மாருதி வரைந்த பெண்கள் மகிழ்ச்சியாகவே இருந்தனர்!

மாருதி இறந்துவிட்டார்.

மாருதியின் பெண்கள்
தலைவிரி கோலமாக
வார இதழ்களின் கதைகள் நடுவே
அழுது கொண்டிருக்கிறார்கள்

நீர் அன்னங்கள் போல
கண்களில் மிதக்கும்
அந்த உருண்டை விழிகள்
இப்போது கண்ணீரில் மிதக்கின்றன

புன்னகை மாறாத
அந்த தளும்பும் கன்னங்கள்
துயரத்தில் வாடிவிட்டன

மாருதி பெண்களின் முகத்தை
வரைந்த பிறகுதான்
‘நிலவு முகம்’ என்ற புலவனின் உருவகத்திற்கு
ஒரு உருவம் கிடைத்தது

‘குடும்பப் பெண்’ என்ற
தமிழ் ஆணின் மூட்டமான கற்பனைக்கு
ஒரு சித்திரத்தை வழங்கியதே
மாருதியின் தூரிகைதான்

மாருதியின் பெண்கள்
எப்போதும் தாய்மையுடன் இருந்தார்கள்
தம் வசீகரத்தால்
ஆண்களை தாழ்வுணர்ச்சி
அடையச் செய்பவர்களாக இருந்தார்கள்

மாருதியின் பெண்கள்
‘டயட்’ டில் நம்பிக்கையற்றவற்றவர்களாக
இருந்தபோதும்
அவர்கள் ஆரோக்கியமாகவே இருந்தார்கள்
பருமனான, சற்றே உயரம் குறைந்த பெண்களையே
தமிழ் ஆண்கள் மோகிக்கிறார்கள் என
ஒருவர் எழுதியதை எங்கோ படித்தேன்
அதற்கு பழைய தமிழ்சினிமா கதாநாயகிகள் மட்டுமல்ல
மாருதியின் படங்களில் இருந்த பெண்களும்
காரணமாக இருந்திருக்க வேண்டும்

மாருதியின் பெண்களை
திருமணம் செய்துகொள்ள விரும்பியவர்கள்
பிறகு இருட்டறையில்
சமரசம் செய்து கொண்டார்கள்

எனக்கு மாருதியின் பெண்களைவிட
ஜெயராஜ்ஜின் பெண்களையே
மிகவும் பிடித்திருந்தது
அவர்களைத்தான் நான் காதலித்தேன்
அவர்களுக்காக
என் வாழ்வை பணயம் வைத்தேன்
மாருதியின் பெண்கள் சுதந்திரமற்றவர்கள் எனவும்
ஜெயராஜ்ஜின் பெண்கள் விடுதலையடைந்தவர்கள் எனவும்
என் இளம் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது

ஆனால்
வாழ்நாள் முழுக்க
என்னைப் பாதுகாத்தது என்னவோ
மாருதியின் பெண்கள்தான்

– மனுஷ்ய புத்திரன்

நன்றி: முகநூல் பதிவு

You might also like