பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதில் எதிர்க்கட்சிகள் இடையே குழப்பம்!

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் ஒவ்வொரு மாநிலமாக சென்று பிராந்திய கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து, இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவதில் உள்ள அவசியத்தை விளக்கமாக எடுத்துரைத்தார்.

அவரது முன் முயற்சியால் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்தன. தங்கள் அணிக்கு ‘இந்தியா’ என ஒருமித்த கருத்துடன் பெயர் சூட்டிக்கொண்டன.

‘இந்தியா’ கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜுன் மாதம் நடந்தது. கூட்டணியை வடிவமைத்த நிதிஷ்குமார், இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் ஜூலையில் நடைபெற்றது. கூட்டணிக்கு ‘பெரிய அண்ணனாக’ திகழும் காங்கிரஸ் கட்சி இந்தக் கூட்டத்தை முன் நின்று நடத்தியது.

இந்தக் கூட்டத்தில்தான் எதிர்க்கட்சிகள் அணிக்கு ‘இந்தியா’ என பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டது. அனைத்து தலைவர்களுக்கும் சோனியாகாந்தி விருந்தளித்தார்.

இந்நிலையில் ‘இந்தியா’ அணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதை முடிவு செய்ய 3-வது ஆலோசனை கூட்டம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வியாழக்கிழமை தொடங்கியது. கூட்டத்தில் 28 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டணி கட்சி தலைவர்களுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இரவு விருந்து அளித்தார். இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆர்.ஜே.டி.கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

கூட்டணியை வழிநடத்த ஒருங்கிணைப்பு குழுவை அமைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அடுத்து 2-வது இடத்தில் 326 தொகுதிகளில் ’இந்தியா’ அணி வேட்பாளர்கள் இருந்தனர். இரண்டாம் இடம் பிடித்த கட்சிகளுக்கு அந்த தொகுதிகளை வரும் மக்களவை தேர்தலில் ஒதுக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் பிரதமர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்பட வில்லை. ராகுல் காந்தி, நிதிஷ் குமார், கெஜ்ரிவால், சரத் பவார், உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி என அரை டஜன் தலைவர்கள் பிரதமர் பதவியை குறி வைத்துள்ளனர். இதனால் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

நேற்று நடந்த இரண்டாவது நாள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

நேற்றைய கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ’இந்தியா கூட்டணி கட்சிகள் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடும்- வெவ்வேறு மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு ஏற்பாடுகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையில் கூடிய விரைவில் முடிக்கப்படும்’ என்பது பிரதான தீர்மானம்.

தேர்தல் விவகாரங்களை கவனிக்க 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. உடனடியாக குழுவின் உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டனர்.

ஒருங்கிணைப்பு குழுவில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

– பி.எம்.எம்.

You might also like