பவம் நடந்தது ஜூனில். பாரதி மறைந்தது செப்டம்பரில்.
யானைச் சம்பவத்திற்குப் பிறகு ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் வேலைக்குப் போய்வந்தார். ஆகஸ்ட் 4-ம் தேதி சுதேசமித்ரனில் ‘எனது ஈரோடு யாத்திரை’ என்று ஒரு கட்டுரை எழுதினார்.
ஆகஸ்ட் 11-ம் தேதி காந்தியடிகளின் ஒரு கோடி ரூபாய் திலகர் நிதி பற்றி எழுதியிருக்கிறார்.
அதன் பின்னர் ரவீந்திரநாத் தாகூரின் ஐரோப்பிய விஜயம் பற்றிக் கட்டுரை எழுதினார். இதுதான் அவரது கடைசிக் கட்டுரை (இதில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால் சுதேசமித்ரனில் அவர் எழுதிய முதல் கவிதையும் வங்கம் சார்ந்தது. கவிதையின் பெயர் ‘வங்கமே வாழிய’)
யானைச் சம்பவத்திற்குப் பின் உடல்நலம் தேறிவிட்டதாக பாரதிதாசனுக்குக் கடிதம் எழுதினார்.
‘நான் நம்ப மாட்டேன், படம் எடுத்து அனுப்புங்கள்’ என்று அவர் வற்புறுத்தியதன் பேரில் சென்னை பிராட்வேயில் இருந்த ரத்னா கம்பெனி என்ற ஸ்டுடியோவிற்குச் சென்று ஜூலை 1921-ல் படம் எடுத்துக் கொண்டார். அதுதான் இன்று பிரபலமாகக் காணப்படும் முண்டாசுடன் கூடிய படம்.
யானைச் சம்பவத்திற்குப் பின் திருவல்லிக்கேணி வீதிகளில் தேசிய பஜனை நடத்தினார்.
ஒரு முறை செல்லம்மாவை சென்னை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் நடந்த ஒரு மாதர் அமைப்பின் பொதுக் கூட்டத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு அலுவலகம் போயிருக்கிறார்.
அவரே வெளியூர் பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கிறார்.
உண்மையில் மகாகவியின் முடிவு எப்படி ஏற்பட்டது? ரா.அ.பத்மநாபன் தனது சித்திரபாரதி நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
“1921 செப்டம்பர் முதல் தேதி பாரதிக்கு வயிற்றுப் போக்கு (டயரியா) ஏற்பட்டது. பூஞ்சை உடல் தாங்கவில்லை. விரைவில் அது வயிற்றுக் கடுப்பாக (டிசன்ட்ரி) மாறியது.
முதல் தேதியிலிருந்து லீவில் இருந்த பாரதி எப்போது வேலைக்குத் திரும்புவார் என்றறிய ஒரு சக ஊழியர் வந்து விசாரித்தார்.
சரியாக செப்டம்பர் மாதம் 12-ம் தேதி, திங்களன்று வேலைக்குத் திரும்பிவிடுவதாக பாரதி சொல்லியனுப்பினார். அன்றுதான் அவரது பூத உடல் எரிகாடு சென்றது.
பாரதிக்கு உடல் நலமில்லை என்ற செய்தி பல நண்பர்களுக்குத் தாமதமாகவே தெரிந்தது.
தாம் எழுதாத ஒரு தலையங்கத்திற்காகக் செப்டம்பர் 11-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று கொண்டிருந்த வ.வே.சு ஐயர், நிலைமையறிந்து, போகும் வழியில், போலீஸ் துணையோடு பாரதியின் வீட்டுக்கு வந்து அவரை பார்த்தார்.
அவரது குடும்பத்தாருடன் பேசினார். அவர்கள் பாரதி மருந்துட்கொள்ள மறுப்பதைச் சொன்னர்கள்.
“பாரதி, நீ மருந்து சாப்பிட மாட்டேன் என்கிறாயாமே? சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டாமா?” என்று பரிவோடு அறிவுறுத்திவிட்டுச் சென்றார்.
பாரதிக்கு சிகிச்சை அளித்தவர் டி.ஜானகிராம் என்ற ஹோமியோபதி வைத்தியர். அவர் ஆந்திரக் கேசரி என்று அழைக்கப்பட்ட டி.பிரகாசத்தின் சகோதரர்.
அவர் பாரதியை அணுகி, “உங்களுக்கு என்ன செய்கிறது?” என்று கேட்டதும் சீறினார்?
“யார் உங்களை இங்கே அழைத்தது? எனக்கு உடம்பு சரியில்லை என்று யார் சொன்னது? எனக்கொன்றும் இல்லை” என்று கோபப்பட்டார்.
பாரதியின் கடைசி சில மணி நேரங்கள் பற்றி அவரது மகள் சகுந்தலா சொல்கிறார்.
“அப்பாவிற்கு நீ மருந்து கொடுத்தால் ஒரு வேளை கோபிக்காமல் சாப்பிடுவார் என்று என் தாயார் மருந்து எடுத்துக் கொடுக்கும்படி சொன்னார்.
மங்கலான விளக்கு வெளிச்சம். நான் மருந்து என்று நினைத்து பக்கத்தில் கிளாசில் வைத்திருந்த பார்லித் தண்ணீரை எடுத்து அவரிடம் கொடுத்தேன்.
மருந்து வேண்டாம் என்றார். உடனே அவர் மனதில் என்ன தோன்றியதோ, என் கையில் உள்ள கிளாசை வாங்கி ஒரு வாய் குடித்தார்.
“நீ கொடுத்தது மருந்து இல்லையம்மா கஞ்சி” என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடிவிட்டார்.
எனக்கு அவரை மறுபடி இம்சை பண்ண மனமில்லை. அப்படியே வெளியில் கூடத்தில் வந்து படுத்திருந்தேன். தூங்கி விட்டேன் போலும்”
பாரதியின் உடல்நிலையை முன்னிட்டு அவரது நண்பர்கள் நீலகண்ட பிரம்மச்சாரி, பரலி.சு.நெல்லையப்பர், லட்சுமண ஐயர் மூவரும் இரவை பாரதி வீட்டில் கழிப்பதென்று முடிவு செய்தார்கள்
நீலகண்ட பிரம்மச்சாரி சொல்கிறார் – “அன்றிரவு பாரதி, தமது நண்பர்களிடம், “அமானுல்லாகானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபீசுக்கு எடுத்துக் கொண்டு போக வேண்டும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அமானுல்லாகான் அப்பொழுது ஆப்கானிஸ்தானத்து மன்னராக இருந்தார்.
1914-15 மகாயுத்தத்தில் ஜெர்மானியருக்கு சாதகமாக இருந்தாரென்று சண்டையில் வெற்றி பெற்ற பிரிட்டீஷ் அவர் மீது கருவிக் கொண்டிருந்தார்கள்.
முன்னிரவில் பெரும்பாலும் மயக்கத்திலிருந்த பாரதி, இறப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னால சொன்ன இந்த வார்த்தைகளே அவரது கடைசி வார்த்தைகளாகும்” என்கிறார் நீலகண்ட பிரம்மச்சாரி.
பாரதி அமரரான நேரம், சரியாக இரவு ஒரு 1:30 மணி.
பாரதியின் மரணச் செய்தியைப் பொழுது விடிந்ததும் நண்பர்களுக்குச் சொல்லி அனுப்பினார்கள்.
வக்கீல் துரைசாமி ஐயர், ஹரிஹர சர்மா, வி.சக்கரைச் செட்டியார், சுரேந்திரநாத் ஆர்யா, மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார், என்.திருமலாசாரியார், குவளைக் கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் வந்திருந்தனர்.
சுமார் 100 பவுண்டிற்கும் (45 கிலோ) குறைவாக இருந்த பாரதியின் உடலை குவளைக் கிருஷணமாச்சாரி, பரலி.சு.நெல்லையப்பர், ஆர்யா, ஹரிஹரசர்மா ஆகியோர் காலை எட்டு மணிக்கு திருவல்லிக்கேணியில் உள்ள கிருஷ்ணாம்பேட்டை மயானத்திற்கு எடுத்துச் சென்றனர்.
பாரதிக்கு மகன் இல்லாததால் இறுதிச் சடங்குகளை யார் செய்வது என்ற பிரசினை எழுந்தது. நீலகண்ட பிரம்மசாரி அவருக்குக் கொள்ளியிடலாம் என்று சொன்னார்கள்.
உடனே அவர், “என்ன நானா? இந்தச் சடங்குகளில் எல்லாம் துளிக் கூட நம்பிக்கை இல்லாதவன் நான். என் தகப்பனாராகவே இருந்தாலும் நான் இந்தச் சடங்குகளைச் செய்ய மாட்டேன். அப்படியிருக்க பாரதிக்காக நான் செய்வேன் என்று எப்படி எதிர்பார்த்தீர்கள்?” என்று மறுத்து விட்டார்.
முடிவில் பாரதியின் தூரத்து உறவினரான ஹரிஹர சர்மாதான் அவருக்குக் கொள்ளி வைத்தார்.
பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்ட தலித் இளைஞர் கனகலிங்கம் அவரது மரணத்தின் போது அவரது அருகில் இருந்ததாகவும், அவரது முகத்தைப் பார்த்த பின்னே பாரதியின் உயிர் பிரிவதாகவும், அவரை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றவர்களில் அவரும் ஒருவர் என்று ‘பாரதி’ படத்தில் சித்தரித்திருந்தார்கள். ஆனால், அது பிழையானது.
கனகலிங்கம் பாரதியைப் பற்றி என் குருநாதர் என்று ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதில், ‘நான் அந்திமக் காலத்தில் அவரது திருமுகத்தைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே’ என்று எழுதியிருக்கிறார்.
தனது கடைசி சில மணிநேரம், யாரையும் பார்க்கவோ, பேசவோ இயலாத மயக்க நிலையில் இருந்துதான் மரணமடைந்தார் பாரதி.
பாரதியின் மரணம் பல கேள்விகளை எழுப்புகிறது பத்து நாட்களாக வயிற்றுக் கடுப்பு இருந்தும் ஏன் அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை? அவருக்கு புதுவையில் இருந்தபோது கஞ்சா பழக்கம் ஏற்பட்டது என்று தெரிகிறது.
அது திடீரென்று நிறுத்தப்பட்டு withdrawal symptoms ஏற்பட்டிருக்குமோ? அல்லது அந்தப் பழக்கம் அவரது உடல் நலத்தைப் பாதித்திருக்குமோ?
அவரது தேகம் மெலிந்து போய் பழைய பாரதியின் சாயல் போல் இரண்டு வருஷங்களுக்கு முன் அவர் புதுச்சேரியிலிருந்து திரும்பி வந்தார் என்கிறது மித்ரன் தலையங்கம்.
(செப்டம்பர் 12ம் தேதி சுதேசமித்ரன் செய்தியும் வெளியிட்டு, ஓர் துணைத் தலையங்கமும் எழுதியது.
‘அவருடைய ஞாபகத்தைப் பாராட்டி மதியம் இரண்டு மணியோடு வேலையை நிறுத்தப்படுவதால் ஏகபட்ட சமாசாரங்கள் இன்று மித்ரனில் பிரசுரமாகமாட்டா’ என்ற ஓர் குறிப்பும் தலையங்கத்தில் காணப்படுகிறது.)
அவர் ஏன் மருந்து உட்கொள்ள மறுத்தார்? ஏதேனும் ஓர் காரணத்தால் மனச் சோர்வு, விரக்தி ஏற்பட்டிருந்திருக்குமோ?
‘நிலச் சுமையென’ வாழ்கிறோமோ என்று எண்ணியிருந்திருப்பாரோ? குடும்பத்தினர் மீது கோபமோ? பணியிடத்தில் வருத்தம் இருந்ததாகத் தெரியவில்லை.
அவர்கள் எப்போது இவர் வேலைக்குத் திரும்புவார் என கேட்டனுப்புவதும், இவர் கட்டுரை ஒன்று எழுத வேண்டியிருக்கிறது என்று நண்பர்களிடம் சொல்லுவதும் இதைக் காட்டுகிறது.
பாரதியின் கடைசிகால எழுத்துக்கள் ஆட்சியைப் பற்றிய விமர்சனமாக இல்லாமல், சமூக விமர்சனமாகவும், ஆன்மீக விசாரமுமாக இருக்கிறது.
கடலூர் சிறையிலிருந்து வெளிவரும் போது எழுதிக் கொடுத்த உறுதிமொழி அவர் கையைக் கட்டிப் போட்டிருக்கலாம்.
அதனால் மனமொடிந்து போயிருந்திருக்கலாம். ஓர் எழுத்தாளனுக்கு எழுதுவதைத் தடை செய்வதைப் போல ஓர் தண்டனை இல்லை.
1921-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் கருங்கல்பாளையத்தில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுதான் கடைசிச் சொற்பொழிவு.
அதன் தலைப்பு: மனிதனுக்கு மரணமில்லை!
தகவல்களின் மூலம் (source) ரா.அ.பத்மநாபன்/ சித்ரபாரதி.
என் கயல் பருகிய கடல் நூலிலிருந்து…
– நன்றி: மாலன் நாராயணன் முகநூல் பக்கத்திலிருந்து….