செந்தமிழை முறைப்படி கற்றவர்களையும், செவி வழியாக கற்றவர்களையும் செழிப்பாய் வாழ வைத்திருக்கிறது தமிழ். தமிழை ஆளும் பக்தி இலக்கிய படைப்பாளிகளையும் தமிழ் வாழ வைத்திருக்கிறது.
திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான பக்தி சித்தாந்தங்களை பாமரர்களுக்கு பாடல் வாயிலாக இன்னிசையுடன் வழங்கியவர் வாரியார் சுவாமிகள்.
வேலூர் மாவட்டத்தில் காட்பாடிக்கு அருகில் பாலாற்றாங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூரில், மல்லையதாசர் – மாதுஸ்ரீ கனகவள்ளி அம்மையாருக்கும் பிறந்த 11 பிள்ளைகளில் நான்காவதாக பிறந்தவர் வாரியார் சுவாமிகள்.
மல்லைய தாசர் இயலிலும், இசையிலும் வல்லவர். மாபெரும் புராண வல்லுநர். தந்தையை குருவாக எண்ணி, இசை, இலக்கிய இலக்கணங்களை கற்றுத் தேர்ந்த வாரியார் சுவாமிகள், 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர்.
18 வயதில் சமயசொற்பொழிவில் இமயம் தொட்டவர். ஆயிரத்திற்கு மேற்பட்ட வெண்பாக்களை வாரியார் சுவாமிகள் இயற்றியுள்ளார். தனது 19வது வயதில் அமிர்த லட்சுமியை கரம்பிடித்தார்.
23 வயதில் சென்னை யானை கவுனி தென்மடம் பிரம்ம ஸ்ரீ வரதாச்சாரியாரிடம் 4 ஆண்டுகள் வீணை பயிற்சி பெற்றார்.
தனது சங்கீத ஞானத்தால் கதாகாலேட்சபம் செய்யும்போது, திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திர பாடல்களை இன்னிசையிலும் பாடி பாமர மொழியில் சமயத்தை அளித்தார்.
‘பாமர மொழியே இவரது ஆன்மிக மொழி’. 500க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகளை வடித்துள்ள வாரியார் சுவாமிகள், குழந்தைகளுக்கு ‘தாத்தா சொன்ன குட்டிக் கதைகள்’ என்ற நூலையும் எழுதியுள்ளார்.
பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.
1993ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி வாரியார் சுவாமிகள் லண்டனுக்கு பயணமானார். நவம்பர் மாதம் இந்தியா திரும்பும்போது, விமானத்திலேயே வாரியார் சுவாமிகள் காலமானார்.
வாரியாரை சிறப்பிக்கும் வகையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
புரட்சித் தலைவருக்கு ‘பொன்மனச் செம்மல்’ என்ற பொருத்தமான பட்டத்தை வழங்கியவரும் வாரியார் சுவாமிகள்தான்.
அருள்மொழி அரசு, திருப்புகழ் ஜோதி என அழைக்கப்பட்ட வாரியார் சுவாமிகள், தனது இசையாலும், சொற்பொழிவுகளாலும் ஆற்றிய ஆன்மிகத் தொண்டு அளப்பரியது.
(முருக பக்தரான திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் (ஆகஸ்ட் 25, 1906) இன்று)
✍️ லாரன்ஸ் விஜயன்