ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ‘குஷி’ திரைப்பட இசை நிகழ்ச்சி!

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘குஷி’ திரைப்படத்தின் இசை நிகழ்ச்சி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.‌ நிகழ்ச்சி முழுவதும் இசை ஆர்வலர்களையும், பார்வையாளர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது.

இந்த இசை நிகழ்ச்சியில் பாடகர்கள் ஜாவேத் அலி, சித் ஸ்ரீராம், மஞ்சுஷா, சின்மயி மற்றும் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் ஆகியோர் ‘குஷி’ படத்தில் இடம்பெற்ற அழகான பாடல்களை பாடி அனைவரையும் கவர்ந்தனர்.

‘குஷி’ படத்தின் டைட்டில் பாடலுக்கு விஜய் தேவரகொண்டாவும்- சமந்தாவும் கைகோர்த்து ஒன்றாக நடித்து, நடனமாடி காண்பித்தபோது பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி ரசித்தனர்.

சிவ நிர்வானா இயக்கத்தில் உருவாகியுள்ள குஷி திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விழாவில் பேசிய இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், ”குஷி இசை நிகழ்ச்சியை நடத்த உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. மேலும் இந்த படத்திற்கு அழகான இசையை வழங்க.. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பட தயாரிப்பாளர்கள் அளித்த ஆதரவை என்னால் மறக்க இயலாது.

இந்த படத்தின் இசைக்காக 15 நாட்கள் எடுத்துக்கொண்டோம். குஷியில் காதல் உணர்வுடன் பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைக்க எனக்கு உத்வேகம் அளித்தவர் என் அன்பு மனைவி ஆயிஷா” என்று உற்சாகமாக கூறினார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் சிவ நிர்வானா, “திருமணமான தம்பதிகள், திருமணமாகாதவர்கள், வாழ்க்கையில் திருமணம் செய்துகொள்ள விரும்பாதவர்கள் என அனைவரும் ‘குஷி’ படத்தை பார்த்து தங்கள் காதல் வாழ்க்கையின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வார்கள். படத்தை விரும்பி. பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி கட்டிப்பிடித்துக் கொள்வார்கள்.

படம் முழுக்க விஜய் தேவரகொண்டா- சமந்தாவுக்கு பதிலாக, விப்லவ் -ஆராத்யாவை காண்பீர்கள். இது புது கதை என்று சொல்ல மாட்டேன். திருப்பங்கள் இருக்கும். ஆனால் அது உங்கள் இதயத்தை தொடும். எனக்கு திருமணமாகி நான்கு வருடங்களாகிறது.

என் மனைவியுடன் காதல், கோபம், சந்தோஷம், சோகம் என எல்லா நேரமும் என்னையும் அறியாமல் இந்த படத்தில் பிரதிபலித்தது. குஷி சிரிக்கவும் வைக்கும். அழவும் வைக்கும். திரையரங்கை விட்டு வெளியே வந்ததும் மீண்டும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வரும்” என்றார்.

பின்னர் படம் குறித்து விளக்கமளித்த நாயகி சமந்தா, “படப்பிடிப்பு தருணத்திலேயே இப்படத்தின் பாடல்களைக் கேட்டு ‘குஷி’ ஆல்பம் மீது காதல் கொண்டேன். பாடல்களை இங்கே நேரலையில் கேட்கும்போது செப்டம்பர் 1-ம் தேதி உங்கள் அனைவரோடும் சேர்ந்து படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

நீங்கள் அனைவரும் விரும்பும் ஒரு திரைப்படத்தை எப்போதும் உங்களுக்கு வழங்க விரும்புகிறோம். அப்படி ஒரு முயற்சியை இந்த படத்தின் மூலம் செய்துள்ளோம். நீங்கள் என் மீது காட்டும் அன்பினால் நான் ஆரோக்கியத்துடன் மீண்டு வருவேன். ‘குஷி’ பிளாக்பஸ்டர் ஹிட் என்பது உறுதி” என்றார்.

உற்சாகமாக பேச துவங்கிய நாயகன் விஜய் தேவரகொண்டா, “நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் நீங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என எந்த மொழியில் பேசினாலும்.. உங்களுக்கு மகிழ்ச்சியை பரப்ப நாங்கள் வருவோம். உங்களுக்காக ஒரு படத்தை கொடுத்து எவ்வளவு நாளாகிவிட்டது என்று நினைவில்லை.

உங்கள் அனைவருக்கும் இது ஒரு சூப்பர் ஹிட்டாக இருந்தாலும், கடந்த ஒரு மாதமாக இந்த படத்தின் பணிகள் குறித்து இயக்குநர் சிவாவிடம் தொடர்ந்து பேசி வருகிறேன்.

ஆறு வருடங்களாக இத்துறையில் இருக்கிறேன். நீங்கள் அனைவரும் என்னை மிகவும் நேசிக்கிறீர்கள். என்னுடைய வெற்றி தோல்வியில் என்னை சுற்றி எத்தனை பேர் மாறினாலும். நீங்கள் மாறவில்லை. நீங்கள் எப்போதும் என்னிடம் அன்பை காட்டி, என்னுடன் இருக்கிறீர்கள். செப்டம்பர் ஒன்றாம் தேதி உங்கள் அனைவரின் முகத்திலும் புன்னகையை காண விரும்புகிறேன்” என்று மகிழ்ச்சி பொங்கப் பேசினார்.

You might also like