பொதுவாக, கலைத்துறையே மனிதனின் இதயத்திலிருந்து பூப்பது தான். அறிவு, தாக்கத்தின் பாதையில் மூளையிலிருந்து பிறக்கிறது.
அறிவுத்துறை எதிலும், எத்தகைய மனநிலை உள்ளவனும், தர்க்க முறையைச் சரியாகக் கையாளும்போது, வெற்றி பெற முடியும். கலைத் துறையில், ஒரு குறிப்பிட்டவித மனநில தேவை.
கலை, உணர்ச்சிப் பாதையிற் செல்வது. ஆகவே ஒருவன், உணர்ச்சிகளை மதித்து
அவற்றுக்கு ஈடுகொடுக்கும் மனநிலை பெற்றவனாக இருக்க வேண்டும். அப்போது தான் கலை சாத்தியம்.
‘உண்மை’யான கலைஞன் எவ்வளவு உக்கிரமாக உணர்ச்சியை வெளியிட்டாலும் அது அருவருப்புத் தராது. ஏனெனில், அவன் தனது இயல்பான உணர்ச்சியைச்
சொல்கிறான்.
கலைக்கு இயல்பாகத் தோன்றும் உணர்ச்சிதான் முக்கியம். இந்த இயல்பிலும்
சுய உணர்ச்சியைக் கெளரவிக்கும் மனநிலையிலும் ஒரு எழுத்தாளன் வேர்விட்டிருக்கும்போது, அவன் தன் தேசத்துக்கும் தன் சமூகத்துக்கும், தன் சுய இயல்பின் மூலமும் தன் சுய உணர்ச்சியின் மூலமும்தான் மதிப்பளிக்கிறான். அவனால் தன் பார்வைக்குத் துரோகம் செய்யமுடியாது.
தன்னைத்தானே ஏமாற்றமுடியாததால், தன்னைச் சூழ்ந்துள்ளது எதுவோ, தன் அனுபவத்தைத் தூண்டியது எதுவோ, அதைத்தான் சொல்கிறான்.
அவனது எழுத்தில், தனது தனிமனிதப் பார்வை என்ற சாளரத்தின் மூலம் தெரியும் வெளிநடப்புத்தான் இலக்கியமாகிறது.
‘தனது’ எனும்போது, அவன் என்னென்னத்தால் எல்லாம் பாதிக்கப்பட்டானோ, அவைகளின் நிழல்களும் அந்தத் ‘தனது’ என்ற சொரூபத்தில் படிந்திருக்கும். அவனை அவனது சூழலும் தேசமும் பாதிப்பவை.
எனவே, எந்தச் சுத்தமான கலைஞனும் தன் தேசிய இயல்பின் தன்மைகளை, தான் எழுதுமுன்பே தன்னுள் உறிஞ்சிக் கொண்டவன்.
உலகின் எல்லா ‘நல்ல’ எழுத்துக்களிலுமிருந்து இது தெரியவருவதுதான்.
ஆகவே இலக்கியத்தில் தேசியம் என்பதுக்கு, இதை மீறி ஒரு விஷேசமான அர்த்தம் இல்லை.
ஒரு சுத்தமான கலைஞன், தன் நாட்டின் பெயரையே குறிப்பிடாமல் தன் நாட்டைப் பற்றிச் சொல்லக்கூடியவன். நாட்டைப் ‘பற்றி’ என்பது தவறு. நாடே அவனது விளைநிலம்.
ஆகவே நாட்டின் தன்மை அவனில் ஏறியிருக்கும். அவன் தன்னைப் பற்றிச் சொல்லும்போது தான், அவனிலிருந்த அவன் புரண்ட மண்ணின் வாசம் அடிக்கிறது. அதுதான் இலக்கிய அர்த்தத்தில் தேசியம்.
தேசத்திலிருந்து தனிமனிதன் வரைகுவியும் பாதையில், உணர்ச்சி என்கிற ஓர் ஒற்றுமையைக் காண்கிறவன் தான் கலைஞன்.
அவன் குடும்பத்தின் மூலையில், நம்பிக்கை என்கிற குத்துவிளக்குச் சுடரையும் அதன் கீழேயே விழும் அவநம்பிக்கையின் நிழலையும் பார்ப்பதன் மூலம்,
தன் தேசத்து ஒளியையும் இருளையும் மனிதன் என்ற பார்வையில்,உலகு மீதே, ஒருபுறம் எரியும் ஒளியையும் மறுபுறம் அப்பிய இருளையும் தீட்டிவிடுவான்.
அவனது மனம் எவ்வளவுக்கு எவ்வளவு தன் சுயத் தன்மையை உணர்கிறதோ, அவ்வளவுக்கு அவனது இதயச் சாளரம் தெளிவடையும்.
இதர சக்திகளின் சந்நிதானத்தில், கலைஞன் தன் மனது இணங்காமல் பலியாகத் தலைகுனியும்போது, இதயம் நின்றுவிடும். இதய உணர்ச்சியில் இயங்கும் கலையியல் அங்கே உயிர் சிந்தி வீழும்.
– பிரமிள்