வசந்தகுமாரனுக்கு எல்லாமே வசப்படும்!

– கவிஞர் விக்கிரமாதித்யன்

வாசிப்பின் ருசி:

கவிஞர் கோ.வசந்தகுமாரனின் செறிவான கவிதை நூலுக்கு நவீனக்கவி விக்கிரமாதித்யன் எழுதியிருக்கிற முன்னுரை ஒன்றே போதும், நூலின் சிறப்பைச் சொல்ல.

விக்ரமாதித்யனின் முன்னுரை:

நாலடி சிற்றெல்லை, எட்டடி பேரெல்லை என்று தொகுக்கப்பெற்ற குறுந்தொகையும், ஈரடியால் ஆன குரலும் காலம் காலமாகத் தமிழ் மண்பதையில் கொண்டாடப்பட்டு வருகின்றன.

சமகாலத்தில் எழுதப்பெறும் குறுங்கவிதைகள் கண்டுகொள்ளப்படுகின்றனவா எனத் தெரியவில்லை. என்றபோதும், கவிஞர்கள் ஆக்கம் செய்தே வருகிறார்கள்.

ஜென், பௌத்த தத்துவப் பின்புலம் கொண்ட ஜப்பானிய ஹைகூக் கவிதைகள் உலக அளவில் அறியப் பெற்றவை. குறுந்தொகைக் கவிதைகள் வாழ்வியல் அம்சம் கொண்டவை என்பதுதான் அவற்றின் அருமையே.

ஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் ஜீவனுடன் இருப்பவை என்றார் அமைச்சர் க.காளிமுத்து. அரசியலில் இருந்து கொண்டே ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறார்.

அந்த ஆய்வேட்டை பத்திரிக்கைப் பணிக்கு நடுவேயும் படித்துவிட்டு நெகிழ்கிறார் கவிதை விமர்சகர் ராஜமார்த்தாண்டன்.

விக்ரமாதித்யன், சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் சொல்லி வருகிறான்; என்ன காரணம்? நுண்ணிதினும் நுண்ணிதான அக வாழ்வை உணர்த்துகிறது என்பதனால்தானே?

இந்தக் கண்ணி எங்கே அறுபட்டது? எப்படித் தொலைத்தோம்? தெரியவில்லை.
நவீனக் கவிதையில் குறுங்கவிதைகள் குறைவுதாம்.

நகுலன், சி.மணி, எஸ்.வைத்தீஸ்வரன், ஷண்முக சுப்பையா, பிரமிள், ஞானக்கூத்தன், கல்யாண்ஜி, கலாப்ரியா, விக்ரமாதித்யன் முதலானோர் எழுதியிருக்கிறார்கள் தாம். என்றாலும், ஒரு தொகை நூல் அளவுக்குக் கூட வராது. மின்வெட்டுப் போலவே வானவில் மாதிரியோதான் பெரும்பான்மையும்.

சித்திரங்கள் / தெறிப்புகள் இப்படியானவைதாம். பொருட்செறிவுள்ளவை கொஞ்சம்தாம். குறுங்கவிதை அமைவதே அரிது என்றுதான் தோன்றுகிறது.

இங்கு வெகுவாகப் பேசப் பெற்றவை இரு கவிதைகள் தாம். ஒன்று; ‘இல்லாமல் – இருப்பது’ எனும் தலைப்புள்ள நகுலன் கவிதை. இரண்டு; ‘காவியம்’ எனும் தலைப்பிலுள்ள பிரமிள் கவிதை.

“இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல் போகிறோம்”
(நகுலன் கவிதைகள். பக்கம்-163.)

“சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது”
(பிரமிள் கவிதைகள். பக்கம்-59.)

இக்கவிதைகள் நகுலன், பிரமிள் இருவரின் அடையாளமாகவே இலங்குபவை.

இந்த அளவுக்கு வீச்சுக் கொண்ட கவிதைகளை வாசகன் ஏந்தி வைத்துக் கொள்வான் தானாகவே. யாரும் முன்மொழியவோ, வழிமொழியவோ வேண்டியதில்லை.

கவிஞர் கோ.வசந்தகுமாரன் இயற்றி, தொகுத்து வழங்கும், ‘முறிந்த வானவில்’ முற்ற முழுக்க குறுங்கவிதைகள் கொண்டதுதான்.

பெரிதும் தன்னிலைக் கூற்றாகவே அமையப்பெற்றது. காதல் கவிதைகள் அனேகம் உண்டு. கவியின் பார்வையிலே கவிதையும்.

“ரோஜாவுக்கும்
முள்ளுக்கும்
இடையே ஏறி இறங்கி
விளையாடுகிறது
எறும்பு”

– இந்தக் கவிதை அவதானிப்பு மட்டும்தானா? பூடகமாக மொழிந்திருக்கும் பொருள் என்ன? வாசகப் பங்கேற்புக்கே விட்டுவிடலாம்.

“வாழ்க்கையை
எழுதச் சொல்கிறாய்.
நான் வாழவே இல்லையே
எப்படி எழுதுவது?”

– இப்படிக் கேட்டால்? இதுபோல் சொல்கிறவர்களைப் பகடி பண்ணுகிறாரா? வாசக யூகமே சரியாக இருக்கும்.

“நதியை வரைய
மணல் வண்ணம் மட்டுமே
போதுமானதாய் இருக்கிறது
ஓவியனுக்கு”

– உண்மைதான். நீர் ஓடும் ஆற்றுக்குத்தானே வேறு வேறு நிறம் வேண்டியிருக்கும். நதியை ஒட்டிய பச்சை வயல் வெளி, மீன் தேடி வரும் கொக்குகள், நீராட வந்து செல்லும் ஆண்கள் / பெண்கள் /குழந்தைகள் என வண்ணங்கள் இல்லாத நதிக்கு…? இவ்வளவையும் சொல்லாமல் சொல்கிறது இந்தக் கவிதை.

“இலைகளில் மறைந்த
பச்சைக்கிளியைக்
காட்டிக் கொடுத்துவிட்டது
செக்கச் சிவந்த அலகு”
– அழகியல்!.

“சிகரம் விட்டு இறங்கி வா
உன் பசி தீர்க்கும் உணவு
மலை அடிவாரத்தில் தான்
விளைகிறது”

– வாஸ்தவம்தான் தன் முனைப்பில் / அகந்தையில் இருப்பவர்களைக் கண்ட கசப்பில் கூறுகிறார் என்றே கொள்ளவேண்டும்.

“முகக்கவசத்துக்குள் பூத்து
அங்கேயே உதிர்ந்து விடுகிறது
யாருக்கும் பயனற்று
ஒரு புன்னகை”

– சமகாலச் சூழலியக் கவிதை.

என்னைக் கேட்டால் கவிதை என்பதே உணர்தலின் பாற்பட்டதே ஆகும். வாசகன் பொருட்டே உரையாசிரியர்கள் வருகிறார்கள்.

“தூங்கும் பொழுது
மொட்டாகவும்
விழித்திருக்கும் பொழுது
வண்ணத்துப் பூச்சியாகவும்
இரண்டு அவதாரங்கள்
எடுக்கின்றன உன் கண்கள்”

– பெண்ணைப்பற்றி என்ன எழுதினாலும் கவிதை ஆகிவிடும் போல.

“நீ எனக்கு எழுதிய
மிகச்சிறந்த காதல் கடிதம்
நான் அருந்த நீ கொணர்ந்த
ஒரு கோப்பைத் தேநீர்”

“இரவுக்கும் பகலுக்கும்
இடையே நிற்கிறாய்.
உன் ஒரு கன்னத்தில்
செந்தூரமும்
மறு கன்னத்தில்
மஞ்சளும்
பூசுகிறது வானம்”

– இரண்டுமே ‘ரொமான்டிக்’ தாம். முன்னதில் சொல்வது வேறு. பின்னதில் கற்பனாதீதம் முழுதாகவே.

“பேரழகு
சொற்களுக்கு இடையேயான
மௌனத்தை நீ
வெட்கத்தால் நிரப்புவது”

– சாந்த சொரூபமான காதல் கவிதை!

“மரபுகளை மீறியே
முறியடிக்க முடிகிறது
பெண்மையின் சாகசங்களை”

– அறிந்தவர் அறிவார். உணர்ந்தவர் உணர்வார். அகப்பாடலுக்கு விளக்கமும் வேண்டுமா?

பொதுவாகவே குறுங்கவிதைகள் ஒரு வரையறைக்கு உட்பட்டவை. ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், தெறிப்புகளாக அமையும் வாய்ப்பே நிரம்பவும் தோன்றுவது தானே கவிதை.

ஆதலினால் இந்த எல்லைகளை உள்ளம் கொண்டே அவற்றை அணுக வேண்டி வருகிறது.

‘முறிந்த வானவில்’ கவிதைகளை இந்த இலக்கணப்படியேப் கண்டு சொல்கிறேன். நண்பர் கோ.வசந்தகுமாரன் ஆக்கத்திலும் நீர், நிலம், நெருப்பு, காற்று, வானம், ஐம்பூதங்களும் இடம்பெற்றுள்ளன. பெண்மையும், நளினமும், நாணமும் கோலம் கொண்டுள்ளன.

வாழ்வின் பல்வேறு அம்சங்கள், உலகின் வெவ்வேறு தன்மைகள் எல்லாம் மானுடத்தை முன்னிறுத்திக் கோட்டோவியங்கள் ஆகியுள்ளன. வேறென்ன வேண்டும்? இன்னும் இன்னும் நிலைபேறு கொண்ட கவிதைகள் எழுத வாழ்த்துகிறேன்.

கவிதையில் ஈடுபாடும் சக கவிஞர்கள் மீது மதிப்பும் வைத்திருக்கும் வசந்தகுமாரனுக்கு எல்லாமே வசப்படும். சதா இதே சிந்தனை என்றானால் சகலமும் கைகூடும். நல்லது.
****
நூல்: முறிந்த வானவில்
ஆசிரியர்: கோ.வசந்தகுமாரன்
vasanthakumarg.8@gmail.com
பேச: 9962208899
தமிழ் அலை வெளியீடு.
விலை ரூ-100/-

You might also like