பஞ்சு அருணாசலம் என்கிற பன்முகக் கலைஞன்!

“பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண்பனி தூவும் நிலவே நில்!…”

இந்த திரையிசைப் பாடல் கேட்கும்போதெல்லாம் செவிகள் தித்திக்‍கும். மனம் இயற்கையின் தொட்டிலாகி சுகமாய் கண் மூடவைக்‍கும். ஆழ்ந்து கிடக்‍கும் கவி உணர்வு, அதிர்வுகள் இல்லாத இசையமைப்பு, பாடகர் பாடகியின் குரல் வளம் லயிக்‍க வைக்‍கும்.

இந்தப் பாடலை எழுதியது யார்?.

கதை, திரைக்‍கதையாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்‍குநர் என பன்முகக்‍ கலைஞன் பஞ்சு அருணாசலம் தான்.

சிவகங்கை மாவட்டம் காரைக்‍குடி அருகே உள்ள சிறுகூடல்பட்டியில் 1941ம் ஆண்டு ஜுன் மாதம் 18ம் தேதி பிறந்த பஞ்சு அருணாசலம், பள்ளியில் படிக்‍கும் போதே பாடங்களைவிட புத்தகங்களை விரும்பிப் படிக்‍கும் புத்தகவாசி, பாடல்களை ரசிப்பதோடு, அதைப் பாடுவது என கலைகளோடு கைகோர்த்தவர்.

 பி.​யூ.சி. முடித்தவுடன் கதை எழுதும் ஆர்வத்தோடு சென்னை வந்தார். பட அதிபர் ஏ.எல். சீனிவாசன் இவரது உறவினர். அவரிடம் தனது ஆசையை சொல்ல, முதலில் நமது ஸ்டுடியோவில் வேலை பார்த்துப் பழகு, பிறகு கதை எழுதப் போகலாம் என பரணி ஸ்டுடியோவுக்‍கு பஞ்சுவை அனுப்பி வைத்தார் சீனிவாசன்.

மற்றொரு உறவினரான கவியரசு கண்ணதாசன் நடத்திய ‘தென்றல்’ பத்திரிகைக்‍குச் சென்று அங்கு பணியாற்றிக்‍ கொண்டிருந்தபோது, இவரது இலக்‍கிய ஆர்வத்தை அறிந்து கொண்ட கண்ணதாசன், தனது உதவியாளராக சேர்த்துக்‍ கொண்டார்.

கண்ணதாசன் பாடல் சொல்லும் போதெல்லாம், அதை தாளில் எழுதிக்கொள்ள வேண்டியது பஞ்சு அருணாசலத்தின் பணி. பூந்தோட்டத்தின் வாசம், வீட்டைத் தாண்டி வெளியே வீசுவது போல, பஞ்சு அருணாசலத்தின் பாடல் எழுதும் திறன் வெளிப்படத் தொடங்கியது. 1962ம் ஆண்டு வெளியான ‘சாரதா’ படத்தில் இவர் எழுதிய

“மணமகளே மருமகளே வா வா
உன் வலதுகாலை எடுத்து வைத்து வா வா”

பாடல், இன்று வரை திருமண வீடுகளில் மணப்பெண்ணுக்‍கு வரவேற்பு வாழ்த்தொலியாக இருந்து வருகிறது. மங்கலகரமான தொடக்‍கம்.

கண்ணதாசன் சொல்லச் சொல்ல, அதை தாளில் எழுதும் பணி பஞ்சு அருணாசலத்திற்கு… குற்றால அருவி போல் கொட்டும் கண்ணதாசனின் தமிழருவி, வேகமாக சொல்லும்போது அதில் குறிப்பெடுக்‍க தவறிய நிகழ்வும் நடந்திருக்‍கிறது.

‘பார்த்தால் பசி தீரும்’ படத்தில் வரும் “அன்று ஊமைப் பெண்ணல்லோ” என்ற பாடலில் இடையில் “கசடதபற வல்லினமாம்; ஙஞணநமன மெல்லினமாம்; யரலவழள இடையினமாம்” என கண்ணதாசன் கூற, குழப்பமடைந்த பஞ்சு அருணாசலம், வல்லினத்தை மெல்லினமாகவும், இடையினத்தை வல்லினமாகவும் மாற்றி குறிப்பெடுத்துக்‍ கொண்டாராம்… பாடல் பதிவும் நடந்தேறிவிட்டதாம்…

பாடலை போட்டுக்‍ கேட்ட கண்ணதாசனுக்‍கு கடும் கோபம். எனக்‍குத் தமிழ் தெரியவில்லை என மக்‍கள் நினைக்‍கமாட்டார்களா? என பஞ்சு அருணாச்சலத்தை கடிந்து கொண்டாராம்.

கவலைப்படாதீர்கள் கவிஞரே, எடிட்டிங்கில் சரி செய்து விடுகிறேன் என இயக்‍குநர் பீம்சிங் சொன்னபின்புதான் கவிஞருக்‍கு கோபம் தணிந்ததாம். இந்தச் சம்பவத்தை பஞ்சு அருணாச்சலமே ஒரு பேட்டியில் சொல்லி இருக்‍கிறார்.

“கல்யாணமாம் கல்யாணம்” என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக பரிணாம வளர்ச்சி பெற்றார் பஞ்சு அருணாசலம். படம் மிகப்பெரிய வெற்றி. தொடர்ந்து பல படங்களுக்‍கு கதை, திரைக்‍கதை, வசனம் எழுதினார்.

1976ம் ஆண்டு வெளியான ‘அன்னக்‍கிளி’ திரைப்படத்தின் மூலம், இசைஞானி என்ற இசை அறிஞனை தமிழ்த் திரை இசைக்‍கு அறிமுகப்படுத்தினார்.

பஞ்சு அருணாசலம் – இளையராஜா கூட்டணி, தமிழ்த் திரை இசையில் தனிப்பெரும்பான்மை பெற்று ரசிகர்கள் மனதில் தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது.

‘ஆறிலிருந்து 60 வரை’ படத்தில் பஞ்சு அருணாச்சலம் எழுதிய “கண்மணியே காதல் என்பது கற்பனையோ” என்ற பாடல்தான் தமிழ் திரைப்படப் பாடல்களில் மிக நீளமான பல்லவி என கூறப்படுகிறது.

ஆனால், ’மூன்றாம் பிறை’ படத்தில் “வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட” என்ற பாடல்தான் (வைரமுத்து எழுதியது) மிகவும் நீளமான பல்லவி என்று கூறுபவர்களும் உண்டு.

‘மணமகளே வா’ என்ற திரைப்படத்தில் இயக்‍குநராக அறிமுகமானார் பஞ்சு அருணாசலம்.

“பூப்போல பூப்போல பிறக்‍கும்
பால்போல பால்போல சிரிக்‍கும்”

“என்னை மறந்ததேன் தென்றலே
சென்று நீ
என் நிலை சொல்லி வா”

“ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்”

“சின்னஞ்சிறிய வண்ணப்பறவை
எண்ணத்தை சொல்லுதம்மா”

“என்னை மறந்ததேன் தென்றலே”

“என்றும் 16”

“கேளம்மா சின்னப்பொண்ணு கேளு”

“மானாப் பொறந்தா காட்டுக்‍கு ராணி”

போன்ற எண்ணற்ற பல பாடல்கள். அத்தனையும் பலா பாடல்கள்.

பெரிய வெற்றிகளை திரையுலகில் படைத்திருந்தாலும், பலரிடம் இல்லாதது அடக்‍கம்.

மறைந்த பின்னும் பஞ்சு அருணாசலம் என்ற மகா கலைஞன், அவரது திறமையாலும், அந்த திறமையை அடைகாத்து வைத்திருந்த அவரது அடக்‍கத்தாலும் என்றென்றும் நினைக்‍கப்படுகிறார்.

(பஞ்சு அருணாசலம் நினைவு நாள் (ஆகஸ்ட் 9, 2016) இன்று)

✍️ லாரன்ஸ் விஜயன்

You might also like