சீன தத்துவ அறிஞர் ‘லாவோட்சு’வைப் பற்றிய ‘தாவோ தே ஜிங்’ நூல் குறித்து, பேராசிரியர் ம.பெ.சீனிவாசன் 9 பக்க அளவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
அதிலிருந்து சில பகுதிகள்…
“நம்மில் பலரும் பள்ளிப் பருவத்திலேயே யுவான் சுவாங் என்ற சீன யாத்திரிகரைப் பற்றி அறிந்திருக்கக் கூடும். வரலாற்றுப் பாடத்தின் வழி மனத்தில் வாங்கிக் கொண்ட செய்தி அது.
அதற்கும் மேலாக 2400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கன்பூசியஸ் என்னும் சீன ஞானியைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கலாம்.
ஆனால் அவரின் சமகாலத்தவராகக் கருதப்படும் அதே சீனத்தைச் சேர்ந்த லாவோட்சு (Lao Tsu, கி.மு. 551 முதல் கி.மு. 499 முடிய) என்னும் மற்றொரு ஞானியைப் பற்றியோ அவரது மெய்யியல் சிந்தனைகள், ‘தாவோயிசம்’ என்று அழைக்கப்படுவது பற்றியோ நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்பார்கள்?
ஆங்கிலத்தில் நல்ல பயிற்சியும் பல்துறையிலும் பரந்து விரிந்த வாசிப்புப் பழக்கமும் உடையவர்களுக்கே தெரிந்த செய்திகள் இவை.
ஆயின், மற்றவர்களுக்கு? தமிழ் மட்டுமே தெரிந்த தீவிரமான வாசகர்களுக்கு?
நேற்றுவரை இவை எட்டாக் கனிதான்.
இன்றோ, அறிவுத் தேட்டமிக்க ஒரு படிப்பாளியின் பெருமுயற்சியின் மூலம் ‘கையிலங்கு கனி’யாய் மிக எளிதில் அந்நூல் கருத்துகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.
இந்த ஞானக் கொடையை நல்கியவர் சந்தியா நடராஜன். மொழிபெயர்ப்பு என்னும் பெயரில் கொட்டிக் கவிழ்க்காமல் தாம் உள்வாங்கிக் கொண்ட நூலின் சாரத்தை மனங்கொள்ளத்தக்க விளக்கத்தோடு சிந்தாமல் சிதறாமல் தமிழில் தந்திருக்கிறார் அவர் என்றாலும் வாசிப்பின் தொடக்கநிலையில் லாவோ ட்சு, தாவோ தே ஜிங் (Tao Te Ching)’, வு-வே (Wu – wei), யின்-யாங் என்ற சீனமொழிப் பெயரீடுகள் நமக்கு அவ்வளவாகப் பிடிபடவில்லை.
கழுவுகிற போதே நழுவுகிற ஆரல்மீனைப் போல நினைவில் நிற்காமல் அவை விலகிச் செல்வது என்னவோ உண்மைதான்.
நூலைப் படிக்கப் படிக்க மனத்திற்படியும் கருத்துகள் லாவோட்சு-வையும் அவரின் தாவோயிசத்தையும் நமக்கு நெருக்கமாக்கி விடுகின்றன. கல்லைக் குழித்து அதில் நீரை நிறுத்தியது போல நினைவில் நிலைபெறச் செய்கின்றன.
லாவோ ட்சு என்னும் ஞானி ‘மொழிபெயர் தேய’த்தராயினும் நம் நேயத்திற்கு உரியவராகிறார். அவரது கருத்துக்களும் நமக்கு அந்நியமாகப் படவில்லை. எங்கேயோ கேட்ட குரலும் எப்போதோ பார்த்த முகமுமாக நம்மைப் பரவசப்படுத்துகின்றன…
நீள நினைக்க நினைக்க வியக்கவைக்கும் நயத்தக்க சிந்தனை இது. வெற்றிடம், முனைப்பற்ற செயல் (பற்றற்ற செயல்), மனச்சாய்வுகள், இன்மை – இவை தாவோயிசத்தின் அடிப்படைத் தன்மைகள் (ப.73) என்று விளக்குகிறார் சந்தியா நடராஜன்.
“அறிவுச் சேகரம் அவசியமற்றது… அனுபவம் மட்டுமே பிரதானம்… எண்ணங்களற்ற மனவெளியில் எழுவதே அனுபவம்… அதுவே எல்லையில்லாததோர் ஆனந்தப் பெருவெள்ளம்” என்று தாவோயிசம் பற்றிக் குறிப்பிடும் நடராஜன்,
35 பக்கங்களில் ‘தாவோ தே ஜிங்’ முதல் ‘ஆலன்வாட்ஸ் சொன்ன சீனக்கதை’ முடியவுள்ள ஏழு தலைப்புகளை தாவோயிசத்தைப் புரிந்து கொள்வதற்குக் கூடிய மட்டிலும் வாசகரை ஆயத்தப்படுத்தி விடுகிறார்.
விரிவான இந்த ‘அறிமுக’த்தை அடுத்து, லாவோட்சுவின் 81 பாடல்களுக்கான ‘சாரமும் விசாரமும்’ என்னும் பகுதியைச் சந்தியா நடராஜனின் எழுத்தில் படிப்பவர்கள் தாவோயிசம் என்னும் ஆனந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கித் திளைப்பது நிச்சயம். அவரின் தமிழ் நடையும் விளக்கமும் அப்படி.
“வானத்தில் சிறகசைப்பு இல்லாமல் மிதந்துசெல்லும் பறவையை ஒத்திருக்கிறது மனசு. பாரமற்ற மனசு” (ப.58)
“ஆயிரங்கனவுகளில் மனம் அலைபாய்ந்தாலும் விடிந்ததும் எதிரே நிற்பது யதார்த்தம் மட்டுமே. நமது வாழ்வு ஒரு கனவு.
கனவை விரட்டிச் செல்பவர்கள் தம் நிலை அறிவதில்லை. அதீதம் எதிலுமே ஆபத்தானது. நமது உயரத்தை நாமறிவோம்.” (ப.113)
வெற்றியின் உச்சம் தோல்வியின் தொடக்கம் என்பதை உணர். ஆரவாரத்தில் அகப்பட்டுக் கொள்ளாதே”. (ப.115)
“உலகம் இயங்குவது சமநிலையிலும் ஒத்திசைவிலும் தான்… அதற்குத் தேவை, நமது தேவைக்கு மேல் யாதொன்றும் தேவையில்லை என்ற மனநிலை மட்டுமே. அமைதி உலகை ஆளட்டும்” (ப.152)
“ஞானி போதனை செய்வதில்லை. ஆனால் கற்பித்து விடுகிறான்” (ப.217)
“இளகிய நெஞ்சம் இளைப்பாறும்; இதம் ஈட்டும்; வாகை சூடும். மென்மையான மனமும் கரைந்துருகும் குணமும் வாழ்வாங்கு வாழ லாவோட்சுவின் பரிந்துரைகள்” (ப.227)
இப்படிச் சின்னஞ்சிறு தொடர்களில் ‘மொழிக்கு மொழி தித்திப்பாக,’ உள்ள கவித்துவம் தலைகாட்டும் தமிழ்நடை சந்தியா நடராஜனுக்குக் கை வந்திருக்கிறது.
தத்துவார்த்தக் கருத்துகளை விளக்கும் போது பூந்துகள்களைத் தூவிச் செல்வதுபோல எழுதிச் செல்வது அரிதில் காணக்கூடிய அதிசயமே.
‘விஷய கனமுள்ள ஒரு நூலைப் படிக்கிறோம்’ என்ற உணர்வின்றியும் கீழே வைக்க மனமின்றியும் ஒரேமூச்சில் படிக்கத்தக்கதாய் அமைந்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
தமிழிலக்கியங்களில் பரவலான பயிற்சியுள்ளவர்களுக்கு இந்நூல் தரும் மகிழ்ச்சி அளவில்லாதது.
காரணம், சீன மெய்ஞ்ஞானியின் சிந்தனைகளுக்கிடையே திருவள்ளுவரும், கணியன் பூங்குன்றனாரும், இளங்கோவடிகளும், கம்பரும், திருமூலரும், மணிவாசகரும், தாயுமானவரும், அருணகிரியாரும், பரஞ்சோதி முனிவரும், குமரகுருபரரும், வள்ளலாரும், பிற்காலத்து ஒளவையும் கூட வந்து முகங்காட்டுகிறார்கள்.
அந்த அறிவறிந்த புலமைப் பரம்பரையின் தத்துவச் சிந்தனைகள் தாவோயிசத்தோடு ஒத்துப்போவதை நடராஜனின் விளக்கம் நம் கண்முன் நிறுத்துகிறது; மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறது.
“லாவோட்சுவின் தத்துவ தரிசனத்தைத் தமிழில் திரும்பிய பக்கமெல்லாம் காண முடிகிறது” (ப.195) என்று அவர் பதிவு செய்திருப்பதை நாம் அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்.
மேலே குறித்தவர்கள் மட்டுமன்றி மகாகவி பாரதி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் ஆகிய சமகாலத்தவரும் சந்தியா நடராஜனின் விளக்கத்திற்குத் துணை நிற்கிறார்கள். தமிழ்நாட்டுப் பழமொழிகளும் கூட அவருக்குக் கை கொடுத்திருக்கின்றன.”
நன்றி: முகநூல் பதிவு.