– எழுத்தாளர் அசோகமித்திரன்
“வன்முறை எழுத்துகள், தளைகளற்ற எழுத்துக்கள் எல்லாம் உயர்ந்த எழுத்துக்கள் ஆகாது. உண்மையைப் பார்க்கப் போனால் தரமான வாழ்க்கை என்பது சிறுசிறு கட்டுப்பாடுகள் கொண்டதாகும்.
மகாத்மா காந்தியை விட ஒரு நிறைவான வாழ்க்கையை யாரும் வாழ்ந்திருக்க முடியாது. எனவே வாழ்க்கையிலும் சரி, படைப்பிலும் சரி கட்டுப்பாடுகள் தேவை.
மிருகங்களிலும் கூட சில கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றை மீறினால் அவை சேர்த்துக் கொள்ளாது. அதனால் இவ்வகை எழுத்துக்கள் ஒன்றும் விசேஷ நன்மை பயக்காது.
ஆனால் இதெல்லாம் ஒரு பேஷன் தான். நானும் இதுமாதிரி எழுதியிருக்கிறேன் என்று காட்ட இவை உதவுமே தவிர, இதை ஒரு சாதனை என்று சொல்ல இயலாது.
இதைப் படிப்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் ஆண்கள் அதிகம் படிப்பவையாக இவை இருக்குமே தவிர எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளப்படுவதாய் இருக்காது.
ஒரு முறை ஒரு கூட்டத்தில் சுந்தரராமசாமி பேசும் போது, “இவருடைய கதையில் வரும் அதிகபட்ச ஆயுதம் அரிவாள்மணைதான்” என்று சொன்னார்.
உண்மைதான். என்னுடைய நோக்கம் ஒரு சின்னக் குழந்தை கூடப் படிப்பதாய் இருக்க வேண்டும் என்பதுதான். அதற்குப் புரியாததாய் இருக்கலாம். ஆனால் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. எனது சுயதர்மம் அதுதான்.”
- எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களிடம் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி தென்றல் இதழுக்காக அரவிந்த் சுவாமிநாதன் எடுத்த நேர்காணல்.– நன்றி : தமிழ் ஆன்லைன்