இந்தியாவில் கம்யூனிஸ்டு கட்சியின் வரலாறு நீண்ட நெடியது.
காங்கிரஸ் கட்சியைப் போன்றே கம்யூனிஸ்ட் கட்சியும் நாடு விடுதலை அடையும் முன்னரே வேர் விட்டு வளர்ந்த கட்சி.
1925 ஆம் ஆண்டு கான்பூரில் அந்த கட்சி உதயமானது. அந்த ஆண்டில் இருந்து கம்யூனிஸ்டுகள் சரித்திரத்தை புரட்டினால், படித்து முடிக்க ஒரு மாமாங்கம் ஆகிவிடும்.
தமிழகத்தில் கம்யூனிஸ்டுகளின் வளர்ச்சியையும், கட்டெறும்பாய் தேய்ந்த வரலாற்றையும் மட்டும் சுருங்கப் பார்க்கலாம்.
சுதந்திரம் அடைந்த பின் 1952 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு முதன் முதலாய் தேர்தல் நடைபெற்றது.
அப்போது ’மெட்ராஸ் மாகாணம்’ என தமிழகம் அழைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் மெட்ராஸ் மாகாணத்தில் இடம் பெற்றிருந்தன.
அப்போது மெட்ராஸ் மாகாணத்தில் மொத்தம் 375 தொகுதிகள் இருந்தன. 1952 தேர்தலில் யாருக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை.
காங்கிரஸ் கட்சி 152 தொகுதிகளில் வென்றது. கம்யூனிஸ்டுகள் 62 இடங்களை கைப்பற்றி இருந்தார்கள்.
உழைப்பாளர் கட்சி உள்ளிட்ட சின்ன அமைப்புகள், எஞ்சிய தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தன.
இந்தியாவில் முதன் முதலாக கம்யூனிஸ்ட் ஆட்சி 1957 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் அமைந்தது. அதற்கு முன்னர், 1952 ஆம் ஆண்டிலேயே தமிழகத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி மலர்ந்திருக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் சதியால் கம்யூனிஸ்ட் ஆட்சி அமையாமல் போய் விட்டது.
இன்றைய குடியரசுத் தலைவர் பதவிக்கு நிகராக ஆங்கிலேயர் ஆட்சியில் கவர்னர் ஜெனரல் எனும் பதவி இருந்தது.
அந்தப் பதவியை வகித்த ராஜாஜியை, முதலமைச்சர் பதவியை ஏற்க நிர்ப்பந்தம் செய்தது காங்கிரஸ்.
காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆதரவைப் பெற்று, கம்யூனிஸ்டுகள் ஆட்சி அமைத்து விடுவார்கள் என்ற சூழல் நிலவியதால், முதலமைச்சர் பொறுப்பை ஏற்க முன் வந்தார் ராஜாஜி.
சின்னக் கட்சிகளை, தன் தூண்டிலில் சிக்க வைத்து பெரும்பான்மையை உருவாக்கி கொண்டார் ராஜாஜி.
அதன் பின்னர் கம்யூனிஸ்டுகள், கடும் ஒடுக்குமுறைகளுக்கு ஆளானார்கள். அந்த நேரத்தில் திமுகவும் வளர ஆரம்பித்ததால், கம்யூனிஸ்ட் கட்சி படிப்படியாக சரியத் தொடங்கியது.
மெட்ராஸ் மாகாணத்துக்கு 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சி நான்கு தொகுதிகளில் வெற்றி கண்டது.
62 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே சட்டசபைக்கு போக முடிந்தது. அப்போது ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பிரிந்து, தங்களுக்கென்று தனித்தனி சட்டசபைகளை அமைத்து கொண்டன.
அடிமேல் அடியாக 1964 ஆம் ஆண்டு தேசிய அளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றியது.
தமிழகத்திலும் பி.ராமமூர்த்தி உள்ளிட்ட மூத்தத் தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஐக்கியமானார்கள்.
ஒன்றாக இருந்தபோதே தேய ஆரம்பித்த கம்யூனிஸ்ட் கட்சி, இரண்டான பின் பத்தோடு பதினொன்றாகிப்போனது.
கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் அளித்த சுவாசத்தால்தான், தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள், தங்கள் இருப்பைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது வரலாற்று உண்மை.
எதிரும், புதிருமாக முறைத்துக் கொண்டிருந்த இரு கம்யூனிஸ்டுகளும் அவசரநிலைக்கு பிறகு, தேசிய அளவில் ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பித்தனர்.
இருந்தாலும் தமிழகத்தில் அவ்வப்போது எதிரெதிர் திசைகளில் பயணித்த நிகழ்வுகளும் உண்டு.
அதிமுகவை எம்.ஜி.ஆர். ஆரம்பித்தபோது, திண்டுக்கல் இடைத்தேர்தலில் இரு கம்யூனிஸ்டுகளும் மாயத்தேவரை ஆதரித்தார்கள்.
ஆனால், 1977 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரசோடு சிபிஐ கூட்டணி வைத்து, 5 தொகுதிகளில் மட்டும் ஜெயித்தது.
அதிமுகவுடன் கூட்டணி வைத்த சிபிஎம் 12 தொகுதிகளைக் கைப்பற்றியது.
1980 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றன. சிபிஐ 9 இடங்களிலும், சிபிஎம் 11 இடங்களிலும் வென்றன.
1952 ஆம் ஆண்டுக்கு பிறகு இரு கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து கூடுதல் (20) தொகுதிகளில் வென்றது இந்தத் தேர்தலில் தான்.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு 1989 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சி.பி.எம். 15 தொகுதிகளில் வென்றது.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி வைத்த சிபிஐ 3 இடங்களில் மட்டுமே ஜெயித்தது.
1996 ஆம் ஆண்டு தேர்தலில் இந்த எண்ணிக்கை தலைகீழாக மாறியது.
அந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்ட சிபிஐ 8 இடங்களில் வாகை சூடியது.
அந்தத் தேர்தலில் மதிமுகவுடன் சிபிஎம் கூட்டணி சேர்ந்தது. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே சிபிஎம் ஜெயித்தது. மதிமுக ஒரு இடத்திலும் வெல்லவில்லை என்பது தனிக்கதை.
2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் பேரழிவை சந்திக்க நேர்ந்தது. அந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் இரு கழகங்களுடனும் அவர்கள் கூட்டணி சேரவில்லை.
மதிமுக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், தமாகா ஆகிய கட்சிகளுடன் இரு கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து மக்கள் நலக்கூட்டணி எனும் பெயரில் ஒரு கதம்ப அணியைக் கட்டமைத்தனர்.
இந்த அணி ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை.
தமிழக வரலாற்றில், அந்த ஆண்டுதான் ஒரு உறுப்பினர் கூட கம்யூனிஸ்டு கட்சிக்கு எம்.எல்.ஏ. இல்லாத ஆண்டாகும்.
கழகங்களால் மட்டுமே கம்யூனிஸ்டுகள் தமிழகத்தில் உயிர்ப்புடன் உள்ளனர் என்பதற்கு 2016 ஆம் ஆண்டு தேர்தலே சாட்சி.
– பி.எம்.எம்.