பயிற்சிப்படம் குறும்படமாக மாறியது!

– தமிழ் ஸ்டுடியோ அருண்

பதினைந்து ஆண்டுகள் இயக்கப் பணிகளின் ஊடாக சினிமா எடுக்க ஆயத்தமாகி, திரைக்கதை எழுதிவிட்டேன். அதற்கு முன் பயிற்சிக்காக ஒரு படம் எடுக்கலாம் என்று நினைத்தேன். எடுத்தும் முடித்தேன்.

எனக்கு சினிமா கற்றுக்கொடுத்த என்னுடைய பேராசிரியருக்கு அனுப்பி வைத்தேன். படிக்கும் காலத்தில் ஷாட் டிவிசன் செய்ய சொல்வார்.

நான் செய்ததும் கரெக்சன் சொல்வார். முதல்முறையாக நான் ஷாட் டிவிசன் செய்தபோது அவர் சொன்னது, அருண், தமிழ் சினிமாவை பார்ப்பதை நிறுத்து என்று. ஆனால் இப்போது தமிழ் சினிமாவிலும் உலகத் தரமான ஷாட்கள் வருகிறது.

நான் சொல்வது 18 ஆண்டுகளுக்கு முன். பின்னர் படமெடுக்கும் வேலையை நிறுத்திவிட்டு முழுக்க தமிழ் ஸ்டுடியோ இயக்கப்பணிகளில் மூழ்கிவிட்டேன். அவரும் படம் எடு என்று சொல்லி ஓய்ந்துபோனார்.

இப்போது அனுப்பியவுடன் அடுத்த 30 நிமிடங்களில் அழைத்துப் பேசினார். பொறுமையா பாருங்க என்றாலும், 18 வருடத்திற்கு மேல் காத்திருக்கிறேன், இதை விட எனக்கு வேறென்ன வேலை என்று சொல்லி பார்த்துவிட்டு படம் குறித்து நிறைய பேசினார்.

பயிற்சிக்காக எடுத்தேன், நல்லா வந்தா குறும்படம், இல்லை என்றால் பயிற்சிப்படம் என்று முன்பு எழுதியிருந்தேன். அதை பேராசிரியரும் படித்திருந்தார்.

அவரது ஒற்றை வரி விமர்சனம் – “அருண் குறும்படம் சூப்பர்”.

வேறென்ன வேண்டும்!

என்னுடைய பேராசிரியருக்கு அடுத்து என்னைப் பார்த்து அருண் நீ சீக்கிரம் படமெடுக்க வேண்டும் என்று பார்க்கும்போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்த மகா கலைஞன் பாலு மகேந்திரா.

அவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தமிழ் ஸ்டுடியோ இயக்கப்பணியே முக்கியம் என மேடையிலேயே அவருக்கு பதில் சொல்லியிருக்கிறேன்.

அந்த கலைஞனுக்கு அப்படி ஒரு பதில் கொடுத்ததற்காக பின்னாளில் வருந்தியிருக்கிறேன்.

இன்று என்னுடைய குறும்படத்தைக்காட்ட அவர் இல்லையே என பெரிதும் வருந்துகிறேன். ஆனால் குறும்படத்தை அவருக்காக அற்பணிப்பு செய்திருக்கிறேன்.

இன்று காலை நான் பெரிதும் மதிக்கும், உலக சினிமாவில் அரசியல் அழகியல் இரண்டையும் பிரமாதமாக கையாளும் இயக்குநர் படத்தைப் பார்த்துவிட்டு நான் எப்படி படம் பார்வையாளருக்கு போய்ச் சேர வேண்டும் என்று நினைத்தேனோ, அப்படியாக அவரே விளக்கிப் பேசினார்.

லேயர் லேயராக அவர் பேச பேச பரவசமானது. தமிழில் கூட யாரும் இவ்வளவு விரிவாக பேசமாட்டார்கள். தமிழ் தெரியாமலேயே ஆனால் தமிழ்நாட்டின் அரசியல் கதை ஒன்றை பிரமாதமாக புரிந்துகொண்டு பேசினார்.

பரிட்சை எழுதிய மாணவன் போல படம் குறித்து இவர்கள் இருவரும் என்ன சொல்லப்போகிறார்கள் என்று ஆர்வமாக இருந்தேன். இன்று மகிழ்ச்சியான நாள்.

தமிழ்நாட்டில் எனக்கு நல்லது என்றால் உளமாற மகிழ்ச்சியடையும் பெருங்கலைஞன் பிசி ஶ்ரீராம் சார்.

சின்ன சின்ன வேலைகள் இன்னமும் பாக்கியிருப்பதால் முடித்துவிட்டு அவருக்குத்தான் முதலில் போட்டுக்காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்.

படம் எடுத்துக் கொண்டிருந்தபோதே வாழ்த்தியவர் அவர். விரைவில் அவர் கருத்தைக் கேட்க வேண்டும்.

You might also like