ரஜினிகாந்தின் இமயமலை பயணம் இந்த முறை அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி சாமன்ய மக்களுக்கும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
’மலைக்கு போனோமா பாபாஜி குகையில் தியானம் செய்தோமா’ என்கிற அளவிலேயே அவரது பயணம் சுருக்கமாக இருக்கும்.
ஆனால், இந்த முறை அப்படி இல்லை. பயணத்தை முடித்துகொண்டு ரஜினி ஊர் திரும்பவில்லை. மாநிலம் மாநிலமாக சென்று அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார்.
ரஜினியின் மனதுக்குள் ஏதோ திட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது.
என்ன? என்பதைப் பார்க்கலாம்.
‘ஜெயிலர்’ பட ரிலீசுக்கு முந்தைய நாள் ரஜினிகாந்த் இமயமலைக்குச் சென்றார்.
ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமம், ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமம், பத்ரிநாத் கோவில் போன்ற இடங்களுக்கு சென்ற அவர், பாபாஜி குகையில் தியானம் செய்து தனது ஆன்மீகப் பயணத்தை நிறைவு செய்தார்
இமயமலையில் இருந்து இறங்கிய ரஜினி, அடுத்த கட்டமாக அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை ராஞ்சியில் சந்தித்து உரையாடினார். ராதாகிருஷ்ணன் கோவைக்காரர். பாஜக முன்னாள் எம்.பி.
இதனைத் தொடர்ந்து லக்னோ புறப்பட்டுச் சென்ற ரஜினி, உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலை சந்தித்தார். உ.பி மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியாவுடன் ‘ஜெயிலர்’ படத்தைப் பார்த்துள்ளார்.
இந்த சிறப்புக் காட்சியைப் பார்ப்பதற்காக ரஜினியின் மனைவி லதாவும் சென்னையிலிருந்து கிளம்பி வந்திருந்தார்.
ஜெயிலர் படத்தை உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் அமர்ந்து ரஜினி பார்ப்பதாக இருந்தது.
ஆனால், யோகி ஆதித்யநாத், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளை பார்வையிடச் சென்றிருந்தார். அன்று மாலை சற்று தாமதமாகத் திரும்பியதால் முதல்வர் யோகியால் ஜெயிலர் படத்தைப் பார்க்க முடியவில்லை.
எனினும் ரஜினியை தனது அரசு பங்களாவுக்கு வரவழைத்துப் பேசினார், யோகி. அவரது காலில் விழுந்து ரஜினி ஆசி பெற்றார். இந்த சந்திப்பின் போது லதாவும் உடன் இருந்தார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
எவரும் எதிர்பாராத வகையில் ரஜினி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவை சந்தித்தார். லக்னோவில் உள்ள அவரது வீட்டில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது,
அகிலேஷை கண்டதும் ரஜினி அவரை கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.
சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, “9 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவுடன் நட்பு ஏற்பட்டது. நாங்கள் செல்போனில் பேசிக் கொள்வோம். 5 ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்தபோது அவர் இங்கு இல்லை. அதனால் இப்போது அவரை சந்தித்தேன்” என்றார்.
பின்னர் தன் மனைவி லதாவுடன் அயோத்திக்கு சென்றுள்ளார். அங்கு ராமர் கோயில் கட்டுமான பணிகளைப் பார்வையிட்டார். மதகுருமார்களிடம் ஆசி பெற்றார்.
அரசியல் தலைவர்களுடனான ரஜினியின் இந்தத் தொடர் சந்திப்புகள், ‘மரியாதை நிமித்தமானவை’ என்று சொல்லப்படுவது, நம்பும் படியாக இல்லை.
இவர்களை சந்திக்க ஒரு மாதம் அல்லது ஒரு வாரத்துக்கு முன்பே ‘அப்பாய்மெண்ட்’ வாங்கி இருக்க வேண்டும்.
ஆக, சென்னையில் இருந்து புறப்படும் போதே ஒரு மாஸ்டர் பிளானுடன் தான் ரஜினி இமயமலை சென்றுள்ளார். எட்டு மாதங்களில் மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அரசியல் தலைவர்களை ரஜினி சந்தித்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
‘அரசியலுக்கு ஒரு போதும் வரமாட்டேன்’ என அவர் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக திட்டவட்டமாக அறிவித்தார். ஆனாலும் அவரின் ஆழ் மனதுக்குள் அரசியல் ஆசை இல்லாமல் இல்லை.
‘ஜெயிலர்’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், “எனக்கு குடிப்பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் பெரிய உயரம் எட்டி இருப்பேன் என்றார்.’’ ’இன்னும் உயரம்’ என்றால் அரசியல் என்பது, சூப்பர் ஸ்டாரை அறிந்த சின்னக் குழந்தைக்கும் தெரியும்.
இப்போது ரஜினி, குடிப்பதில்லை. அடுத்த கட்டத்துக்கு உயர்வதற்காகவே, தலைவர்களை அவர் சந்தித்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
அவர்களுடைய ஒரே கேள்வி ஜெயிலரின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு அரசியல் ஆர்வம் அவருக்குள் துளிர் விட்டிருக்கிறதா? அல்லது துளிர்விட வைத்திருக்கிறார்களா?
– பி.எம்.எம்.