வீரக்கனல் சுப்பிரமணிய சிவா:
வ.உ.சி.க்கு வாய்த்த மீனாட்சி அம்மாள், பாரதிக்கு வாய்த்த செல்லம்மாள் இவர்களுக்கு கிடைத்த இல்லற வாழ்வின் சிறு சுகம் கூட சுப்பிரமணிய சிவாவினுடைய மனைவி மீனாட்சிக்கு இறுதி வரை கிடைக்கவில்லை.
வ.உ.சி, பாரதி, சிவா தியாகங்களுக்கு பின்னால் இவர்களின் மனைவிமார்களின் துயரங்களை நாம் இது வரை கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லையே. உண்மையை அறிந்தால் உள்ளம் பதறும்.
வ.உ.சி. மனைவி மீனாட்சி அம்மாள் வ.உ.சி.க்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை குறைக்க வேண்டி பரலி சு. நெல்லையப்பரை உடன் அழைத்து வந்து சென்னையில் ஒவ்வொரு வக்கீலையும் சந்தித்து பேசி யாவரும் அந்த அம்மாவுக்கு ஆறுதலான வார்த்தைகள் கூற கூட தயாராக இல்லை.
அப்பீல் செய்ய வழியே இல்லை என்று கூறி பிரிட்டீசாரின் பார்வையிலிருந்து தப்பிக்கவே பார்த்தனர். போக்குவரத்து இல்லாத அந்த காலத்தில் எப்படி அலைந்திருப்பார். அவர்கள் உள்ளம் எவ்வளவு நொந்து போயிருக்கும் என்பதற்கு வ.உ.சி.யின் வாயால் புலம்பும் ஒரு வெண்பா நம்மை நெஞ்சுருக்க வைக்கிறது.
“வக்கீலாய் நின்று வழிப்பறியே செய்கின்ற திக்கிலார்”
சுப்பிரமணிய சிவா தன்னுடைய பதினைந்தாவது வயதில் பதினோறு வயதுடைய மீனாட்சி என்பவரை மணம் செய்கிறார். மனைவியுடன் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இல்லற வாழ்க்கை நடத்துகிறார். 1908 ம் ஆண்டு சுப்பிரமணிய சிவா வ.உ.சி.யின் கைக்கருவியாக விளங்கினார் என்று பின்ஹேவால் குற்றம் சாட்டப்பட்டார்.
திருநெல்வேலியில் அரசு நிந்தனை பேச்சுக்காக இருபது வருடமும், சிவாவிற்கு உணவும் இடமும் அளித்து பேச உதவியதற்கு இருபது வருடமும் இரட்டை ஆயுள் தண்டனை ஏக காலத்தில் அனுபவிக்க வ.உ.சி.க்கு தண்டனை அளிக்கப்பட்டது. முதல் குற்றவாளியான சிவாவிற்கு பத்தாண்டுகள் தீவாந்தர தண்டனை அளிக்கப் பட்டது.
சிவாவினுடைய சிறை வாழ்க்கை காலங்களில் மனைவி மீனாட்சி அம்மாள் தனது இளமையை தொலைத்து விட்டு தேடித் தேடி அலைந்துள்ளார். கடுமையான ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு வாழ்க்கை ஜீவனம் கழிக்கவே போராடியுள்ளார்.
சிவாவும் நான் சன்யாசி. வேதாந்த விசாரணை செய்து வருபவன் என்று கூறிக் கொண்டு தேச பக்தர்களுடனும், சன்யாசிகளுடனும் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தவர்.
தனது மனைவியை அனேக இடங்களில் அனேக தடவை ஏமாற்றி நழுவி விட மீனாட்சி அம்மையாரும் தொடர்ந்து கணவனை விடாமல் தேடி பட்ட கஷ்டங்கள் ஆச்சரியத்தையும் அனுதாபத்தையும் வரவழைக்கிறது.
1908 முதல் 1912 வரை திருச்சி சிறையில் சிறைவாசம். அச்சமயத்தில் சிறையினுள்ளே சமய சிந்தனைகள் ஊடுருவி ”சச்சிதானந்த சிவம்” என்ற நூலினை எழுதினார். அந்த புத்தகத்தினை தனது மனைவிக்கு சமர்ப்பணம் செய்து, தனது மனைவியின் வறுமையைப் போக்க எல்லோரும் இந்த புத்தகத்தை வாங்கும்படியும் இதன் மூலம் கிடைக்கும் சிறு வருமானம் எனது மனைவியின் வறுமையைப் போக்கும் என்ற வண்ணத்தில் கீழ்க் கண்டவாறு பதிவு செய்கிறார்.
“மகான் இயேசு கிறிஸ்துவின் பிரதம சீடர் பீட்டர் என்பவர் ஒரு சர்ச் வாயிலில்… காலத்தில் அங்கு உட்கார்ந்திருந்த இரண்டு கண்களுமில்லாத ஒரு பிறவி நொண்டி பிச்சை கேட்க, அவர் “வெள்ளியும் தங்கமும் தர என்னிடம் ஏதும் இல்லை. ஆனால் என்னையே உனக்குத் தருகின்றேன் என்று கூறி அவனை கைப்பிடித்து தூக்கிவிட அவனுக்கு இரண்டு கால்களும் யாவருக்குமிருப்பதுபோல் அவன் பரம சந்தோசமடைந்து குதித்துக்கொண்டு சென்றான்” என்று பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே மாதிரியாக எனது மனைவி சிறைச்சாலையில் கண்டு பேசிய காலத்தில் தான் தினமும் ஏழ்மைத்தனத்தால் மிகவும் கஷ்டப்படுகிறேன்.
எனது கஷ்ட நிவர்த்திக்கு ஓர் உபாயம் செய்து கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ள நானும், “என்னிடம் வெள்ளி தங்கம் இல்லை” என்று கூறி, எனது சற்றே முகத்தினின்றும் கேட்க அறிந்து அனுபவங்களை ஒரு புஸ்தமாக எழுதி அவளது துக்க நிவர்த்தியின் பொருட்டு அளிக்கின்றேன். தான் எழுதிய நூல் எனது மனைவியின் வறுமையைப் போக்கும் என்று கசிந்துருகி பரிவு காட்டி சமர்ப்பணம் செய்துள்ளார். இந்த செயல் ஒன்றே சிவாவின் மனைவிக்கு பெரும் ஆறுதலாக இருந்திருக்கக் கூடும்.
இயேசுவின் சீடர் பீட்டர் ஆசிர்வாதத்தால் பிறவி நொண்டி ஊனம் முற்றிலும் நீங்கப் பெற்று குதித்தோடிய அந்த அனுபவம் மீனாட்சிக்கு வாய்க்கவில்லையென்றாலும், தமது வறுமையைப் போக்க கணவர் நூல் எழுதியது பெரும் ஆறுதலாக இருந்திருக்கிறது.
சுப்பிரமணிய சிவா தேச பக்தியின் மேலீட்டால் சிறைவாசம் செய்ய நேர்ந்த காலத்தில் மீனாட்சி அம்மையார் பட்ட சிரமங்கள் சொல்லி மாளாது.
பதினாறு ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இரண்டு ஆண்டுகளே இல்லற வாழ்வை நடத்தி தமது 27 ம் அகவையில் மீனாட்சி அம்மாள் ஆறு மாதங்களுக்கு மேலாக பெரும் நோயால் அவதிப்பட்டு இறந்து போகிறார்.
ஒவ்வொரு தியாகிகளின் வாழ்க்கையில் மனைவியர்கள் பட்ட துயரங்களையும் ஆவணப்படுத்த வேண்டும். தயவுசெய்து இக்கால எந்த அரசியல் தியாகிகளுடன் ஒப்பிட்டு விடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
- ஃபேஸ்புக்கில் ஆய்வாளர் ரெங்கையா முருகன் எழுதிய பதிவு.