– சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பள்ளிப்பிராய அனுபவம்
“எங்கள் குக்கிராமமான ஆத்துப்பொள்ளாச்சியில், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த என்னை அதட்டிக் கூப்பிட்டார் அந்தத் திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர். எழுத்துக்கள் அச்சிட்ட ஒரு பெரிய பையையும், அதற்குள் ஒரு சிலேட்டையும் போட்டுத்தந்து, “நாளை முதல் பள்ளிக்கூடம் வந்துவிடு” என்று கட்டளையிட்டார்.
எனக்கு எண்ணும் எழுத்தும் கற்பித்த ஆசிரியப் பெருந்தகை மாரிமுத்து பிள்ளையை எப்படி மறக்க முடியும்? பள்ளியில் வைத்தது பெற்றோரல்ல; ‘தாயாகித் தந்தையுமாய் தாங்கிய தெய்வம்’ பிள்ளையவர்கள்தான்.
அந்தப் பள்ளியிலேயே ஏ.பி.சி.டி. கற்றுக்கொடுக்க வந்தவர் அழகிய சிவந்த இளைஞர் பிரட்ரிக் (மதம் மாறிய இராமசாமி செட்டியார்). பிரம்பும் கையுமாய் விளாசும் பிரட்ரிக் பெயரை உச்சரிக்கத் தெரியாத கிராம மக்களுக்கு அவர் ‘பேட்டரி’ வாத்தியார்.
“வாழ்க வாழ்க வாழ்க எங்கள்
ஜார்ஜ் மன்னர் வாழ்கவே”
என்று மன்னர் வாழ்த்துடன் தொடங்கும் பள்ளியில், இரண்டாம் உலக மகா யுத்தத்தின் சாரல்கள் தெறித்துக் கொண்டிருந்தன.
“ஏரோப்பிளேனில் வந்து குண்டு – நாமும்
ஏமாறும் சமயமும் கண்டு
போட்டோடிப் போவதும் உண்டு
கண்டாலோ ரெண்டு துண்டு”
என்று நாங்கள் பள்ளியில் பாடுவதுண்டு. போரில் பிரிட்டிஷ்காரர்கள் வென்றதும் பள்ளிச் சுவர்கள் முழுதும் ஆங்கிலத்தில் விளங்காமலே எழுத வைத்தார் பிரட்ரிக்.
திண்ணைப் பள்ளிக்கூடம் தவிர வேறு வாய்ப்பில்லாததால் பொள்ளாச்சி நகராட்சிப் பள்ளியில் சேர்க்கப்பட்ட நான் பள்ளிப் படிப்பை விரும்பாமல் ஊரைவிட்டு ஓடிப்போனேன்.
இந்த உதவாக்கரையையும் உருப்படியாக்க, கேரளத்தில் (அப்போது கொச்சி மாநிலம்) கண்டிப்புக்குப் பெயர்போன நல்லேப்பிள்ளி சாமியப்பப் பிள்ளையிடம் என்னை ஒப்படைத்தார்கள். மலையாள மொழிவழிக் கல்வியில் தமிழும் ஒரு பாடமாக இருந்தது.
கழுத்தில் மாலையாக மடித்துப் போட்ட நீண்ட துண்டும், சட்டையா ஜிப்பாவா என்று சொல்ல முடியாத காவிநிற ஷர்ட்டும் அணிந்திருந்த சாமியப்ப பிள்ளை பிரம்புகளின் நாயகராக இருந்தார். காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருக்கா விட்டால் உள்ளங்காலில் பிரம்பு நர்த்தனமாடும். இன்றும் நினைத்தால் எனக்கு சிம்ம சொப்பனம்.
வகுப்பில் அவர் கற்பித்தது எனக்கு நினைவில்லை. வாழ்க்கையில் அவர் கற்பித்ததை மறக்கமுடியாது. அவருடைய வீட்டில் தங்கி, உணவுண்டு, பள்ளிக்கு அவருடனேயே சென்று திரும்பும் எனக்குத் தராசு முள் போன்ற நேர்மையை, ஒழுக்கத்தை, சிறுமை கண்டு பொங்கும் ஆத்திரத்தைத் தம் வாழ்வில் கற்பித்தவர் அவர்.
துருப்பிடித்துக் கிடந்த என்னை நெருப்பாக இருந்து, உருக்கி வார்த்துப் பயனுள்ள கருவி சமைத்த சாமியப்பப் பிள்ளை எனக்கு சாமியும் அப்பனும் ஆவார். பள்ளியிறுதி வகுப்பு வரை அவருடன் வாழ்ந்த ஆண்டுகளில் ஒரே ஒரு முறை ‘சந்திரலேகா’ திரைப்படம் பார்க்க அன்புடன் அனுப்பினார். ஒரே ஒருமுறை பெருகிய கருணை ஊற்று அது. பள்ளிப் பருவத்தில் ஒரே ஒரு முறை சினிமா பார்த்தேன்.
திருச்சிராப்பள்ளி ஜமால்முகமது கல்லூரி 1951-ல் தொடங்கியபோது, அதன் முதல் அணி மாணவன் ஆனேன். அன்புருவான முதல்வர் சயீதையும், ஷேக்ஸ்பியர் பாடம் நடத்திய சி.எஸ்.கமலபதியையும் நினைவுகூர்கிறேன்.
எனினும் என்னைத் தமிழிலக்கிய வெள்ளத்தில் தள்ளிய அருளிறைக் கவிமணி அப்துல்கபூர் சங்கீதத் தென்றலாய்த் தமிழ் பொழிந்த பெருந்தகை. அவர்தான் என்னை எனக்கு அடையாளம் காட்டியவர். அவருக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்? தளர்ந்த முதுமையில் அவருடைய குழந்தைக் கவிதைகளை ‘அரும்பூ’ என்று தொகுத்துத் தந்ததில் ஆறுதல் பெற்றேன்.
அதே கல்லூரியில் இயற்பியல் ஆசிரியராக இருந்த எஸ்.என்.தேவநாதனைப் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் காரைக்குடியில் மின்சாரம் இல்லாத இருட்டறையில் சந்திக்கப் போனபோது “யாரது” என்றார்.
“அய்யா 1951-ல் உங்கள் மாணவனாக இருந்த பாலசுப்பிரமணியம்” என்று கும்மிருட்டில் சொல்கிறேன். “அடேய்…” என்று குதூகலமாய் அவர் சொன்னபோது, அந்த இருட்டறையில் எனக்கு மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சி. அன்றைய ஆசிரியர்கள் அப்படி ஒரு பேரன்பும் நினைவாற்றலும் கொண்டவர்கள்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1953-இல் முதுகலைத் தமிழ் கற்கச் சென்றபோது, ஆறடி உயரத்தில் அறிவுச்சுடராய் விளங்கிய அ.சிதம்பரநாதன் செட்டியாரைத் தரிசித்தேன். அவரைப்போல் ஆசிரியராக வேண்டுமென என்னை ஆசைப்பட வைத்தவர் அ.சி.செட்டியார்.
அங்கே நான் நேசித்த ஆசிரியப் பெருமக்கள் இருவர். ஒருவர் பேராசிரியப் பெருந்தகை கா.மீனாட்சிசுந்தரனார். மற்றொருவர் ‘தாமரைக் குமரி’ கவிதையால் இளைஞர் நெஞ்சை அள்ளிய கவிஞர் மு.அண்ணாமலை.
எனக்குள் இருந்த கவிதைப் பொறியை வெளிச்சமாக மாற்றியவர்
மு.அண்ணாமலை. பாரதிதாசனின் அணுக்கத் தொண்டராய் இருந்தவர். ஆஸ்கார் ஒயில்டு முதல் மாப்பசான் வரை, நச்சினார்க்கினியர் முதல் நவீன கவிஞர்கள் வரை நுண்பொருளாகச் சொல்லியவர், கைவல்ய நவநீதம் முதல் கடுகைத் துளைத்த குறள் வரை வரையாது கொடுத்த வான்மழை. மு.அண்ணாமலை எனக்கு வாய்த்த பொதிகைமலை என்றால் மிகையாகாது.
பிற்காலத்தில் என் முதல் கவிதைத் தொகுப்புக்கு அணிந்துரை கேட்டு பாரதிதாசனை நான் அணுகியபோது, “அண்ணாமலையின் மாணவனா?” என்று கேட்டு, “அப்படியானால் நீ என் பேரன்” என்று அருகில் அழைத்து என் நெற்றியில் பாவேந்தர் முத்தமும் தந்து வாழ்த்தினார். ‘எதிர்பாராத முத்தத்தை’ எனக்குத் தரக் காரணமானவர் என் ஆசிரியர் மு.அண்ணாமலை அல்லவா?
என் வாழ்வில் பேராசிரியப் பேரொளியாக நின்று நிலைத்திருப்பவர் கா.மீனாட்சி சுந்தரனார் ஆவார். முதுகலை ஆசிரிரியராக இருந்தார். முனைவர் பட்டத்துக்கும் வழிநடத்தினார்.
ஆசிரியப் பணிக்கு நான்கு தூண்கள் – புலமை, வாய்மை, தூய்மை, நேர்மை என லட்சிய வழிநின்று வாழ்ந்து காட்டியவரும் அய்யா மீனாட்சி சுந்தரனார் அவர்கள்தான். அந்தக் கற்பக நிழலில் கற்றவை எத்தனையோ.
இன்று எனக்குள் நினைவுகளாய், கனவுகளாய் ஆசிரிய மாமணிகள் நிரம்பி நிற்கிறார்கள். கண்ணீர் மல்க அந்தக் கண்கண்ட தெய்வங்களைத் தொழுது வணங்குகிறேன்.
– சுந்தரபுத்தன்