22 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிணைந்த ஓ.பி.எஸ், டி.டி.வி!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க​க் கோரி ​தேனியில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் இணைந்து ஆர்ப்பாட்ட​ம் நடத்தினர்.

​இதில் பேசிய டி.டி.வி.தினகரன், “ஓ.பி.எஸ் மற்றும் எங்கள் பின்னால் 90 சதவிகிதம் தொண்டர்கள் இருக்கின்றனர். கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் விபத்தில் இறந்தது, தற்கொலை செய்துகொண்டது என வழக்கில் தொடர்புடையவர்களைக் கைதுசெய்ய வேண்டும்.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் யார் என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும்.

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் மூன்று மாதங்களில் கொடநாடு குற்றவாளிகளைக் கைதுசெய்து சிறையில் அடைப்போம் எனக் கூறினார். ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகளாகிவிட்டன.

ஆனால், தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை மறந்துவிட்டார். சட்டமன்றத்தில் கொடநாடு குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் என்று கூறினார்கள். ஆனால், இன்னும் குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை.

இந்த வழக்கில் உண்மைக் குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டுமென ஓ.பி.எஸ் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அவர் எங்களை அழைக்க வேண்டும் என்று இல்லை… நாங்களாகவே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோம்.

ஓ.பி.எஸ் தொண்டர்களும், அ.ம.மு.க தொண்டர்களும் வருத்தங்களை மறந்து ஒன்றிணைந்திருக்கிறோம்.

அம்மா என்ற மையப்புள்ளியில் இருப்பவர்கள் அனைவரும் தற்போது ஒன்றிணைந்துவிட்டோம். இங்கு இருப்பவர்தான் தொண்டர்கள், அங்கு இருப்பவர்கள் குண்டர்கள்.

அவர்களுக்கு விசுவாசம் என்பது தெரியாது. நாங்கள் இருவரும் இணைந்திருப்பது பதவிக்காக அல்ல… சுயநலத்துக்காக அல்ல. ஓ.பி.எஸ் மூன்று முறை முதல்வராக இருந்தவர்.

எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சியை அவர்களிடமிருந்து மீட்பதற்காகவே நாங்கள் இருவரும் ஒன்றிணைந்திருக்கிறோம். கொடநாடு குற்றவாளிகளை இந்த அரசு உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்” என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய ஓ.பி.எஸ்​, “மூன்று மாதங்களில் கொடநாடு குற்றவாளிகளைக் கைதுசெய்வோம் என்று கூறிதான், தற்போதைய முதல்வர் ஆட்சிக்கு வந்தார். முப்பது மாதங்களில் இந்த வழக்கை அதலபாதாளத்துக்குத் தள்ளிவிட்டனர். ​

விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கும்.

கொடநாடு சம்பவம் நடைபெற்ற அன்று அங்கு மின்சாரத்தைத் துண்டித்தது யார் என்​பன போன்ற கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும். இந்த விவகாரத்தில் நீதி தாமதமானால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்” என்​றார்.

பல ஆண்டுகளாக பிரிந்திருந்த ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோர் தேனி மாவட்டத்தில் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

You might also like