டாக்டர் எம். கதிரவன் மீரான்
சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் மீரானின் மகன் கதிரவன் மீரான், ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னா பல்கலைக்கழகம் தட்பவெப்பத்தை நிர்ணயிக்கும் புல்வெளி பற்றிய ஆய்வுக்காக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதுபற்றி அவரது தந்தை எழுதியுள்ள பதிவு.
“புல்லினும் கீழாய் என்னை மதிக்கிறான்” என்கிற வரியை எங்கேயாவது படித்திருப்போம், அல்லது யார் சொல்லியாவது கேட்டிருப்போம். காரணம் புல்லை நாம் மிகவும் கீழாக வைத்திருக்கிறோம்.
ஆடு, மாடு மேய்வதற்கு, பூங்காங்களில் இதமாக நடந்து செல்வதற்கு பயன்படுவதை என்பதை தவிர அதனால் வேறொன்றும் பயனில்லை என்றே கருதிக் கொண்டிருக்கிறோம்.
நமது முக்கிய உணவான நெல்லும் ஒரு புல்தான் என்று நம்மில் பலருக்குத் தெரியாது.
இந்த புல்தான் வருங்காலத்தில் உலகத்தின் தட்பவெப்பத்தை தீர்மானிக்கப் போகிறது என்பது தற்போதைய கண்டுபிடிப்பு.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள விவசாய நிலங்களில் 75 சதவிகிதம் புல்வெளிகள்தான்.
கால்நடை வளர்ப்பு, அதன் மூலம் பால் தொழில் பெருக்கம் இவைகள் ஐரோப்பிய நாடுகளின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன் விவசாயப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கும் வகிக்கிறது.
சமீபகாலமாக இந்த புல்வெளிகளில் ஒரு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அதாவது புல்வெளிகள் தங்கள் சுவாசத்தில் ஆக்சிஜனையும், கார்பன் டை ஆக்சைடையும் சம அளவில் வெளியிடும். இதுதான் இயல்பு, இதுதான் இயற்கை விதி.
ஆனால் சமீப காலமாக புல்வெளிகள் அதிகமான கார்பனை வெளியிடுகிறது. அது புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
ஏன் புல்வெளிகள் அதிகமான கார்பனை வெளியிடுகிறது என்றால் உலக நாடுகளின் தொழிற்சாலை வெளியிடும் புகை, வாகனப் புகை, மனிதனால் செயற்கையாக வெளிப்படுத்தப்படும் புகைகள், ஐரோப்பிய தேசத்தில் புல்வெளிகளை பாதிக்கிறது.
புல்வெளிகள் எந்த அளவிற்கு கார்பனை வெளியிடுகிறது.
அதனை தடுப்பது எப்படி, வெப்பமயமாதலில் இருந்து உலகைக் காப்பது எப்படி என்பது குறித்து ஆராய்ச்சி செய்து முடிவை தெரிவிக்க ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் உள்ள இயற்கை விஞ்ஞான பல்கலைகழகம் ஒரு ஆராய்ச்சியாளரை நியமித்திருக்கிறது.
இது குறித்து ஆஸ்திரியா நாட்டு அரசு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கிறது. நியமிக்கப்பட்டுள்ள அந்த ஆராய்ச்சியாளர் ஒரு தமிழர். பெயர் – டாக்டர் எம்.கதிரவன் மீரான்.