எண்பத்தி எட்டாவது பிறந்தநாள் காணும் பத்மஸ்ரீ டாக்டர் சிற்பி பாலசுப்ரமணியம் பற்றி சாகித்திய அகாடமிக்காக “Sirpi Balasubramaniyam – A Reader” எனும் நூலை நான் தொகுத்தேன்.
தமிழில் இரண்டு பேருக்குத்தான் சாகித்திய அகாடமி ஆங்கிலத்தில் “ரீடர்” வெளியிட்டு இருக்கிறது. நீல பத்மநாபன் பற்றி டாக்டர் பிரேமா நந்தகுமார் தொகுத்தார்.
நான் டாக்டர் சிற்பி பற்றித் தொகுத்தேன் என்று எழுதுகிறார் கலை விமர்சகர் இந்திரன்.
மேலும், அவர் பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், “சிற்பி எழுத வந்த காலம் இந்தியா முழுவதும் பலமொழிகளில் பல பரிசோதனை முயற்சிகளுக்கு வழி பிறந்த காலம்.
மராத்தியில் மார்தேக்கர், கன்னடத்தில் கோபாலகிருஷ்ணா அடிகா, ஹிந்தியில் கஜானன் மாதவ் முக்தி போத், தமிழில் நா. பிச்சமூர்த்தி ஆகியோர் புதுக்கவிதை என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி இருந்தார்கள்.
தமிழில் 30களில், நா. பிச்சமூர்த்தி, கு.பா. ராஜகோபாலன், புதுமைப்பித்தன், க. நா சுப்ரமணியன் மரபுடைத்த கவிதைகள் செய்திருந்தார்கள்.
இந்த காலகட்டத்தில் மரபுக் கவிதையில் இசைலயமான கவிதைகளை எழுதுவதில் வல்லவராக இருந்த கவிஞர் சிற்பி நவீன கவிதை வெளிப்பாட்டுக்காக மரபுக் கவிதையை விட்டு நகர்ந்து புதுக்கவிதை வடிவத்தை கையில் எடுத்தார்.
எழுதுவது ஒரு யோகம் போலச் செய்வது எப்படி என்று சிற்பி இடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். கவிஞர் சிற்பி பற்றி பத்து நாளில் ஒரு ஆவணப்படம் காமிரா கலைஞர் அழகிய மணவாளன் உடன் இணைந்து எடுத்த அனுபவம் மறக்கமுடியாதது.
மரபுக் கவிதையின் மண் பார்த்து புதுக்கவிதையின் விண் பார்த்த கவிஞர் சிற்பிக்கு எனது இதயம் கலந்த பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பி.கு: சிற்பி முழுக்க முழுக்க சைவ உணவுக்காரர் என்பது பலருக்குத் தெரியாது. தினந்தோறும் நடக்கத் தவறாதவர் என்பதும் இந்த வயதிலும் அவரது ஆரோக்கியத்தின் ரகசியம்.