அஃக் எனும் அபூர்வக் கலை இலக்கிய இதழ்!

– இந்திரன் எழுதிய நெகிழ்ச்சிப் பதிவு

அஃக் எனும் அபூர்வ கலை இலக்கிய இதழை நடத்திய பரந்தாமனை ஏன் மறந்தார்கள் இலக்கியவாதிகள்?

பிரமிள், வெங்கட் சுவாமிநாதன், ஞானக் கூத்தன், கே எம் கோபால் என்று அவர் தூக்கி விட்ட எழுத்தாளர்களும் ஓவியவர்களும் ஏராளம். இருந்தாலும் ஏன் மறந்தார்கள்? ஆத்மா நாம் பெயரில் ஒரு விருது உண்டு.

ஜீ.நாகராஜன் பற்றி பேச ஆள் உண்டு.

குழு மனப்பான்மை இல்லாது இயங்கிய பரந்தாமனிடம்?

1. சாகும்போது பணம் இல்லை.
2. அவர் எந்த ஜாதி சங்கத்தையும் சார்ந்தவர் இல்லை.
3. எந்த இலக்கிய சன்னிதானத்துக்கும் ஜால்ரா அடிக்க வில்லை.
4. தனித்துவமான கலை வெளிப்பாடு குறித்து யாரிடமும் சமரசம் செய்து கொள்ளவில்லை.

5. எந்த கட்சிக்கும் சுவரொட்டி ஒட்டவில்லை.
6. (1970 ஜூனிலிருந்து 1980 ஜூன் வரை) இலக்கிய இதழை நடத்திய பரந்தாமன் என்கிற சமரசமற்ற ஒரு தனிமனித பட்டாளமாய் கலை இலக்கிய உலகில் இயங்கிய சிந்தனை காம்பீர்யம் கொண்ட ஒரு கலைஞன்.

தன் சொந்த வீட்டை விற்று சிற்றிதழ் நடத்தியவர். இன்று இவரை நித்துப் பார்க்க யாரும் இல்லை என்பதுதான் தமிழ் இலக்கிய உலகம். இதோ இவரது எழுத்தைக் கவனியுங்கள்.

“ஆக மொத்தம் பத்தாண்டுகள். ஒரு Decade என்றாலும் நான் நினைத்த சர்வ நிச்சயமான சோபையுடன் அந்த மோகனமான முதல் “அஃக்” இன்னும் வெளிவரவே இல்லை.

இந்த பத்தாண்டுகளும் மனதாலும், சரீரத்தாலும் சதா சர்வகாலமும் இதையே நினைத்து இதற்காகவே அலைந்து திரிந்து இருக்கிறேன்.

ஒரு பைத்தியக்காரனைப் போல என் கையில் இருந்த கடைசி சல்லியையும் இதற்காகவே செலவு செய்து விட்டு தற்சமயம் நான்தான் எனக்கு மீதியாகவிருக்கிறேன்.

நான் தூக்க நினைத்தது கோவர்த்தன கிரியை. குடிக்க நினைத்தது பாற்கடலை. இப்படி நினைக்கவே ஒரு மனோ தைரியம் வேண்டும். இது என் சுபாவம் எனக்களித்த சாகாவரம்.”

அஃக் பரந்தாமன் எழுதிய “கடிவாளங்களோடு வருகிறார்கள்” இறுதியில் சித்தபிரமை பிடித்து இறந்தார்.

இவரோடு நெருங்கி பழகியவர்களை இன்று கேட்டால் பிடிவாதக்காரன், பைத்தியக்காரன், உலகத்தைப் புரிந்து கொள்ளாதவன் என்று என்னிடம் சொல்கிறார்களே ஒழிய அவனுக்குள் வாழ்ந்த கலைஞனைப் பற்றி யாரும் என்னிடம் பேசுவதில்லை.

ஆனால், கடைசி வரை கலைஞனாகவே இருந்தார். கலைஞனுக்கு என்று ஒரு மூலை தமிழ்ச் சமூகத்தில் இல்லை என்பதின் ரத்த சாட்சி சேலத்தைச் சேர்ந்த அஃக் பரந்தாமன்.

பின் குறிப்பு :

இவர் உயிரோடு இருந்தபோது நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக இவரது மொத்த அஃ க் இதழ்களையும் ஒரு நூலாக வெளியிட்டார் ஜென்டில்மேன் பப்ளிஷர் சந்தியா நடராஜன்.

(இதற்காக பிறகு ஏராளமான துன்பங்களை அனுபவித்தார் என்பது வேறு கதை)

You might also like