தொடர்ச்சியாக இமாலய வெற்றிகளை கொடுத்த இயக்குநர் ஷங்கர் இப்போது துவண்டு போய் விட்டார்.
கடந்த 6 ஆண்டுகளாக, அடுத்தடுத்து கால் தடுக்குவதும், பின்னர் ‘தம்‘ பிடித்து எழுவதுமாக இருக்கும் அவருக்கு மீண்டும் சோதனை.
ஜென்டில்மேன், காதலன் படங்களை முடித்து விட்டு தனது மூன்றாவது படமாக அவர் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்’ படத்தை ஆரம்பித்தார்.
அப்போது தான் அவருக்கு திருமணம் ஆகியிருந்தது. வசனம் எழுதியதோடு அந்த படத்தின் உருவாக்கத்தில் சுஜாதா, ஷங்கருக்கு மிகவும் துணையாக இருந்தார்.
பாண்டி பஜாரில் உள்ள ஷங்கர் அலுவலகத்துக்கு சுஜாதா தினமும் வந்து விடுவார்.
சுஜாதா அந்த சமயத்தில் குமுதம் ஆசிரியராக இருந்ததால், ஷங்கர் உள்ளிட்ட பட யூனிட் ‘ஆசிரியர்’ என்றே சுஜாதாவை அழைக்கும்.
– 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் எடுத்து, அது வெற்றி பெற்றதால், இந்தியன் படத்தையும் இரண்டாம் பாகம் எடுக்க ஆசைப்பட்டார் ஷங்கர். அன்று ஆரம்பித்தது அவருக்கு கஷ்ட காலம்.
2017 ஆம் ஆண்டு இந்தப் படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம்.
ஆனால், 2019 ஆம் ஆண்டில் தான் ஷுட்டிங் போனார்கள். ஆரம்பத்திலேயே அபசகுணங்கள். மேக்கப் திருப்தி இல்லை என கமல் முறைத்தார்.
ஒரு வழியாக சரி செய்தார்கள். இரண்டு ஆண்டு காலம் கொரோனாவால் படப்பிடிப்பு நிறுத்தம்.
மீண்டும் ஷூட்டிங் தொடங்கிய சமயத்தில் லைகாவுக்கு பொருளாதாரச் சிக்கல்கள். படம் நிறுத்தப்பட்டது.
தயாரிப்பில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட், பங்குதாரராக இணைந்ததால் படம் மீண்டும் வளர்ந்தது.
பூந்தமல்லி அருகே நடைபெற்ற படப்பிடிப்பில் கிரேன் விழுந்து யூனிட் ஆட்கள் 3 பேர் பலியானார்கள்.
போலீஸ் கேஸ், வழக்கு என ஷங்கர் தலை உருண்டது. ஒரு வழியாக மீண்டு இந்தியன் படப்பிடிப்பை முடித்து விட்டார் ஷங்கர்.
கிராபிக்ஸ் வேலைகள் நடக்கின்றன. இந்த வேலை முடிய 6 மாதம் அல்லது ஓராண்டு ஆகும் என பல்வேறு செய்திகள்.
ஷங்கர் தனது கேரியரில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கியது கிடையாது.
இந்தியன்-2 தாமதமானதால், ராம் சரண் ஹீரோவாக நடிக்க ‘கேம் சேஞ்சர்’ எனும் தெலுங்கு படத்தை சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்தார். அவர் நேரடியாக இயக்கும் முதல் தெலுங்கு படம் இது.
ராம் சரண் ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கும் இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். தமிழ், இந்தி மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக உள்ளது.
கேம் சேஞ்சர் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்து விட்டது. கடந்த சனிக்கிழமை மீண்டும் ஷுட்டிங் நடப்பதாக இருந்தது. ‘அன்பறிவ்’ மேற்பார்வையில் ஸ்ட்ண்ட் காட்சிகளை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ராம் சரணுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதால், 10 நாட்கள் முழுமையாக ஓய்வு தேவை என மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் ஹீரோ.
காயம் எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. தெலுங்கு படமும் சோதனை செய்கிறதே என ஷங்கர் ரொம்பவும் ‘அப்செட்’.
விஜய்யை வைத்து வாரிசு படத்தைத் தயாரித்த தில்ராஜு, கேம் சேஞ்சர் படத்தை 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.
‘ராம் சரணுக்கு முகத்தில் காயம் பட்டுள்ளதால், ஷூட்டிங் ரத்து’ என தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், சில நட்சத்திரங்கள் கால்ஷீட் கிடைக்காததால், படப்பிடிப்பை ஒத்தி வைத்துள்ளோம் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.
– பாப்பாங்குளம் பாரதி.