விரைவில் நாடு முழுவதும் ஒரே மாதிரித் தேர்தல்!?

இந்த மாதம் (செப்டம்பர், 2023) 18 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை  நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நடத்த இருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. சிறப்பு அமர்வு நடத்த வேண்டிய அவசியம் என்ன, அதன் அஜெண்டா என்ன என்று இதுவரை கூறப்படவில்லை.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்துவது குறித்துப் பரிசீலிக்க ஒரு கமிட்டி அமைக்கப்படுவதாகவும், அதற்கு முன்னாள் குடியரசுத்  தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை வகிக்கப் போவதாகவும் செய்தி வந்திருக்கிறது.

எனவே, சிறப்பு அமர்வில், ஒரே தேர்தல் என்னும் விஷயத்தை அவசரகதியில் நிறைவேற்ற பாஜக அரசு துடிக்கிறது என்ற ஊகங்கள் நிலவுகின்றன.

இதைச் செய்ய வேண்டுமானால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன்தான் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த முடியும். நடக்குமா என்பது சந்தேகம்.

நவம்பர், டிசம்பருக்குள் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற வேண்டும். இதில் ம.பி. மட்டும் பாஜகவின் கையில் இருக்கிறது.

சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிஷா, ஆந்திரா, ஹரியாணா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் 2024 மத்திக்குள் தேர்தல் நடைபெற வேண்டும்.

இவற்றில் பலவும் பாஜக அல்லது பாஜக ஆதரவுக் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள்.

எனவே, மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக கூட்டணி, 2024 மே மாதத்தில் தேர்தலை சந்திப்பதற்கு பதிலாக ஆறு மாதங்கள் முன்பாகவே தேர்தலை எதிர்கொள்ள நினைக்கலாம்.

மேற்கண்ட மாநிலங்களின் தேர்தல்களையும் சேர்த்து நடத்தினால் ஒரே வேகத்தில் இரண்டிலும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைக்கக்கூடும்.

வீட்டு எரிவாயு விலைக் குறைப்பும், இன்று வர்த்தக சிலிண்டர் விலைக் குறைப்பும் இதன் காரணமாகவே இருக்கலாம். வரும் நாட்களில் இன்னும் சில அதிரடி விலைக் குறைப்புகளும் நிகழலாம்.

அப்படி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் அது பாஜகவுக்கு சாதகமாக இருக்குமா, இல்லை ம.பி., ஹரியாணா போன்ற மாநிலங்களில் உள்ள எதிர்ப்புணர்வு மோடி அரசையும் சேர்த்து கீழே தள்ளுமா என்பது தெரியாது.

ம.பி., சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மோடி அலை மட்டும் போதாது, முதல்வர் வேட்பாளர் சரியானவராக இருக்க வேண்டும் என்றும், முதல்வர் வேட்பாளரை முடிவு செய்ய முடியாமல் தவிப்பதும் பாஜக கூட்டணி ஆடிப்போய் இருக்கிறது என்பதன் அடையாளம். INDIA கூட்டணி பாஜக வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது என்பது தெளிவாகவே தெரிகிறது.

– திராவிடன்

You might also like